உலக யோகா தினம்.. அண்ணாமலை பல்கலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு..கடலூரில் கறுப்புக்கொடி
சென்னை: சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். கடலூர் செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக் கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் வருகையை முன்னிட்டு கடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மாணவர்களுடன் யோகா பயிற்சி செய்தார். இதற்காக நேற்றிரவு சிதம்பரம் வந்த ஆளுநர் ரவி அண்ணாமலைப்பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

அதிகாலையிலேயே தனது மனைவியோடு யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார் ஆளுநர் ஆர்.என். ரவி. இரண்டு மணி நேரம் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து வடலூர் வள்ளலார் கோவிலுக்கு செல்கிறார் ஆளுநர் ரவி. கருங்குழி, மேட்டுக்குப்பம் கிராமங்களுக்கு சென்று வள்ளலார் கோவிலில் வழிபாடு நடத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
சிதம்பரத்தில் இருந்து கடலூர் வழியே திரும்பிச் செல்லும் அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கறுப்புக்கொடி காட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி மதிமுக கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்ட விசிக, மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் திட்டமிட்டுள்ளதால் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications