கூடவே இருந்து.. மகிழ்ந்த உள்ளங்கள்.. உதயநிதி கைதை ரசித்த அந்த தலைகள்.. கடுப்பான அறிவாலயம்
சென்னை: எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு அன்றைய தினமே காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் மாநில அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சென்னை நீலாங்கரை முதல் தஞ்சாவூர் செங்கிப்பட்டி வரை தொண்டர்கள் திரண்டு நடத்திய போராட்டங்களும், வீதிக்கு வந்து காட்டிய எதிர்ப்பும் உதயநிதிக்கு ஒரு மாஸ் தலைவர் பிம்பத்தைக் கொடுத்திருப்பது மறுக்க முடியாத உண்மை.
ஆனால், வீதியில் வெடித்த இந்த மாபெரும் ஆதரவு அலைக்கு பின்னணியில், திமுகவின் அறிவாலய வட்டாரங்களில் வேறொரு அரசியல் புகைச்சலுமண் அரங்கேறி வருவதாக கட்சிக்கு நெருக்கமான மற்றும் மூத்த பத்திரிகையாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உட்கட்சித் தலைவர்களின் ரகசியக் கணக்குகள்
கட்சியின் முக்கியத் தளபதிகளும், வாய்ப்பிழந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் உதயநிதிக்கு ஆதரவாகக் களத்தில் நின்று போராடிய அதே வேளையில், கட்சிக்கு ஆதரவாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட சாரார் இந்த கைதை ரகசியமாகக் கொண்டாடுவதாகக் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் சீட் கிடைக்காத அதிருப்தியாளர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உதயநிதியின் அதிரடி வளர்ச்சியால் ஓரங்கட்டப்பட்டதாகக் கருதப்படும் நிர்வாகிகள் சிலர், இந்த சட்டரீதியான நெருக்கடியைக் கண்டு உள்ளுக்குள் மகிழ்ச்சியடைவதாக அறிவாலய விவரமறிந்த வட்டாரங்கள் கசிகின்றன. அதே சமயம் தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் சிலரும் கூட இந்த கைதை நியாயப்படுத்தி இருக்கிறார்களாம்.
உதயநிதியின் வருகைக்குப் பிறகு, கட்சியில் இளைஞரணியினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதும், மூத்த நிர்வாகிகளின் செல்வாக்கு குறைந்ததும் கட்சியின் மூத்த தலைவர்களிடையே தொடர் மனக்கசப்பை உருவாக்கியிருந்தது.
கட்சி முழுமையாக உதயநிதியின் கட்டுப்பாட்டின் கீழ் செல்வதை விரும்பாத சிலர், இந்த கைது நடவடிக்கை அவரது அரசியல் வேகத்திற்குச் சற்று வேகம் குறைக்கும் கடிவாளமாக இருக்கும் என ரகசியமாகக் கணக்குப் போடுகின்றனர்.
தேர்தல் வாய்ப்பிழந்தவர்களின் 'விசுவாச வெளிப்பாடு'
அதேநேரத்தில், சீட் மறுக்கப்பட்ட நிலையிலும் எஸ்.ஆர்.ராஜா, ஐ.பரந்தாமன், சி.வி.எம்.பி. எழிலரசன் போன்ற தலைவர்கள் உதயநிதியுடன் நெருக்கமாக நின்று போராடியது கட்சியின் தலைமைக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், இதிலும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன... வாய்ப்பு மறுக்கப்பட்டபோதிலும் இவர்கள் காட்டிய இந்த தீவிர விசுவாசம், வரும் காலங்களில் கட்சியில் மீண்டும் செல்வாக்கைப் பெறுவதற்கும், இளைஞரணித் தலைவரின் நம்பிக்கைக்குரிய வட்டாரத்திற்குள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் நடத்தப்பட்ட ஒரு வியூகம் என்றும் கட்சிக்குள் சிலர் முணுமுணுக்கின்றனர்.
தலைவரின் அறிக்கை உணர்த்தும் உண்மை
கைது நடவடிக்கையைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட காரசாரமான அறிக்கையில், ஆட்சி அதிகாரத்தின் ஆணவத்தைக் கடுமையாகச் சாடியிருந்தார். ஆனால், அந்த அறிக்கைக்குப் பின்னணியில், தொண்டர்களை உடனடியாகத் தெருவில் இறக்கிப் போராட வைத்ததன் மூலம், உட்கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் மாற்று முகாமினருக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்லும் முயற்சியும் அடங்கியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெளிப்பார்வைக்கு திமுக உதயநிதிக்குப் பின்னால் ஒரே பாறையாகத் திரண்டு நிற்பது போலத் தோன்றினாலும், கட்சியின் உள்ளே நிலவும் இந்த அதிகாரப் போட்டியும், அதிருப்தி முகாம்களின் ரகசிய மகிழ்ச்சியும் வரும் நாட்களில் திமுகவின் உட்கட்சி அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications
