சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

’திராவிட மாடல்’ ஆட்சி! - வெறும் வார்த்தையா? அல்லது மாற்றமா? - கள நிலவரம் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: முதன்முதலாக முதலமைச்சர் ஸ்டாலின் 'திராவிட மாடல்' என்ற சொல்லைப் பயன்படுத்திய போது பலருக்கும் பல கேள்விகள் இருந்தன. 'இந்த அரசு ஸ்டாலின் அரசு அல்ல; திராவிட மாடல் அரசு' என்று அவர் மீண்டும் மீண்டும் சொல்கிறார். அப்படி என்றால் கடந்த ஒன்றரை ஆண்டுக்கால ஆட்சியில் 'திராவிட மாடல்' என்பது எப்படியான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது? சில துறைசார்ந்த நபர்கள் தங்களின் கருத்து பதிவு செய்யக் கேட்டோம். அவர்கள் அளித்துள்ள பதில் பல சந்தேகங்களுக்கு விடை அளித்துள்ளது.

அபூர்வா ஐ.ஏ.எஸ்.ஸின் தாயார் காலமானார்! தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!அபூர்வா ஐ.ஏ.எஸ்.ஸின் தாயார் காலமானார்! தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

 வேளாண்மைத் துறையில் ‘திராவிட மாடல்’

வேளாண்மைத் துறையில் ‘திராவிட மாடல்’


காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த அருண், " கடந்த 10 ஆண்டுக்காலமாக விளைபொருட்களுக்கான நிர்ணயக் கோரிக்கையை வைத்து வருகிறோம். விவசாய பொருட்களின் விலை நிர்ணயம் என்பதை ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் மட்டுமே இருக்கக் கூடாது. குறைந்த பட்ச ஆதார விலைக்கு மேலாகச் சற்று கூடுதல் விலை மாநில அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதை முதலில் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. அதற்கு எங்கள் சங்கத்தின் சார்பாக முதல் பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேபோல திமுக அரசு வேளாண்மைக்காகவே தனி நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார்கள். அதில் இன்றைக்கு டெல்டா பகுதிகளில் விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் பெரும்பாலான தொழிலாளிகளின் சராசரி வயது 50 ஆக உள்ளது. ஆகவே அதை மனதில் கொண்டு இளைஞர்களை இந்தத் தொழிலில் ஈடுபட வைப்பதற்கான இத்திட்டங்கள் உருவாக்க வேண்டும் என அரசிடம் விருப்பம் தெரிவித்தோம்.

வேளாண் உற்பத்தியாளர்களுக்கான பங்களிப்பு உறுதி செய்யக் கேட்டிருந்தோம். அடுத்து எங்கே எல்லாம் ஆறுகள், குளங்கள் என பாசனப்பகுதிகள் உள்ளதோ அந்தப் பகுதிகளைக் கணக்கில் கொண்டு உலக வங்கியின் திட்டத்தின் மூலம் இந்த நீர் மற்றும் நிலப் பகுதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்த முயற்சி செய்ய வலியுறுத்தினோம்.

கரும்பு போன்ற பணப்பயிர் செய்யும் விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டி, அரசு ஏறக்குறைய ஒரு டன் கரும்புக்கு 750ரூபாய் வரை தங்களின் பங்களிப்பாகக் கொடுத்து கரும்பு கூட்டுறவு ஆலைகளை இயக்கிக் கொண்டிருக்கிறது. அதுதான் உண்மை.
தனியார் சர்க்கரை ஆலைகள் நலிவடைந்த பிறகும் கூட இந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இன்னும் 10 ஆண்டுக்காலத்திற்குத் தொய்வு இல்லாமல் இயங்க முடியும் என்ற அளவுக்கு மாற்றுப் பயிர்களும் தேவைப்படுகிறது.

இதில் எங்கள் தரப்பிலிருந்து பெரிய கோரிக்கையாகத் தமிழ்நாடு அரசு தனது overdraft account ஐ கடந்த காலங்களில் தனியார் வங்கியில் வைத்திருந்தது. இந்தத் திமுக அரசு பதவிக்கு வந்தபின் நாங்கள் தமிழ்நாடு முதலமைச்சரை ஸ்டாலினைச் சந்தித்து கோரிக்கை வைத்தோம். அதை ஏற்றுக் கொண்டு இரண்டு தனியார் வங்கிகளிலிருந்த அந்தக் கணக்கைத் தேசிய வங்கிகளுக்கு மாற்றித் தந்துள்ளார்கள்.

கிட்டத்தட்ட 2800 கோடி ரூபாய் மேலாகத் தொகை மாற்றப்பட்டுள்ளது. அதனால், இந்தப் பணம் அரசு வங்கிகளுக்கு வரவு வந்ததன் மூலம் எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்கான பணம் அரசுக்குக் கிடைத்துள்ளது. உற்பத்தியானது 14 லட்சம் டன்னிலிருந்து 19 லட்சம் டன்னுக்குப் போனாலும் கூட, நெல்லையும் கரும்பையும் நேரடிக் கொள்முதல் செய்வதற்கு இந்த நிதியை வைத்து தயாராகி உள்ளது. இது ஒரு சாதகமான அம்சமாக நாங்கள் பார்க்கிறோம்.

இந்த ஆண்டு சீர்காழி பகுதிகளில் கடுமையான மழை. உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலினே நேரில் வந்து பார்த்தார். கிட்டத்தட்ட 49செ.மீட்டர் அளவுக்கு மழை. வயலில் 6 அடிக்கு மேல் மழை வெள்ளம் புகுந்தது.

ஆகவே நெல் உற்பத்தி கடுமையாகப் பாதிப்படைந்தது. 2006 இல் மு.கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் ஒன்றிய அரசு cost of production போட்டார்கள். commission for agricultural costs and prices அறிக்கையின் படி ஒரு ஏக்கர் நெல் உற்பத்தியைச் செய்வதற்கு சுமார் 13.500 ரூபாய் ஆகும் எனக் கணித்தார்கள். இன்றுவரை ஒன்றிய அரசு கடந்த 16 வருடங்களாக அதை மாற்றவே இல்லை. 2022இல் தற்போது எங்களுக்கு வழங்கி உள்ள தொகை என்பது 2006இல் போடப்பட 13.500 இருந்து 50%தான் கொடுத்துள்ளார்கள்.

ஆனால் அரசு என்ன சொல்லி உள்ளது என்றால் இடுபொருள் மானியத்தை நாங்கள் தருகிறோம். ஒரு ஏக்கர் நெல் உற்பத்திக்குச் செலவாகும் தொகை எவ்வளவு எனத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் கணிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை 33,100 ரூபாய். இந்த வேறுபாட்டை மக்கள் உணர வேண்டும்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து விரைவில் 10 ஆண்டுகளை முடிக்க உள்ளார்கள். நாங்கள் விவசாயிகளோடு நிற்கிறோம். விவசாய உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்த போகிறோம் என்று பேசி வருபவர்கள்தான் அந்தப் பழைய தொகையை இன்றைக்கும் உயர்த்தாமல் இருந்து வருகிறார்கள். இந்தக் கொரோனா காலகட்டத்தில் கூட இதை மாறுதல் செய்து தரவே இல்லை. இவை எல்லாம் ஒன்றி அரசால் விவசாயிகளான எங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி.

ஆனால் தமிழ்நாடு அரசுடன் எங்களுக்கு சில முரண்கள் உள்ளன. ஆனால் அந்த அரசை நாங்கள் நேரடியாகத் தொடர்புகொள்ள முடிகிறது. எங்கள் குரலை அவர்கள் கவனமாகக் காது கொடுத்துக் கேட்கிறார்கள். சமீபத்தில் நடந்த செங்கரும்பு கொள்முதல் பற்றி உங்களுக்கே தெரியும். அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். உடனே கொள்முதல் செய்யப்பட்டது.

ஒட்டுமொத்தமாக மூன்றரை கோடி கரும்புகள் உள்ளன. அரசு இரண்டு கோடி கரும்புகளை வாங்கினால், வெளிச்சந்தையில் சுமார் 50 லட்சம் கரும்புகளை விற்றுவிடுவோம். ஆகவே விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து முறையிட்டோம். உடனடியாக அரசு அதை ஏற்றது. உத்தரவு வெளியானது. அந்த வழியில் விவசாயிகளின் கணக்குக்கு 70 கோடி ரூபாய் சென்று சேர்ந்துள்ளது.

 கல்வித் துறையில் ’திராவிட மாடல்’

கல்வித் துறையில் ’திராவிட மாடல்’

இது குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர், "கல்வியைப் பொருத்தவரை உள்கட்டமைப்பைத் தமிழ்நாடு மிகச் சிறப்பாக உருக்கி வந்துள்ளது. அதற்கு நமக்கு மிகப் பெரிய வரலாறு இருக்கிறது. கல்வியை ஏழை, எளிய மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான பல திட்டங்களை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி செய்துள்ளார்.

எல்லா வளர்ச்சிகளுக்கு அடிப்படை கல்விதான். அதைச் சார்ந்துதான் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை நாம் அடைய முடியும். ஒன்றிய அரசானது தமிழ்நாட்டின் வளர்ச்சியை எந்த வழிகளில் எல்லாம் உடைக்க முடியும் என்று திட்டம் போட்டுச் செய்து வருகிறது. ஏனென்றால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை அவர்களால் பொருத்துக் கொள்ள முடியவில்லை.

எல்லோருக்கும் சமமான வழிகளில் கல்வியைக் கொண்டு சேர்க்க நாம் தொடர்ந்து முயற்சி எடுத்து வந்துள்ளோம். அதற்கான ஒரு திட்டம் தான் மதிய உணவுத் திட்டம். இதனை மேலும் சிறப்பாக நினைத்த முதலமைச்சர் ஸ்டாலின் வெறும் வயிற்றுடன் பிள்ளைகள் கல்வி கற்க வரக் கூடாது. ஏனெனில் அது அவர்களின் கல்வியைப் பாதிக்கும் என நினைத்து காலை உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இது ஒரு சிறப்பான முன்னெடுப்பு.

இதனால் கல்வியின் தரம் கட்டாயம் உயரும். அதைப் போலவே பெண் பிள்ளைகளுக்கு இலவச பேருந்து வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளோம். அதற்கு முன்பே கிராம பிள்ளைகள் கல்விச்சாலைக்கு வரச் சைக்கிள் வங்கி இருக்கிறோம். இதனால் கல்வி சேர்க்கையில் மற்ற மாநிலத்தைவிட நாம் முதல் இடத்தில் இருக்கிறோம்.

இந்திய அளவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை 27% ஆக உள்ளது. ஆனால் நமது மாநிலம் 51% ஆக உள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான விஷயம். கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள 2 ஆண்டுகள் இடைவெளி என்பது குழந்தைகளின் 25 ஆண்டுகள் வளர்ச்சியைக் குறைத்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கணித்துள்ளது. அதைச் சரிசெய்யத் தமிழ்நாடு அரசு பல வழிகளில் முயன்று வருகிறது. அதில் ஒன்றுதான் 'இல்லம் தேடிக் கல்வி'. மாற்றத்தை உருவாக்க முதல் தேவை எதையாவது நாம் செய்ய வேண்டும். அப்போதுதான் மாற்றம் வரும். அப்படி ஒன்றுதான் 'நான் முதல்வன்' திட்டம்.

ஒரு மாணவனை வேலைவாய்ப்புத் தேடிச் செல்ல அது துணை புரிகிறது. இப்படி நாம் அக்கரையோடு பல திட்டங்களை முன்னெடுக்கும் போதுதான் ஒன்றிய அரசுப் பள்ளிகளின் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்திக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு நிறுவனம் சார்ந்த கல்லூரிகளில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னால் 40 ஆயிரம் செலவு செய்த மாணவன், இன்றைக்கு 1.20 லட்சம் வரை செலவு செய்கிறான். அந்தளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ஆகவே கல்வி என்பது அகில இந்திய அளவில் எட்டாக்கனியாக மாறிக் கொண்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் தான் தமிழ்நாடு அரசு பல இலவசத் திட்டங்களைக் கல்விக்காகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பகுத்து உணர வேண்டும்.

'ஒருவர் கல்வி அறிவு பெற்றால் அதன் பயன் அவருக்கு மட்டும் அல்ல; அவரது குடும்பத்திற்கு மட்டும் அல்ல; அது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனளிக்கும் விஷயம்' என்று கல்வியாளர் அனந்த கிருஷ்ணன் அடிக்கடி சொல்வார். அவரது கருத்து 100% உண்மை. ஆகவே நாம் மனித வளத்தைப் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் உலகளாவிய அளவில் முன்னேற முடியும். வளர்ந்த நாடுகள் எல்லாம் வயோதிக நாடுகளாக மாறிக் கொண்டுள்ளது.

இந்த நேரத்தில் நமது அடித்தளத்தை நாம் உறுதியாக்க வேண்டும். அதன் தரத்தைக் கூட்ட வேண்டும். நமது குழந்தைகளுக்கு உலகளாவிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும். அதற்குக் கல்வியில் நிறைய மாற்றங்களை நாம் கொண்டு வரவேண்டும். அதற்கான முயற்சியை ஸ்டாலின் செய்து வருகிறார்" என்கிறார்.

 பொருளாதாரத்தில் ‘திராவிட மாடல்’

பொருளாதாரத்தில் ‘திராவிட மாடல்’

பொருளாதார நிபுணர் ஆனந்த், "உலகம் முழுவதும் பொருளாதாரம் என்பது நெருக்கடியில் உள்ளது. உலக வங்கியின் அறிக்கை, சர்வதேச நாணய நிதியகத்தின் அறிக்கை எனப் பல அறிக்கைகள் நம்மை எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. உலகமே பொருளாதாரத்தில் மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. அதில் இந்தியாவின் நிலை இன்னும் மோசமாக மாறிக் கொண்டுள்ளது.

வரிவரிமேல் வரி போட்டு இந்திய அரசு மக்களை மேலும் வருமையில் ஆழ்த்தி வருகிறது. எல்லா துறைகளிலும் நிதி ஒதுக்கீடு குறைந்து வருகிறது. சமீபத்தில் வந்துள்ள 161 நாடுகள் சார்ந்து எடுக்கப்பட்ட ஆய்வில் இந்தியா 157வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. எல்லா புள்ளிவிவரங்களிலும் இந்தியா பின் தங்கியுள்ளது. இந்திய அரசாங்கம் பல விஷயங்களில் பெருமை பேசி வருகிறது.

ஆனால் பட்டினி குறியீட்டில் 121 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள 19.3% குழந்தைகள் அவர்களது வயதுக்கு ஏற்ப உயரத்தை எட்டவில்லை, எடை இல்லை என்கிறது.

இப்படி இந்தியா எல்லா நிலைகளிலும் பின் தங்கிக் கொண்டுள்ள நிலையில்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சியை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்றைக்கு உள்ள விலைவாசி குறியீட்டில் தமிழ்நாடு நான்கு அரை சதவீதத்திற்கு மேலாக உயரவில்லை என்கிறது.
இந்தியாவில் 8% வரை போய்க் கொண்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் பண விகிதம் வெறும் நான்கரை சதவீதமாக இருக்கிறது. இது மிகமிக சாதகமான அம்சம். இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் நியாய விலை பொதுவிநியோக கடைகள் முக்கிய பங்கை வகித்து வருகின்றன என்பதைப் புரிந்து கொள்கிறோம். அதன் மூலம்தான் தமிழ்நாடு மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது.

நிதிச் சிக்கல் இருந்தாலும் தமிழ்நாடு அரசு பொதுவிநியோகத்திற்கான நிதியைக் குறைக்கவில்லை. ஆகவேதான் விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளது. அது இந்திய அளவில் மிகச் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய அரசு கொரோனா காலகட்டத்தில் எளிய மக்களின் வரியைக் குறைக்கவில்லை.

ஆனால் பெரும் நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்துள்ளது. இந்த முரணை நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில் சாதாரண மக்களுக்குப் போகும் பணம் அவர்களின் வளர்ச்சிக்குப் பயன்படும். அந்த வளர்ச்சிதான் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படும். அந்தவகையில் தமிழ்நாடு இந்தியாவின் வளர்ச்சியைவிட ஒருபடி மேலாக உள்ளதைப் பார்க்கிறோம்.

கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் எல்லாம் நாளைய நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படும். ஆனால் இந்திய அரசு 20 முதலாளிகளுக்கு வாராக் கடன் 11 லட்சம் கோடியைத் தள்ளுபடி செய்துள்ளது. அதுதான் இலவசம். மக்களுக்குத் தருவது எதுவும் இலவசம் அல்ல; நாட்டின் வளர்ச்சிக்கானது. நாட்டின் வளர்ச்சி என்பது ஜிடிபியில் மட்டும் இல்லை" என்கிறார்.

 மருத்துவத் துறையில் ‘திராவிட மாடல்’

மருத்துவத் துறையில் ‘திராவிட மாடல்’

மருத்துவத்துறையில் நடந்துள்ள மருத்துவர் அமலோற்பவநாதன், "உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மை என்னவென்றால், எங்கெல்லாம் அரசு மருத்துவமனைகள் சிறப்பாகச் செயல்பட்டதோ அங்கெல்லாம் கொரோனாவை சரியாகக் கையாள முடிந்தது என்பதுதான். அங்கு எல்லாம் இறப்பைக் குறைக்க முடிந்துள்ளது. வியாதியைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. ஆனால் எங்கு எல்லாம் தனியார் மருத்துவமனைகள் அதிகம் உள்ளனவோ அங்கு எல்லாம் இறப்பும், நோய் பரவலும் அதிகரித்தன. இதை நாம் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா இறப்பு சதவீதம் குறைவாக இருந்ததற்கு அரசு மருத்துவ கட்டமைப்பு மிகப் பெரிய காரணமாக இருந்துள்ளது.

சொல்லப்போனால் நம்மிடம் கிட்டத்தட்ட 1800 ஆரம்பச் சுகாதார நிலையங்கள் உள்ளன. 8700 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. upgrade Primary Health Centres 420 உள்ளன. இதைத்தவிர அர்பன் பிரைமரி ஹெல்த் செண்டர்ஸ் 461 உள்ளன. மாவட்ட தலைமை மருத்துவமனைகள் 18 உள்ளன. தாலுக்கா மருத்துவமனைகள் 272 உள்ளன. இதற்கும் மேலாக அரசே நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் 36 உள்ளன. இவற்றுடன் இணைக்கப்பட்ட மருத்துவமனைகள் மட்டும் 62 உள்ளன. வேறு எந்த மாநிலத்தில் இல்லாத சாதனைகள் இவை. இதற்கும் மேலாக ஒரு மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனையைச் சென்னையில் வைத்துள்ளோம்.

இதற்கும் மேலாக வயது காரணமாக, ஒழுங்கான உதவி இல்லாத காரணத்தால், பின் தங்கிய பகுதியிலிருந்த காரணத்தால் சிலர் மருத்துவ சேவையைப் பெற முடியாமல் கூட இருந்திருக்கலாம். அதனைச் சரி செய்ய முதலமைச்சர் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை ஆரம்பித்தார். அது நல்ல பயனை அளித்துள்ளது. இதற்காக மட்டுமே 250 கோடி ஒதுக்கி உள்ளது ஸ்டாலின் அரசு. அடுத்து மு.கருணாநிதி உருவாக்கிய வரும் முன் காப்போம் திட்டம். இந்த வசதிகளால்தான் நாம் கொரோனாவை வென்றுள்ளோம்.

இந்தத் திட்டத்தால் கடந்த 2021 ஆண்டு மட்டும் 90 ஆயிரம் பேர் பயன்பட்டுள்ளனர். 2022 ஆண்டு 11 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதை எல்லாம் விட முக்கியம் "இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48" திட்டம் . முன்பு எல்லாம் ஒருவர் விபத்தில் அடிப்பட்டால் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல அஞ்சுவார்கள். காரணம் செலவு அதிகம் பிடிக்கும் என்பதால்.

ஆனால் இந்தத் திட்டத்தின் மூலம் ஒருவர் எந்தப் பகுதியில் விபத்துக்கு உள்ளானாலும் அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் செல்லலாம். முதல் இரண்டு நாள்கள் வரையான அனைத்து சிகிச்சை செலவையும் அரசே ஏற்கிறது. 48 மணிநேரத்திற்குப் பிறகு உங்களுக்கு விருப்பம் இருந்தால் வேறு மருத்துவ மனைக்கு நீங்கள் மாறிக் கொள்ளலாம். இது ஒரு அற்புதமான திட்டம். இந்தியாவில் ஒரு புரட்சியான திட்டம். அதைத் தமிழ்நாடு செயல்படுத்தி உள்ளது" என்கிறார்.

 சமூக நலத்துறையில் ’திராவிட மாடல்’

சமூக நலத்துறையில் ’திராவிட மாடல்’

சமூக நலத்துறையில் நடத்துள்ளத் திராவிட மாடல் விஷயம் குறித்து சமூக ஆர்வலர் பூர்ணிமா, "இந்தத் திமுக அரசு பதவியேற்றதும் முதலில் செய்த வேலை, சமூக நலத்துறையின் பெயரையே மாற்றியது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை என்று மாற்றி இருக்கிறார்கள். இந்தப் பெயரிலேயே மாற்றம் தொடங்கிவிட்டது. பலர் பெயரில் என்ன இருக்கிறது எனக் கேட்கலாம். பெயர்தான் ஒரு நோக்கத்தை மக்களுக்கு விளக்கும் பலகை. அதைக்கொண்டுதான் அவர்கள் அரசை நாட முன்வருவார்கள். ஆக, அந்தவகையில் இந்த மாற்றம் முக்கியமானது.

அடுத்து புதுமைப்பெண் திட்டம். இது பெண் பிள்ளைகளின் உயர்கல்வியை உறுதி செய்கிறது. கூடுதலாகப் படிப்பதற்காக 1000 ரூபாய் வழங்குகிறது. இது இலவசம் அல்ல. அரசின் கடமை என்று முதலமைச்சர் ஸ்டாலினே கூறியிருக்கிறார். பலரும் இலவசம் என விமர்சிக்கும் காலத்தில் இதனை அரசின் கடமை என அவர் சொல்வது மிகமிக முக்கியம். 'தாலிக்குத் தங்கம்' என்பதைவிட ஒரு பெண்ணிற்குக் கல்விதான் தனித்தன்மையோடு வாழ வழிவகை செய்யும். அதை ஸ்டாலின் உணர்ந்துள்ளார் என்பது மகிழ்ச்சி.

அடுத்து கட்டணம் இல்லாத பேருந்து சேவை. அதுவும் பெண்களுக்கு வழங்கி உள்ளது தமிழ்நாடு அரசு. பேருந்து காசை மிச்சம் செய்யும் விஷயம் எனச் சுருக்கி பார்க்கக் கூடாது. இது பெண்களின் பொருளாதார சக்தியை உயர்த்தி உள்ளது. 222 கோடி அளவுக்கான பயணங்கள் இத்திட்டத்தின் கீழ் நடந்துள்ளன. அது மாபெரும் மாற்றத்தைத் தமிழ்நாட்டில் உருவாக்கி வருகிறது. பெண்களின் சுயத் தேவையை அத்திட்டம் உறுதி செய்துள்ளது. அதை நாங்கள் களப்பணியில் அறிந்து வருகிறோம்.

2021 நவம்பர் 20 ஆம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடி வருகிறோம். அன்றுதான் தமிழ்நாடு அரசு 'தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பிற்கான கொள்கை'யை இந்தியாவிலேயே முதன்முதலாக வெளியிட்டுள்ளது. அதுபோல திருநங்கைகள் உரிமை சார்ந்து பல விஷயங்களில் தமிழ்நாடு அரசு பல முன்னெடுப்புகளைச் செய்துள்ளது" என்கிறார்.

English summary
Is dravidian model just a word or transformation? What is the ground report?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X