OTT.. 4000 கோடி முதலீடு செய்யும் ஜியோ ஹாட்ஸ்டார்.. தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னிக்குச் சொந்தமான இந்தியாவின் மிக பிரபலமான ஓடிடி தளங்களில் ஒன்றான ஜியோஹாட்ஸ்டார், தென்னிந்தியாவில் இருந்து தரமான திரைப்படம் மற்றும் வெப்சீரியஸ்களை தயாரிப்பது மற்றும் வாங்குவது போன்றவற்றுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 4000 முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தமும் செய்திருக்கிறது. இன்று சென்னையில் இதற்கான விழாவும் நடந்தது.
ஹாட்ஸ்டார் (இப்போது ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இரண்டு நிறுவனம் சேர்ந்து நடத்துகின்றன) வட இந்தியாவைவிட தென் இந்தியா பக்கம் கவனத்தை திருப்பி உள்ளது. அடுத்த ஐந்து வருடத்தில் நம்ம தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் சினிமாவுக்காக மட்டும் சுமார் 4,000 கோடி ரூபாய் செலவு செய்து தரமான திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை உருவாக்க அல்லது வாங்க முடிவு செய்திருக்கிறது.

ஏன் இந்த திடீர் ஆர்வம்?
இப்போது பாலிவுட் படங்களின் மார்க்கெட் டால் அடித்து வருகிறது. அதேநேரம் தென்னிந்தியப் படங்கள் தான் செம ஹிட் அடித்து வருகிறது. தென்னிந்திய படங்கள் எல்லாமே உலகமெங்கும் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுதவிர ஜியோ ஹாட் ஸ்டாரை பொறுத்தவரை 70 சதவீதம்பேர் தென்னிந்தியர்கள் ஆவார். இன்னும் 20 கோடி சப்ஸ்கிரைபர்களை அதிகப்படுத்த ஜியோ ஹாட் ஸ்டார் திட்டமிட்டிருக்கிறது. அதனால் புதிதாக நிறைய வெப் சீரிஸ்கள், நல்ல படங்களை (குறிப்பாக தியேட்டில் வந்த பின்னர்) வாங்கி குவிக்க முடிவு செய்திருக்கிறது.
எனவே ஹாட்ஸ்டாரில் சவுத் இந்தியன் கன்டென்ட் இன்னும் நிறைய, பிரம்மாண்டமாக வரப்போகிறது. தற்போதைய நிலையில் ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.
இதனிடையே சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ஜியோஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் 40 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சாமிநாதன் மற்றும் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
4000 கோடி முதலீடு
இதில் ஜியோ ஹாட்ஸ்டார் தென்னிந்தியாவில் தரமான திரைப்படங்களை தயாரிப்பதற்காக 4,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதில் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசுடன் இணைந்து திரைப்படங்கள், இணையத்தொடர், உள்ளடக்கம் போன்றவற்றை உருவாக்க ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக இன்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "நான் எப்போதும் சொல்வதுதான். நல்ல கண்டன்ட் தான் இப்போது ராஜா. கண்டன்ட் நன்றாக இருந்தால் அது எப்போதும் மக்களால் கொண்டாடப்படும். கண்டன்ட் நன்றாக இருந்தால் மொழி, இனத்தை தாண்டி அதற்கான வரவேற்பு அனைத்து இடங்களிலும் கிடைக்கும். அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது.
கமல் சார் உதாரணம்
எனவே இன்றைய சூழலில் புதிய தொழில்நுட்பங்களை கலைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம், அவசியம் அகும். எதை கற்றுக்கொள்ள வேண்டும், எப்படி கற்றுக்கொள்ள வேண்டும், அதை எப்படி கலையாக கொண்டுவர வேண்டும் என்பதற்கு கமல்ஹாசன் சார் ஒரு சிறந்த உதாரணம், நம் எல்லோருக்கும் அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். இப்போதும் கமல் சார் கற்றுக்கொள்கிறார்.
2012ம் ஆண்டிலேயே கமல் முயற்சித்தார்
தற்போதும் திரைத்துரையில் வரும் புதிய அம்சங்களை பரிசோதித்து பார்ப்பதில், கற்றுக்கொள்வதில் முதல் ஆளாக இருக்கிறார். தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு பெரிய திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடும் முன்னோடி முயற்சியை கமல்ஹாசன் 2012 ஆம் ஆண்டே மேற்கொண்டார். ஓடிடி சினிமாவுக்கு மாற்றாகாது." இவ்வாறு கூறினார்












Click it and Unblock the Notifications