திருமலா பால் மேலாளர் தற்கொலை விவகாரம்.. போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
சென்னை: திருமலா பால் நிறுவன மேலாளர் பணமோசடி விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பண மோசடி புகார் தொடர்பாக கொளத்தூர் காவல் துணை ஆணையரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசத்தில், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் பொல்லினேனி (37), சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகர், முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தார். அவர், சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

திருமலா பால் நிறுவனம் வரவு - செலவு கணக்குகளை அண்மையில் தணிக்கை செய்தபோது, ரூ.40 கோடிக்கு முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. நவீன் அந்தப் பணத்தை கையாடல் செய்ததாகவும், பணத்தை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பரின் வங்கிக் கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் சட்ட மேலாளர் தமிமுன் அன்சாரி சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப் பிரிவில் கடந்த மாதம் 24 ஆம் தேதியும், கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனிடம் கடந்த மாதம் 25 ஆம் தேதியும் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, மாதவரம் குற்றப் பிரிவுக்கு துணை ஆணையர் பாண்டியராஜன் பரிந்துரை செய்துள்ளார்.
இதற்கிடையே முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 7 ஆம் தேதி நவீன் பொல்லினேனி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்றைய (ஜூலை 11) தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடும் மன உளைச்சலில் இருந்த நவீன், தனது வீட்டின் அருகே உள்ள ஒரு குடிசையில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த புழல் போலீசார், அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நவீன், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது குடும்பத்தினருக்கும், பணியாற்றிய நிறுவன உயர் அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கடிதத்தை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தக் கடிதத்தில், "எனது தவறை நான் உணர்ந்துவிட்டேன். ஏற்கெனவே கையாடல் செய்த பணத்தில், ரூ.5 கோடியை அந்த நிறுவனத்துக்கு திரும்பக் கொடுத்துவிட்டேன். எனது தற்கொலைக்கு நிறுவனத்தில் பணிபுரியும் இரு உயர் அதிகாரிகளே காரணம். அவர்கள் இருவரும் நான் கையாடல் செய்த பணத்தில் தங்களுக்கு பங்கு கேட்டு மிரட்டினர்.
அதோடு தங்களுக்கு பணம் கொடுக்கவில்லையென்றால், காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்க வைப்போம் என மிரட்டினர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் நான் தற்கொலை முடிவு எடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் தொடர்பாகவும், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தனியார் பால் நிறுவனத்திடமிருந்து எப்போது புகார் வரப்பெற்றது என்பது குறித்து கொளத்தூர் காவல்துறை துணை ஆணையரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும், திருமலா பால் நிறுவன மேலாளர் பணமோசடி விவகாரத்தில் தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக மாதாவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications