எல்லாம் வெறிங்க.. ஓபிஎஸ்சுக்கு எதிராக வரிந்துகட்டி விளாசி தள்ளிய ஜெயக்குமார்
சென்னை: ஓ பன்னீர் செல்வம் பதவி வெறி பிடித்தவர். அதிமுகவுக்கு செய்த துரோகத்திற்காக அவரை ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும் மன்னிக்க மாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
சென்னை ஓட்டேரியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

என்னைவிட ஜூனியர் தான் ஓபிஎஸ்
ஜெயலலிதா மரணத்தில் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர் ஓபிஎஸ் தான் என்று ஆணையம் சொல்கிறது. ஒபிஎஸ் மாதிரி ஒருவரை உலகத்திலேயே பார்க்க முடியாது. கட்சிக்கு அவர் என்ன பெரிய தியாகம் செய்துவிட்டார். என்னைவிட ஜூனியர் தான் ஓபிஎஸ் . முதன் முதலாக ஜெயலலிதா முதல்வராகும் போது 18 அமைச்சர்களை நியமிக்கிறார். அதில் 18-வது ஆளாக நான் இருந்தேன். நான் முதன் முதலாக தேனிக்கு வந்து அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசியபோது, தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்ததாக கூறியவர்தான் ஓபிஎஸ்.

ஜெயலலிதா இருந்தால் இதை சொல்ல முடியுமா
ஓ பன்னீர் செல்வத்தை டிடிவி தினகரனும் சசிகலாவுமே அடையாளம் காட்டினார்கள். ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், முதல்வரை நேரில் பார்த்து பாராட்டி பேசுகிறார். ஜெயலலிதா இருந்தால் இதை சொல்ல முடியுமா.. அதனால்தான் திமுகவின் பி டீம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி இருக்குமா கட்சி இருக்குமா என்ற நிலை வந்தது. பிறகு கட்சி ஒற்றுமையாகிவிட்டது.

ஆண்டிப்பட்டி, பெரியகுளம்
ஆட்சியை பொருத்தவரையில் இடைத்தேர்தல் வந்தது. சட்டமன்ற மினி தேர்தல் போல 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. இதில் ஓபிஎஸ் மாவட்டத்தில் மட்டும் 2 தொகுதிகள் வந்தது. ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலோடு தேர்தல் நடைபெற்றது. உண்மையிலேயே ஜெயலலிதா ஆட்சி நீடிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் நினைத்து இருந்தால் அந்த 2 தொகுதிகளையும் ஜெயிக்க வைத்திருக்க வேண்டும்.

ஓபிஎஸ் பதவி வெறி பிடித்தவர்
9 சீட் ஜெயித்தால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், 2 தொகுதிகளிலும் ஓபிஎஸ் அதிமுகவை தோற்கடித்தார். ஆனால் எம்.பி தேர்தலில் அதிக செலவு செய்து மகனை ஜெயிக்க வைத்தார். 2021 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டார். ஆட்சி அமைந்தால் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வந்துவிடுவார். நமக்கு துணை முதல்வர் பதவிதான் கிடைக்கும் என்பதால் சூழ்ச்சியில் ஈடுபட்டார். ஓபிஎஸ் மாவட்டத்தில் அவரைத்தவிர வேறு யாரும் ஜெயிக்கவில்லை. ஓபிஎஸ் பதவி வெறி பிடித்தவர். அதிமுகவிற்கு துரோகம் செய்வதை ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும் மன்னிக்க மாட்டார்கள்'' என்றார்.












Click it and Unblock the Notifications