மாஜி அமைச்சரின் மறைவால் துடித்துப் போனேன்! குறள்நெறிச் செல்வர் உபயத்துல்லா! ஜவாஹிருல்லா உருக்கம்!
திமுக முன்னாள் அமைச்சர் மறைவுக்கு ஜவாஹிருல்லா உருக்கமுடன் இரங்கல்.
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயத்துல்லா மறைவுச் செய்தியறிந்து துடித்துப் போனதாக கூறியிருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.
குறள்நெறிச் செல்வர் என்று அழைக்கப்பட்ட உபயத்துல்லா, அரசியல் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு நல்லதோர் தமிழுணர்வு கொண்டவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள உருக்கமான இரங்கல் வருமாறு;

எஸ்.என்.எம். உபைதுல்லா
தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபைதுல்லா அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். மறைந்த எஸ்.என்.எம். உபைதுல்லா அவர்கள் 2006-2011 வரையில் கலைஞர் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் வணிகவரித்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1989,1996,2001,2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் நான்கு முறை, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

தஞ்சை திமுக
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சாவூர் நகர கழக செயலாளராக பொறுப்பு வகித்துள்ள இவர், திமுக மாநில வர்த்தகர் அணி தலைவராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். அவரை இழந்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அணைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அன்னாரின் உற்றார் உறவினர்கள் அணைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறள்நெறிச் செல்வர்
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியில் அயராது சமூக முன்னேற்றத்திற்கு உழைத்த அவருக்கு கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசின் சார்பில் அறிஞர் அண்ணா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தீவிர அரசியல் செயல்பாடுகளுக்கு மத்தியில் நல்லதோர் தமிழுணர்வு கொண்டவராகவும் இலக்கிய ஆர்வலராகவும் திகழ்ந்துள்ளார். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பணியாற்றிய அவர், குறள்நெறிச் செல்வர் என்று அழைக்கப்பட்டுள்ளார்.

அனுபவம் பேசுகிறது
வண்ணங்கள், அலைகள், எண்ணப்பூக்கள், தோரணம், தூரல் ஆகியவை அவர் எழுதிய நூல்களாகும். "அனுபவம் பேசுகிறது" என்கிற நூல் அவரது அனுபவத்தை தழுவி எழுதப்பட்டுள்ளதுஅரசியலைக் கடந்து என்னிடம் மிகுந்த சகோதரத்துவத்துடன் நெருங்கி பழகியவர். உடல்நலக் குறைவினால் மறைந்தார் என்ற செய்தியை அறிந்து துடித்துப் போனேன். வல்ல இறைவன் அவருக்கு உயரிய சுவனத்தை வழங்க வேண்டும் என்று பிராத்திக்கிறேன். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திமுக தொண்டர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications