கமல்ஹாசனை காங்கிரஸில் சேர்க்க விரும்பும் ராகுல்? கட்சியை கலைக்கப் போறாரா? மீட்டிங்கில் நடந்தது என்ன?
சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தனது கட்சியைக் கலைத்துவிட்டு, காங்கிரஸில் இணைய இருப்பதாக ஒரு தகவல் சிறகடித்து வருகிறது. ஆனால், இந்தத் தகவலில் துளியும் உண்மை இல்லை என்றும், சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே இப்படி கிளப்பி விட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கின்றனர் மநீம கட்சியினர்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முடிவெடுத்துள்ள நிலையில், கட்சியை காங்கிரஸோடு இணைக்க இருக்கிறார் கமல்ஹாசன் என்கிற பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பி உள்ளன.
ஆனால், மநீம கட்சியினர், ராகுல் காந்தியிடம் இருந்து கடிதம் வந்த நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகுதான் டெல்லி செல்லவே கமல்ஹாசன் முடிவெடுத்தார், கட்சியைக் கலைக்கும் திட்டம் ஒருபோதும் இல்லை என்கிறார்கள்.

கமல் - மநீம
மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலில் சரத்குமாரின் சமக, பாரிவேந்தரின் ஐஜேகே ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த 2 தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2.6 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தாலும், வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனும் சொற்ப வாக்குகளில் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார்.

கூட்டணி பற்றி ஆலோசனை
இந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து கமல்ஹாசன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசன் தலைமையில் கடந்த 18ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது, கூட்டணி அமைப்பது உள்ளிட்டவை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ராகுல் யாத்திரையில் கமல்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மநீம தலைவர் கமல்ஹாசன், "எந்த திசை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறேன் என்பது என் பயணத்தை புரிந்துக்கொண்டாலே புரியும். விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் துணை தலைவரான மவுரியா, "ராகுல்காந்தியின் அழைப்பை ஏற்று பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் டெல்லியில் வரும் 24ஆம் தேதி கலந்துகொள்கிறார். ஜனநாயகத்தை பாதுகாக்க ராகுல் காந்தி யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொள்ள இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

திமுக + கூட்டணி
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். இது 2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு, டெல்லியில் வைத்து திமுக + காங்கிரஸ் உடனான கூட்டணிக்கு கமல்ஹாசன் அச்சாரம் போடுவதற்கு தயாராகி விட்டார், கூட்டணியில் எத்தனை சீட்கள் என்பதும் விரைவில் உறுதி செய்யப்படும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்சியை கலைக்கிறாரா - பரவும் தகவல்
இந்நிலையில் இன்னொரு தகவலும் தீவிரமாகப் பரவி வருகிறது. கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தை கலைத்துவிட்டு, காங்கிரஸோடு இணைய இருப்பதாக ஒரு தகவல் பரபரத்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த, கமல்ஹாசனை கட்சியில் இணையுமாறு ராகுல் காந்தி ஏற்கனவே நடைபெற்ற சந்திப்பின்போது கமல்ஹாசனிடம் தெரிவித்ததாகவும், தற்போது நிதி நெருக்கடியால் கட்சியை நடத்த சிரமப்பட்டு வரும் கமல்ஹாசன், ராகுலின் விருப்பத்தை பரிசீலித்து வருவதாகவும், விரைவில் அதிரடி முடிவு எடுக்கப்போகிறார் என்றும் தகவல் பரவியது.

நிர்வாகிகள் வரவேற்பு
இந்நிலையில், டெல்லியில் ராகுல் காந்தியின் யாத்திரையில் நூற்றுக்கணக்கான மக்கள் நீதி மய்யத்தினருடன் கமல்ஹாசன் கலந்துகொள்ள இருப்பது இந்த தகவலுக்கு வலு சேர்த்தது. ஆனால், அப்படியான எந்த திட்டமும் இல்லை என்கிறார்கள் மநீம கட்சியினர். டிசம்பர் 18ஆம் தேதி நடந்த மநீம ஆலோசனைக் கூட்டத்தில், ராகுல் காந்தி தனக்கு அனுப்பிய கடிதத்தை வாசித்துக் காட்டியுள்ளார் கமல்ஹாசன். அதில் பங்கேற்க இருப்பதாக கமல் சொன்னதும், மநீம நிர்வாகிகள் அனைவரும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.

தேர்தல் வியூகங்கள்
அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிகளை வலிமைப்படுத்துவது பற்றியும், அதற்கு கட்சி நிர்வாகிகளை தயார்படுத்த வேண்டும் என்றும் கமல்ஹாசன் பேசினாராம். மேலும், வரும் பிப்ரவரியில் கட்சியின் ஆறாம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும், அதுபற்றி மீண்டும் கூடி ஆலோசிப்போம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்ததாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

உறுதியாகச் சொல்லும் நிர்வாகிகள்
கமல்ஹாசன், கட்சியைக் கலைத்துவிட்டு, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகப் பொறுப்பேற்கப் போகிறார் என சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே கிளப்பி விட்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு கட்சியில் இருப்பதென்றால், கமல் எப்போதோ எம்.பியாகவோ, எம்.எல்.ஏவாகவோ ஆகியிருப்பார், அரசு நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் இலக்கை நோக்கியதுதான் அவரது பயணம் என உறுதிபடக் கூறுகின்றனர் மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.

கூட்டம் திரட்டுவதில் சிக்கல்
வரும் 24ஆம் தேதி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன், நூற்றுக்கணக்கான கட்சியினரோடு பங்கேற்க உள்ள நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருப்பதால், பெரிய அளவில் கூட்டம் கூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வெகு சிலர் மட்டுமே கமல்ஹாசனோடு டெல்லி செல்லக்கூடும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

கமல் கூட்டணி
கமல்ஹாசன் சனாதனவாதிகளை எதிர்த்து வருகிறார். ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு சமுதாயம் வேண்டும் என்பதுதான் கமலஹாசன் நிலைப்பாடாக உள்ளது. ராகுல் காந்தியின் நடை பயணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளதைப் போல உலக நாயகன் கமலஹாசனும் கலந்து கொள்கிறார். கமல்ஹாசனும் கூட்டணிக்கு வர தயாராக இருப்பதாகத் தெரிகிறது என காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications