தம்பிக்கு தண்ணீரைப் பார்த்தால் பயம்? கடைசியா பார்த்த முகம்: கலங்கிய கேப்டன் முகுந்த் அக்கா
சென்னை: கேப்டன் முகுந்த் வரதராஜனின் சகோதரி ஸ்வேதா தனது தம்பியைப் பற்றிய இதுவரை யாரும் அறியாத தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
'அமரன்' படத்தின் ரியல் ஹீரோ கேப்டன் முகுந்த் வரதரஜன் எனத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. ஒரு ராணுவ வீரர் இந்தளவுக்கு தேச பற்றுடன் இருப்பாரா? எனச் சிலிர்க்க வைக்கும் உணர்வை அவரது வாழ்க்கை பலருக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படம் வெளியானது முதல் முகுந்த் பெற்றோர்கள் தங்கள் மகனின் நினைவுகளைக் கண்ணீர் மல்க நினைவு கூறிவருகின்றனர். இப்போது அவரது அக்கா ஸ்வேதா வரதராஜன் அவர் தம்பியின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், "சின்ன வயதிலிருந்தே அவனுக்கு பாக்ஸிங் என்றால் அதிகம் பிடிக்கும். ஆர்வமாக WWF சேனலை பார்ப்பான். அதைப் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள மாட்டான். எங்களுடன் அதேபோல் குத்துச்சண்டை போட வருவான். ஆகவே, அவனைப் பார்த்தாலே நாங்கள் ஓடிவிடுவோம். நாங்கள் அக்கா, தம்பி என்று பாகுபாடு பார்த்து வளரவில்லை. ரொம்ப இயல்பாகவே பழகிவந்தோம். எனக்கு அவனுக்கும் 4 வயது வித்தியாசம்.
அவன் 8 ஆம் வகுப்பு படிக்கும்போதுதான் முதன்முதலாக ஜிம்மில் சேர்ந்தான். அங்கே எக்சர்சைஸ் செய்துவிட்டு, வீட்டுக்கு வந்து என்னைத் தூக்குவான். நான் பயப்படுவேன். கீழே போட்டுவிடப்போகிறானோ எனப் பயம் இருக்கும். எனவே லைட் வெயிட்டாக இருக்கும் தங்கையை தூக்குடா எனச் சொல்வேன். 'அவளைவிட வெயிட்டாக இருக்கும் உன்னை தூக்கினால்தான் அது சேலஞ்ச்' என்று சொல்வான். அந்தளவுக்கு இளம் வயதிலேயே உடலை உறுதியாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தான்.

சின்ன வயதிலேயே எங்களை வைத்து விளையாடும் போது அவர் இந்தியா. நாங்கள் எனிமி கண்ட்ரி. எங்களைப் போட்டு அடிப்பான். அவனுக்கு அந்தளவு ராணுவத்தின் மீது ஆர்வம் இருந்தது. என் தங்கையைவிட என்னை அதிகம் நம்புவான். ஒருமுறை அவன் தன் மொபைலை கொடுத்துவிட்டு வெளியே போய் இருந்தான். என் தங்கை என்னிடம் இருந்து எடுத்து அதை நோண்டினால். அதில் 'அமரன்' படத்தில் 'வெத்தலைப் போட்ட சோக்குல கப்புனு குத்துன மூக்குல' என்ற பாடல் ஒரு பெண் குரல் இருந்தது. அந்தக் குரலுடன் சேர்ந்து பாட்டுப் பாடி இருந்தான். அவன் வீட்டுக்கு வந்ததும் அந்தப் பெண் குரல் யார் எனத் தங்கை கேட்டாள். அவன் மறைத்துவிட்டான். அப்போதுதான் அவன் காதல் வெளியே தெரியவந்தது" என்று பேசி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய ஸ்வேதா, "அவன் ராணுவத்திலிருந்த போது ஒருமுறை அவனைப் பார்க்கப் பெற்றோருடன் போனேன். அவனுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்தது. அதேபோல் ஸ்கின் அலர்ஜி உண்டு. தண்ணீரில் காலையில் முகம் கழுவவே பயப்படுவான். அவனுக்கு மூச்சிரைப்பு வந்துவிடும். அதனால் கஷ்டப்பட்டான். அதைப் பார்க்கவே என் மனம் சங்கடமாக இருந்தது. வீட்டுக்கு அழைத்து வந்துவிடலாம் என்றுகூட அம்மாவிடம் சொன்னேன். அவன் எப்போதும் பாசமாக இருப்பதைப்போல வெளியே காட்டிக்கொள்ள மாட்டான். ஒரு கண்டிப்பான அதிகாரி தோரணைதான் இருக்கும். அவன் ராணுவத்தில் உயர் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றதே எனக்குத் தெரியாது. அவனை சக அதிகாரிகள் சார் என அழைப்பதைப் பார்த்துக் கேட்டபோதுகூட, 'உனக்குத் தேவையில்லாத விவகாரம்' எனச் சொல்லிவிட்டான்.

எனக்கே படம் பார்த்துத்தான் பல விசயங்கள் தெரிந்தன. அவன் ராணுவ வேலைப் பற்றி எதையும் சொல்ல மாட்டான். பின்புதான் தெரிந்தது. அது அவனது தொழில் தர்மம் என்று. அவனுக்கு ஸ்வீட்ஸ் அதிகம் பிடிக்கும். விடுமுறையில் வீட்டுக்கு வந்தால் அதிகம் சாப்பிடுவான். அவனது ராணுவ உடையே சின்னதாகிவிடும். அந்தளவுக்குச் சாப்பிட்டுப் பெருத்துவிடுவான். மீண்டும் விடுமுறை நாட்கள் முடிய 10 நாட்கள் இருக்கும் போது கடினமான உடற்பயிற்சி, டயட் கடைப்பிடித்து பழைய நிலைக்கு உடலை எடுத்து வந்துவிடுவான். அந்தளவுக்குக் கடின உழைப்பாளி அவன்.
அவன் உயிரிழப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக போன் செய்து பார்க்க வேண்டும் போல் உள்ளது என்று பேசினான். வரச் சொன்னான். ஆனால், அவன் மறைவு செய்தி ஒருவாரத்தில் வந்தது. என்னால் நம்ப முடியவில்லை. எப்போதும் முகச் சவரம் செய்து வழவழப்பாக இருப்பான். அவன் உடலைப் பார்த்தபோது தாடி வளர்ந்து போய் இருந்தது. தம்பிதானா இது? என என்னால் முதலில் நம்ப முடியவில்லை" என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications