புஸ்ஸி ஆனந்துக்கு பறிபோகும் பவர்.. சாட்டையை சுழற்றும் விஜய்! தவெகவில் மாஸாக எஸ்ஏசி.. என்ன நடந்தது?
சென்னை: நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் அவசர சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக கட்சிக்குள் அதிருப்தி குரல்கள் என ஆரம்பித்துள்ளது. புஸ்ஸி ஆனந்தின் பதவியை பறிக்க வேண்டும் என சில நிர்வாகிகள் கூறிவரும் நிலையில் அது தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. மேலும் விஜயின் தந்தையான எஸ்ஏ சந்திரசேகர் கட்சியின் ஆலோசகராகவோ அல்லது அவை தலைவராகவும் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இன்று மாமல்லபுரத்தில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்புப் பொதுக்குழுக்கூட்டம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. தலைவர் விஜய் நேரடியாக தலைமை தாங்கி நடத்தும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தல், மற்றும் கூட்டணி நிலைப்பாடு என பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
ஆனால், இந்தக் கூட்டத்துக்கு முன்னதாகவே தவெக வட்டாரத்தில் அதிருப்தி குரல்கள் வெளியாகி அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கட்சியின் உயர்மட்ட தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தவெக உட்கட்சி மோதல்
இதுகுறித்து விஜய் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், புஸ்ஸி ஆனந்தின் அதிகாரப்பூர்வ பொறுப்புகள் குறைக்கப்படலாம் எனவும் கிசுகிசுக்கள் எழுந்துள்ளன. மேலும், விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கட்சியின் ஆலோசகராக மீண்டும் வரலாம் என்ற பேச்சுகளும் வலுப்பெற்று வருகின்றன. செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் விஜய் மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட பேரதிர்ச்சி இன்னும் கட்சி தலைவர் விஜயின் மனதைக் குலைத்துக் கொண்டிருக்கிறது. அந்த நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது அவருக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது.
புஸ்ஸி ஆனந்த் சர்ச்சை
அதற்குப் பிறகு விஜய் பொதுவாக எந்த அரசியல் நிகழ்ச்சியிலும் தென்படவில்லை. அந்தச் சம்பவத்திற்கான விசாரணை தற்போது சிபிஐ வசம் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்தச் சூழலில், தவெக நிர்வாகிகள் சிலர் தங்கள் பொறுப்பைச் சரியாக நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் கட்சிக்குள் எழுந்துள்ளது. மாநில தலைமை குறிப்பாக புஸ்ஸி ஆனந்த் வெளிப்படையாக செயல்படவில்லை என்று ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செயல்பாடுகள் மிகப்பெரிய அதிருப்தியை கிளப்பியிருக்கும் நிலையில், கரூர் சம்பவம் முதல் இன்று வரை அவர் அவ்விவகாரத்தை முறையாக எதிர்கொள்ளவில்லை, சவால்களை எதிர்கொள்ளாமல் பின்வாங்கி இருப்பதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
கரூர் விபத்து தாக்கம்
சமூக ஊடகங்களில் "தளபதி உடன் தீய சக்தி" எனக் குறிப்பிட்டு புஸ்ஸி ஆனந்தை விமர்சிக்கும் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. கட்சியின் வர்ச்சுவல் வாரியர்ஸ், இளைஞர் தொண்டர்கள் வெளிப்படையாகவே பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமல், கட்சி நம்பிக்கையை இழக்கச் செய்தவர் புஸ்ஸி ஆனந்த் எனக் கூறி வருகிறார்கள். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுகிறது.
தவெக தலைமை மாற்றம்
கட்சி இக்கட்டான நிலையில் இருக்கும் போது புஸ்ஸி ஆனந்த் பொதுச் செயலாளராக செயல்படவில்லை என நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர். அதேசமயம், பலர் விஜக்கு நேரடியாக கடிதங்கள் எழுதித் தங்கள் மனக்கசப்பை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலைமையில், மாமல்லபுரத்தில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்புப் பொதுக்குழுக்கூட்டத்துக்கு பிறகு, புஸ்ஸி ஆனந்த் பதவியில் தொடர்வாரா? கட்சியில் பெரிய மாற்றம் வருமா? விடை காணக் கூடிய நிகழ்வுகள் நடக்கும் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.












Click it and Unblock the Notifications