சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலக அமைதியை சீர்கெடுக்கிறார் பிரான்ஸ் அதிபர்... இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கண்டனம்..!

Google Oneindia Tamil News

சென்னை: உலக அமைதியை சீர்கெடுக்கும் வகையில் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மெக்ரான் செயல்பட்டு வருவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை கற்பனையாக வடித்து இருப்பதாக காட்டுவதை ஒரு போதும் ஏற்க முடியாது எனத் அக்கட்சி தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் போக்கை வரவேற்றுள்ள பிரதமர் மோடிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார் அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இறைவன்

இறைவன்

இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவனை - உருவ மில்லாத ஓர் இறையை வணங்குவதும், நபிகள் நாயகம் அந்த உருவமற்ற ஏகத்துவத்தின் இறுதித்தூதர் என்று இதயப்பூர்வமாக நம்பி, அவர் காட்டிய வழியிலும், அவர் ஊட்டிய நெறியிலும் முஸ்லிம்கள் வாழ்வதும் அடிப்படைக் கொள்கை களாகும். நபிகள் நாயகம், இறைவனின் தூதர். அவரை முஸ்லிம்கள் ஓவியம் தீட்டியோ, சித்திரம் வரைந்தோ, உருவம் படைத்தோ, சிலை அமைத்தோ அழகு பார்க்கும் பழக்கமோ, சம்பிரதாயமோ இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லை.

உருவப்படம்

உருவப்படம்

பிரான்ஸின் ‘சார்லி ஹெப்டோ' கார்டூன் - நபிகள் நாயகம் அவர்களின் படத்தை கற்பனையாக வரைந்து கேலிச்சித்திரமாகப் போடப்பட்டது. பிரான்சு தேசப் பள்ளிக்கூடம் ஒன்றில் - ஒரு வகுப்பில் அதன் ஆசிரியரால் மாணவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அங்கிருந்த முஸ்லிம் மாணவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தனது கருத்துச் சுதந்திரம் என்னும் போர்வையில் அந்த ஆசிரியர் திரும்பத்திரும்ப நபிகளாருடைய இல்லாத படத்தை இருப்பதாகக் காட்டி மகிழ்ந்திருக்கிறார்.

பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ் அதிபர்

முஸ்லிம்கள் தங்களுக்கென ஒரு தனி கலாச்சாரத்தை பின்பற்றி, பிரான்சு மக்களிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. பிரான்சு நாட்டுப் பண்பாடுகளும், சுதந்திரங்களும் பாதுகாப்பதற்கு எல்லா விதமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று வீர வசனங்கள் பேசியுள்ளார் பிரான்சு தேசத்து அதிபர் எமானுவேல் மெக்ரான்.

அரபு நாடுகள்

அரபு நாடுகள்

பிரான்சு அதிபரின் பேச்சுக்கு முஸ்லிம் நாடுகளில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. துருக்கி அதிபர் எர்டோகன், பிரான்சு அதிபருக்கு மனோதத்துவ மருத்துவம் செய்ய வேண்டும் என்றார். பல முஸ்லிம் நாடுகளில் பிரான்சு பொருட்கள் வாங்க விற்கத் தடை கோரப்பட்டுள்ளன. மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அரபு நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் பிரான்சு அதிபரின் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு, ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக வெளி வந்த வண்ணமாக உள்ளன.

இல்லாத ஒன்றை

இல்லாத ஒன்றை

பிரான்சு நாடு, இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறுவதை நியாயப்படுத்தும் வகையில் கருத்துச் சுதந்திரம் பற்றி பேசுகிறது. இது நீதிக்குப் புறம்பானது; தர்மத்திற்கு எதிரானது; உலக அமைதிக்கு முரணானது. பிரான்சின் இந்தப் போக்கை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றிருக்கிறார். மோடி அவர்களின் முஸ்லிம் விரோதப் போக்கு, இப்போது இஸ்லாம் விரோதப் போக்காகப் பரிணமித்திருக்கிறது.

மத்திய அரசு

மத்திய அரசு

இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறுவதை நியாயப்படுத்துவது குதர்க்கத்தின் கொள்கையாகும். இந்தக் கொள்கையில் பாரதப் பிரதமர் முழு நம்பிக்கை கொண்டிருப்பது வேதனையிலும் வேதனையாகும். இந்தியாவில் இதற்கு முன்னர் இருந்த எந்தவொரு மத்திய அரசும் பின்பற்றாத ஒரு கொள்கையை - முஸ்லிம் விரோத - இஸ்லாம் விரோத கொள்கையை இன்றைய மத்திய அரசு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Iuml National president Khader mohideen says, France president disrupts world peace
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X