அங்க போனா காய்கறி வியாபாரி.. இங்க வந்தா டீ மாஸ்டர்.. வேட்பாளர்களின் அலப்பறை.. தாங்க முடியலடா சாமி!
சென்னை: இந்த தேர்தலில் வேட்பாளர்களின் அலைப்பறை தாங்க முடியலடா சாமி என்று சொல்லும் அளவுக்கு அதகள பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஒரு சில வேட்பாளர்கள்.
பாட்டு பாடுவது, டான்ஸ் ஆடுவது, டீ ஆற்றுவது, தோசை சுடுவது என கற்ற மொத்த வித்தையையும் பிரசாரத்தில் இறக்கி வருகின்றனர் அரசியல் கட்சியினர்.
வேட்பாளர்களின் இந்த அலப்பறைகள் அவர்களுக்கு வாக்குகளை பெற்று தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வேட்பாளர்களின் அதகள பிரசாரம்
ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சியினர் மக்களை கவருவதற்காக வித்தியாசமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது வழக்கம். இந்த தேர்தலில் ஐயோ.. இந்த வேட்பாளர்களின் அலைப்பறை தாங்க முடியலடா சாமி என்று சொல்லும் அளவுக்கு அதகள பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஒரு சில வேட்பாளர்கள். காரைத் தவிர வேறு எதிலும் பயணம் செய்யாத அரசியல் தலைவர்கள் தற்போது இயல்பாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக பஸ்களில் மக்களோடு மக்களாக பயணம் செய்கின்றனர்.

காய்கறி வியாபாரி, டீ மாஸ்டர்
அரசியலுக்கு வந்தபிறகு நடப்பதை சுத்தமாக மறந்து விட்ட சில தலைவர்கள் ஒரு கி.மீ., இரண்டு கி.மீ என மக்களோடு, மக்களாக நடந்து சென்று வாக்கு சேகரிக்கின்றனர். வாக்கு சேகரிக்கும்போது அந்த இடத்தில் உள்ள ஒரு டீக்கடையை கண்டால் போதும், உடனடியாக அப்படியே டீ மாஸ்டராக மாறி டீ ஆத்த தொடங்கி விடுகின்றனர். காய்கறி கடைக்கு சென்றால் அங்குள்ள வியாபாரிகளை ஒதுங்க சொல்லி விட்டு காய்கறி விற்க ஆரம்பித்து வியாபாரியாக மாறி விடுகின்றனர்.

மொத்த வித்தயையும் இறக்குகின்றனர்
வெற்றி பெற்றுவிட்டால் தொகுதி பக்கமே குறிப்பாக கிராமங்கள் பக்கமே வராத அரசியல்வாதிகள் தற்போது கிராமங்களில் வயல்வெளியை கண்டால் உடனடியாக வேட்டியை மடித்துக் கட்டி மண்வெட்டியை எடுத்து வெட்டவும், நாற்று நடவும் ஆரம்பித்து விடுகின்றனர். வடை சுடுவது, தோசை சுடுவது, புரோட்டா போடுவது, பீடி சுற்றுவது, சிலம்பம் ஆடுவது, பாட்டு பாடுவது, டான்ஸ் ஆடுவது, தண்ணீரில் குதித்து நீச்சலடிப்பது, அதிசயமாக குழந்தையை கொஞ்சுவது என கற்ற மொத்த வித்தையையும் பிரசாரத்தில் இறக்கி வருகின்றனர் அரசியல் கட்சியினர்.

அலப்பறை தாங்க முடியவில்லை
அதிலும் ஒரு வேட்பாளர் பிரசாரத்தின்போது ஒரு வீட்டின் துணிகளை துவைத்து காயவும் போட்டார். இவ்வாறு அரசியல் கட்சியினரின் அலப்பறைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது. பழைய காலங்களில் தேர்தலின்போது வேட்பாளர்கள் தங்கள் கட்சிகளின் நிறைகளை, திட்டங்களை சொல்லி வாக்கு கேட்பார்கள். ஆனால் இப்போது பேசினால் மக்களிடம் எடுபடாது என்று தெரிந்து இதுபோன்ற வித்தியாசமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் வேட்பாளர்கள். வேட்பாளர்களின் இந்த அலப்பறைகள் அவர்களுக்கு வாக்குகளை பெற்று தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.