ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நிமிடம் கூட ஆளுநராக நீடிக்க தகுதியில்லை- ஜவாஹிருல்லா விமர்சனம்
சென்னை: துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரமில்லை என்றும் அவர் ஆளுநராக நீடிக்க தகுதியில்லை என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்ட ஆர் என் ரவிக்கு அதிகாரமில்லை. தமிழ்நாடு அரசு நிறைவேற்றி தரும் மசோதாக்களுக்கு அங்கீகாரம் தராத ஆர் என் ரவி தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டத்தால் உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளானார்.

தற்போது தமிழ்நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள்
இத்தகைய சூழ்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான மூன்று நாள் மாநாடு நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என ஆர் என் ரவி அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
சட்டத்தை மதிக்காத ஆளுநர்
சட்டத்தை மதிக்காத ஆளுநரின் இந்த செயல் ஏற்புடையது அல்ல. தொடர்ந்து இவர் தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்.
சர்வாதிகாரப்போக்கு
மக்கள் அதிகாரத்தையும் மீறி சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டு வருகிறார். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தையும் கடந்து டெல்லியில் எஜமானர்களுக்கு விசுவாசத்தை காட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்.
வேந்தர்
பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் நீக்கப்பட்டு மாநில முதலமைச்சர் நியமிக்க வழிவகை செய்யும் மசோதா உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதால் தற்போது பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக முதலமைச்சரே செயல்படுகிறார்.
துணை வேந்தர்கள் மாநாடு
இத்தகைய சூழ்நிலையில் எதிர்வரும் 25, 26, 27 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மூன்று நாள் மாநாடு நீலகிரி ஆளுநர் மாளிகையில் நடைபெறுவதாகவும் இந்த மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பார் என்ற அறிவித்திருப்பதும் கடும் கண்டத்துக்குரியது.
தகுதியில்லை
அரசமைப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்றத்தையும் மதிக்காமல் செயல்படும் ஆர் என் ரவி ஒரு நிமிடம் கூட ஆளுநராக நீடிப்பதற்கான தகுதியை முழுமையாக இழந்து விட்டார்.
அத்துமீறல்
ஆளுநரின் அத்துமீறலை குடியரசுத் துணைத் தலைவரும் இணைந்து அங்கீகரித்திருப்பது இந்திய ஒருமை பாட்டிற்கு கேடு விளைவிப்பதாகும்.
அந்த மாநாட்டில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்ய வேண்டும் எனக்கு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு.
எம். எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
இவ்வாறு தனது அறிக்கையில் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசின் மசோதாக்களுக்குக் கூட ஆளுநர் ரவி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவதாக தமிழக அரசு குற்றம்சாட்டியது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதன்படி இனி துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க முடியும். மேலும் மசோதாக்களை ஒப்புதல் அளிக்கவும் உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது.
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை
இந்த நிலையில்தான் ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. எனினும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக் காட்டி துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆளுநர் மாளிகை விளக்கம்
இதற்கிடையே ஆளுநர் மாளிகை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. அதாவது பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா, துணைவேந்தர்கள் மாநாடு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக உதகையில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ள ஆளுநர் மாளிகை, துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications