அமைதியோ அமைதி.. பனையூரில் இருந்து கொண்டே வெல்லலாமா? விஜய் அமைதிக்கு காரணம் ஜான் ஆரோக்கியசாமி?
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஆளும் திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, ஆகிய 2 முக்கிய கட்சிகளும் தொடங்கிவிட்டன. திமுகவின் மு.க. ஸ்டாலின், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இன்னொரு பக்கம் நாம் தமிழர் சீமானும் துப்புரவு பணியாளர் போராட்டம், ஆடு மாடுகள் போராட்டம் என்று பல போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார் . அமைதியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் கூட போலி வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் போராட்டத்தில் குதித்து உள்ளது.

திமுகவின் தேர்தல் பணி
திமுக 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க உள்ளனர். கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் மக்களைச் சந்தித்து பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், "திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி. 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் இணைந்தவர்களில் விருப்பம் உள்ளவர்கள் திமுகவில் உறுப்பினர்களாகவும் இணைவார்கள். சாதி, மதம், கட்சி சார்பு என எதையும் பார்க்காமல் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் நாம் சென்றடைய வேண்டும். ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி, 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறும்! களத்தில் செயல்படும் நாம் நான்கு படிநிலைகளில் செயல்பட வேண்டும்" என்று கூறினார்.
எடப்பாடியின் சுற்றுப்பயணம்
அதிமுக தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முழுமையாக தயாராகிவிட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 234 தொகுதிகளுக்கும் செல்லும் இந்த சுற்றுப்பயணம் "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பத்திர காளியம்மன் கோவிலில் பூஜையுடன் தொடங்குகிறார். மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு, தனது சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு, தமிழக அரசியல் கட்சிகள் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு கட்சியும் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.
விஜய் மௌனம்
ஆனால் தமிழ்நாட்டில் முக்கியமான சில அரசியல் விவகாரங்களில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொடர்ந்து வாய் திறக்காதது கடுமையான விவாதங்களை அக்கட்சியினர் இடையே ஏற்படுத்தி உள்ளது.
ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று விடாத மழையிலும் அவர்கள் தொடர் போராட்டம் செய்தனர். ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் சுமார் 150 தற்காலிக சுகாதாரப் பணியாளர்கள் பணியைத் தொடங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இதில் கருத்து சொல்லாமல் விஜய் மௌனம் காக்கிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், இது தொடர்பாக வாக்காளர் பட்டியலில் போட்டோக்களையும் தாராக வெளியிட்ட ராகுல் காந்தி, ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் இருப்பதாகவும் சாடியுள்ளார்.நாட்டையே உலுக்கி உள்ள இந்த விவகாரத்தில் பாஜக மீது கடும் புகார்கள் வைக்கப்படுகின்றன. பாஜக மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறும் அதே விஜய்.. இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.
நெல்லையில் நிகழ்ந்த ஆணவக் கொலைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலியான கவின், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள ஒரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுபாஷினியைக் கவின் காதலித்து வந்த நிலையில் சுபாஷினி சகோதரர் சுர்ஜித் மூலம் கொல்லப்பட்டார்.
ஜான் ஆரோக்கியசாமி - விஜய்
இந்த விவகாரத்தில் விஜய் இன்னமும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆறுதலும் தெரிவிக்கவில்லை. இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. மாற்று அரசியல் என்கிறார்.. அம்பேத்கர், பெரியார் கொள்கை தலைவர்கள் என்கிறார். ஆனால் ஜாதி ஆணவக்கொலைக்கு கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார். விஜய் ஒரு பெரிய புள்ளியின் கண்ட்ரோலில் இருக்கிறார். அவர் ஒரு வியூக வகுப்பாளர். அதவாது ஜான் ஆரோக்கியசாமி. அவர்தான் விஜயை இதை பற்றி பேச விடாமல் தடுத்துவிட்டார் என்று விஜய் காட்சியிலேயே சிலர் புகார்கள் வைக்கின்றனர். இதை எல்லாம் பற்றி பேசினால் தென் மண்டலத்தில் வாக்கு கிடைக்காது.. சென்னையில் துப்புரவு பணியாளர் விஷயத்திலும் பேச வேண்டாம் என்று ஜான் ஆரோக்கியசாமிதான் தடுத்துவிட்டார் என்றும் தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications