பசும்பொன் விசிட்டை தவிர்த்த எடப்பாடி! முனுமுனுத்த முக்குலத்தோர்! கொங்கு மண்டல கட்சியாகிறதா அதிமுக?
சென்னை : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அந்த நிகழ்ச்சிக்கும் செல்லும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முக்குலத்து முன்னாள் அமைச்சர்களே அதிருப்தியில் இருப்பதாகவும், தொடர்ந்து முக்குலம் சார்ந்த நிகழ்ச்சிகளை எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பது அவர் தரப்புக்கு நல்லதல்ல என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
தான் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அதிமுகவில் தேவரின் தங்க கவசம் தொடர்பாக மோதல் எழுந்துள்ளது. அதிமுகவின் இருதரப்புமே அதற்கு தீவிரமாக முயன்ற நிலையில் நீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்குமே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் நாங்கல் தலையிட விரும்பவில்லை என கூறியுள்ள நீதிபதிகள், வருவார் அலுவலர் தேவரின் தங்க கவசத்தை பெற்றுக் கொள்ளலாம் என தீர்ப்பளித்துள்ளனர். இந்த மாதிரிதான் நடக்கும் என முன்னரே தகவல் வெளியாகிய நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி தனது பயணத்தை ரத்து செய்தார் எனவும் கூறப்படுகிறது.

முக்குலத்தோர் ஆதரவு
அதிமுகவை பொறுத்தவரை முக்குலத்தோர் ஆதரவு தான் அக்கட்சியின் பெரிய பலமாக உள்ளது. எம்ஜிஆர் ஆட்சியிலும் சரி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சரி முக்குலத்தோர் சமுதாயத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அதே நேரத்தில் கட்சியிலும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் முக்குலத்தைச் சார்ந்த நிர்வாகிகளுக்கு பல பதவிகள் அளிக்கப்பட்டன.

உரிய முக்கியத்துவம்
அந்த வகையில் சசிகலா ஜெயலலிதாவுடனேயே பயணித்த நிலையில், டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் ,நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்து வந்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியதில் இருந்தே முக்குலத்தோர் சமுதாயத்தினரை அவர் புறக்கணித்து வருவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தை அவர் ஓரம் கட்டியது பல முக்குலத்து நிர்வாகிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

புறக்கணிக்கிறாரா எடப்பாடி?
ஆனால் அந்தப் புகாரினை சமாளிக்கும் வகையில்ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் நத்தம் விஸ்வநாதனுக்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியையும், திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொருளாளர் பதவியை வழங்கினார். ஆனாலும் முக்குலத்தோர் சமுதாயத்தினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்தே வந்திருக்கின்றனர். குறிப்பாக அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான மாயத் தேவரின் மரணத்தின் போது சசிகலா ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கடும் அதிருப்தி
அப்போது எடப்பாடி பழனிச்சாமி மாயத்தேவரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத நிலையில் ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட இரண்டாம் கட்ட நிர்வாகிகளே அஞ்சலி செலுத்தினர். அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி என்ற மரியாதை கூட இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி நடந்து கொண்டதாக அப்போது முக்குலத்து சமுதாய நிர்வாகிகள் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போஸ்டர்களையும் ஓட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

புறக்கணித்தது ஏன்?
இந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்த பெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கூட வருவதாக யூகங்கள் கிளம்பின. ஆனால் அது நடக்கவில்லை. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த இருக்கிறார்.

சமுதாய ஓட்டுகள்
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பசும்பொனுக்கு வருகை தர மாட்டார் என்ற செய்தி முக்குலத்து நிர்வாகிகளை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. ஒருபுறம் சென்னையில் அவர் மரியாதை செலுத்துவார் என அறிவிக்கப்பட்டாலும் முதல்வரே பசும்பொன் வரும் போது எடப்பாடி வராமல் புறக்கணிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை ஏற்கனவே கூறியது போல அக்கட்சிக்கு முதுகெலும்பு போல இருப்பது முக்குலத்து சமுதாய ஓட்டுகள் தான்.

கொங்கு மண்டலம்
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சமூக அடிப்படையில் கொங்கு மண்டலம் ஓரளவு கை கொடுத்தாலும் அதிமுக ஆட்சியமைக்க தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மண்டலங்களின் வாக்குகள் மிக முக்கியம் அவற்றைத் தவிர்த்துவிட்டு அதிமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அனைவருக்குமே தெரியும். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பல காலம் இருப்பதால் தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி கருதியதாக தகவல் வெளியாகி இருக்கிறது

கொங்கு கட்சியா?
அதே நேரத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுகவின் முக்கிய வாக்கு வங்கியான முக்குலத்து சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் மேற்கொள்ளாமல் தவிர்ப்பது அதிமுகவிற்கு நல்லது அல்ல எனவும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்குமான கட்சியாக இருந்த அதிமுக தற்போது கொங்கு மண்டல கட்சியாக மாறி வருவதாகவும் இது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications