கருணாநிதி கொண்டு வந்த இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுகிறதா? பாஜக மீது பாய்ந்த சிபிஎம் ராமகிருஷ்ணன்
சென்னை: விவசாயிகளின் உயிர்நாடியான இலவச மின்சாரம் கேள்விக்குறியாகிறதா..? புதிய மின்சாரத் திட்டம் வந்தால் இலவச மின்சாரம் முழுமையாக முடிவுக்கு வரும் என பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த பேச்சுதான் சோஷியல் மீடியாவில் திமுக கூட்டணி தொண்டர்களால் பகிரப்பட்டு வருகிறது.
கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகனை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..

அப்போது பேசிய அவர், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார்.. குறிப்பாக, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எடுத்துள்ள அரசியல் முடிவுகள் குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.. விவசாயம் செழிக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.கே.வாசன், விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி என்று ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்..
மூப்பனார் மகன் ஜிகே வாசன்
தமிழகத்தில் நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் ஜி.கே.வாசன் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதை ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்..
"ஜி.கே.மூப்பனார் இன்று உயிருடன் இருந்திருந்தால், தனது மகனின் இந்தச் செயலைப் பார்த்து நிச்சயம் அடித்திருப்பார், இதை ஒருபோதும் அவர் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்" என்று ராமகிருஷ்ணன் ஆவேசமாகப் பேசினார்.. தமாகா கட்சியை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், குறைந்தபட்சம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலாவது வாசன் போட்டியிட்டிருக்கலாம் என்று சாடினார்..
கருணாநிதி தந்த இலவச மின்சாரம்
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டம் குறித்து பேசிய ராமகிருஷ்ணன், 1989-ம் ஆண்டு மறைந்த முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டத்திற்கு மத்திய பாஜக அரசு வேட்டு வைக்க பார்க்கிறது-.
புதிய மின்சாரத் திட்டத்தின் மூலம் இலவச மின்சாரத்தை ரத்து செய்து, அதனைத் தனியாருக்குத் தாரை வார்க்க பிரதமர் மோடி அரசு முயல்வதாகவும், இந்தத் திட்டத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்..
தன்னுடைய பேச்சின்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் ராமகிருஷ்ணன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்..
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்தத் தகுதியும் இல்லை. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்தை மூச்சுத்திணறல் என்று கூறி எடப்பாடி மறைக்க முயன்றார், ஆனால் நீதிமன்றம் அதில் தொடர்புடைய 9 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்து உண்மையை வெளிக்கொண்டு வந்தது என்று அவர் குறிப்பிட்டார்.. மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று பொறுப்பற்ற முறையில் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி.
சாக்கோட்டை அன்பழகன்
சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்..
வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அதிமுக மற்றும் ஜி.கே.வாசனின் தமாகா ஆகிய கட்சிகள் தமிழக அரசியலில் இருந்தே காணாமல் போய்விடும் என்று அவர் கணித்தார்.. கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் சாக்கோட்டை க.அன்பழகனுக்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்வதன் மூலம், பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு டெபாசிட் கூட கிடைக்காமல் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.












Click it and Unblock the Notifications