ஜாலி டூருக்கு குடும்பத்தோடு கிளம்பும் அரசு ஊழியர்கள்.. ஆனால் ஒரு விநோத உத்தரவு.. அது என்ன தெரியுமா?
சென்னை: பீகார் மாநிலத்தின் நிர்வாக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், அம்மாநில அரசு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இப்படியொரு அறிவிப்பை வெளியிடவும், இதைக்கேட்டு அங்குள்ள அரசு ஊழியர்கள் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள். அப்படியென்ன அறிவிப்பு தெரியுமா?
பீகார் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் ஒரு விசித்திரமான மற்றும் வரவேற்கத்தக்க திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பீகார் அரசு ஊழியர்கள்
பொது நிர்வாகத் துறையின் கூடுதல் செயலர் ராஜேந்திரா இது தொடர்பாக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, பீகாரில் உள்ள அனைத்து அரசு உயரதிகாரிகளும், ஊழியர்களும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். இந்த சுற்றுலா பயணம் வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்கப்படாமல், அரசின் ஒரு முக்கிய நடவடிக்கையாகவே மாற்றப்பட்டுள்ளது. இந்த பயணங்கள் இரண்டு பகல் மற்றும் இரண்டு இரவு கொண்டதாக இருத்தல் அவசியம் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த சுற்றுலாவை திட்டமிட்டு, வார இறுதி நாட்களை குடும்பத்துடன் பயனுள்ள வகையில் கழிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு சுற்றுலா பயணத்தின் போதும், மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுச்சூழல் தலங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மறைக்கப்பட்ட சுற்றுலா இடங்கள் என குறைந்தது 3 இடங்களையாவது கட்டாயம் சுற்றிப் பார்க்க வேண்டுமாம்.
ஜாலி டூரில் இதுதான் ஸ்பெஷாலிட்டி
இந்த உத்தரவில் உள்ள மிக முக்கியமான ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், அதிகாரிகள் அந்த சுற்றுலா செல்லும் இரண்டு நாட்களையும் அரசுப் பணியில் இருந்ததற்கான நாட்களாகவே அரசு கருதும்.
அதாவது இந்த நாட்களில் அவர்கள் அலுவலகப் பணிகளைத் தொடராவிட்டாலும், அது பணிக்காலமாகவே கணக்கிடப்படும். இருப்பினும், இதில் ஒரு கடுமையான கட்டுப்பாடும் உள்ளது. அதிகாரிகள் சுற்றுலா செல்லும் இடங்களில் தங்கியிருக்கும்போது எந்தவிதமான அரசு ஆய்வு கூட்டங்களையோ, பணி நிமித்தமான ஆய்வுகளையோ அல்லது கோப்புகளைப் பார்க்கும் பணிகளையோ மேற்கொள்ளக் கூடாது.
சுற்றுலா தலங்களில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைகளில் கூட, அதிகாரிகளுக்கான அலுவலகப் பணிகளைச் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் முழு நேரத்தையும் குடும்பத்துடன் செலவிட வேண்டும் என்பதே இந்த அரசின் நிபந்தனை.
போட்டோக்கள், விரிவான அறிக்கை
இந்த பயணத்தை முடித்த பிறகு, அதிகாரிகள் தாங்கள் சென்ற இடங்களின் அனுபவங்கள், அங்கு எடுத்த போட்டோக்கள் மற்றும் அந்த இடங்களின் வரலாற்று பின்னணி குறித்த விரிவான அறிக்கையைத் தங்கள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட மற்றும் மண்டல அளவிலான உயர் அதிகாரிகள், காவல்துறையின் எஸ்பி.க்கள், டி.எஸ்.பிக்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தை தவிர்த்து, மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கு சென்று சுற்றுலாவை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் அதிகாரிகள் அறிந்துகொள்ளவும், உள்ளூர் கலாச்சாரத்தை புரிந்துகொள்ளவும் உதவும் என அரசு கருதுகிறது.
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி
தொடர்ச்சியான பணிச்சுமை மற்றும் நிர்வாக அழுத்தத்தால் சோர்ந்து போயிருக்கும் அரசு ஊழியர்களுக்கு, இந்த கட்டாய சுற்றுலா திட்டம் ஒரு மிகப்பெரிய புத்துணர்ச்சியை அளிக்கும் என்றே தெரிகிறது.. இது அரசு ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், பீகாரின் சுற்றுலாப் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், அரசு ஊழியர்களை மாநிலத்தின் பெருமைகளை அறிய வைக்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, பீகார் நிர்வாக அமைப்பில் ஒரு புதிய கலாச்சார மாற்றத்தை உருவாக்கியுள்ளது. அதிகாரிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த திட்டம், வருங்காலத்தில் பிற மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைய வாய்ப்புள்ளது...!!












Click it and Unblock the Notifications