முழுக்க முழுக்க வதந்தி.. 36 பேரை விடுவியுங்கள்.. முஷ்ரப் குடும்பத்துக்கு நிவாரணம் தேவை: ஜவாஹிருல்லா
மாடு முட்டி உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு நிவாரண தொகை வழங்க ஜவாஹிருல்லா கோரியுள்ளார்
சென்னை: திருப்பத்தூரில் மாடுமுட்டி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு, உரிய நிவாரண தொகையும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கல்நார்சாம்பட்டி பகுதியில் நாட்றம்பள்ளிக்கு அருகிலிருக்கும் கல்நார்சாம்பட்டி கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி எருதுவிடும் விழா நடைபெற்றது.
இதில், 200 மாடுகள் ஓடுவதற்கு அட்டை வழங்கப்பட்டு, அதன்படி 150 மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.. பிறகு, எருதுவிடும் விழா முடிவடைந்ததாக விழாக்குழுவினர் அறிவித்துவிட்டனர்.

சிதறிய கூட்டம்
இதை ஏற்காத சில மாடுகளின் உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளாமல், தங்களது மாடுகளையும் ஓடவிட அனுமதி கேட்டனர். அதற்கு தாசில்தார் அனுமதி மறுக்கவும், ஆத்திரமடைந்த ஒருசில மாடுகளின் உரிமையாளர்கள் வேண்டுமென்றே போலீஸார், பொதுமக்கள் நின்றிருந்த பாதையில், மாடுகளை அவிழ்த்துவிட்டதாக தெரிகிறது.. இதனால், மாடுகள் சீறிப்பாய்ந்து நாலாபக்கமும் தெறித்து ஓட ஆரம்பித்தது. இதை பார்த்து பயந்துபோன கூடியிருந்த மக்களும் சிதறி ஓடினார்கள்..

பரிதாப இளைஞர்
அப்போது, ஒரு காளை மாடு முட்டியதில், ஜோலார்பேட்டை அருகிலிருக்கும் பெரியகம்மியம்பட்டு பகுதியை முஷ்ரப் என்ற 19 வயது இளைஞருக்கு வயிற்றுப் பகுதியில் ஆழமாக காயம் ஏற்பட்டுவிட்டது.. இதனால் அதிக ரத்தங்கள் வெளியேறி அவர் மயக்கம் அடைந்தார். மேலும் முறையான மருத்துவ முகாம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் அங்கு இல்லாததால் சக நண்பர்களே முஷரப்பை தங்களது பைக்கில் அழைத்துச் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது. கவலைக்கிடமான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும், முஷரப் பரிதாபமாக உயிரிழந்தார்..

கலவரம் - தடியடி
இதனிடையே, சம்பவ இடத்தில் போலீஸார் தாக்கியதால்தான் முஷ்ரப் உயிரிழந்தார் என்றவாறு ஒரு தகவல் பரவியதால், சம்பவ இடம் வன்முறைக்களமாக மாறியது.. கலவரம் வெடித்தது. இதில், திருமால் என்ற போலீஸாரை, அங்கு இருந்தவர்கள் கல்லால் தாக்கியதாக தெரிகிறது... மேலும் ஆத்திரம் அடங்காத இளைஞர்கள், திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி-யின் வாகனம் உட்பட போலீசாரின் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு காயங்களும் ஏற்பட்டது. இதனால் கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி, கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.. மேலும், வன்முறையில் ஈடுபட்டதாக 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களையும் பிடித்து போலீஸார், காவலில் வைத்திருக்கிறார்கள்.

ஜவாஹிருல்லா அறிக்கை
இந்தச் சம்பவத்தால், அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், மஞ்சுவிரட்டு நிகழ்வில் மாடு முட்டி உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.. அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்றும் முக்கிய கோரிக்கையையும் தன்னுடைய அறிக்கை வாயிலாக விடுத்துள்ளார்.. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான்:

பீடி தொழிலாளி
"திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை அடுத்துள்ள கல்நார்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்வில் ஜோலார்பேட்டை அடுத்துள்ள கம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்த பீடி தொழிலாளி தவ்லத் என்பவரின் மகன் முஷ்ரப் என்ற 19 வயது இளைஞர் மாடு முட்டி மரணமடைந்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஏழை பீடி தொழிலாளியின் குடும்பத்தை இளைஞர் மரணமடைந்துள்ளதால் அவரது குடும்பம் ஆதவற்ற நிலையில் உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு, மாடு முட்டி மரணமடைந்துள்ள இளைஞரின் குடும்பத்திற்கு உரிய நிவாரண தொகையும் அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோருகிறேன்.

ஜவாஹிருல்லா
அதேபோல், மரணமடைந்த அந்த இளைஞர் காவல்துறையினரால் தாக்கியதால் தான் மரணமடைந்தார் என்ற வதந்தி பரப்பப்பட்டு அதில் கோபமடைந்தவர்கள் சிலர் அப்பகுதியில் காவல்துறையை எதிர்த்துள்ளனர். இதனால் அங்கு அசம்பாவிதம் நடைபெற்றதால் அதை தொடந்து 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஒரு சிறுவன் உட்பட 36 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முழுக்க முழுக்க வதந்திகளால் ஏமாற்றப்பட்ட இளைஞர்களின் எதிர்கால வாழ்வை கருத்தில் கொண்டு கைது செய்யப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி காவல்துறை விடுவிக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications