கொரோனாவின் கரங்களில் சிக்கி உயிரிழக்கும் பெற்றோர்கள்.. அனாதரவாகும் குழந்தைகள்.. அரசு அரவணைக்குமா?
சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாக்க ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை போல் தமிழக அரசும் ஏதாவது செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்து வரும் நிலையில் பலர் தங்களது அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது. அந்த வகையில் குழந்தைகள் சிலர் பெற்றோர் இருவரையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது.

குழந்தைகள்
இவ்வாறு பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளை காக்க அந்தந்த மாநில அரசுகள் முன்வந்துள்ளன. என்னதான் உறவினர்கள் இருந்தாலும் அந்த குழந்தைகளின் படிப்பு, பராமரிப்பு உள்ளிட்டவை கேள்விக்குறியாகவே இருக்கும். இதனை மனதில் கொண்டு மாநில அரசுகள் தாங்களாகவே முன்வந்து பல திட்டங்களை அறிவித்துள்ளது.

உயிரிழந்த பெற்றோர்
அதன் படி மத்திய பிரதேச அரசு கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மாதாமாதம் பராமரிப்பு செலவாக ரூ 5000, இலவச கல்வி, ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அது போல் டெல்லி அரசும் சத்தீஸ்கர் அரசும் கொரோனா பாதிப்புக்குப் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்கும் என அறிவித்துள்ளது.

உதவி
அது போல் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் டெபாசிட் தொகையாக ரூ 10 லட்சத்தை ஆந்திர அரசு வங்கிக் கணக்கில் செலுத்தும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அது போல் தமிழகத்திலும் கொரோனாவால் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு மாநில அரசு உதவி செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கல்விக் கட்டணம்
குழந்தைகளின் பராமரிப்பு கட்டணம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளை தமிழக அரசு ஏற்க முன்வர வேண்டும். பச்சிளம் குழந்தைகளாக இருந்தால் அவர்களை தத்து எடுத்துக் கொள்ள இருக்கும் விதிகளை தளர்த்தி அந்த குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.












Click it and Unblock the Notifications