Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. இந்நிலையில் தான் ''தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான கொங்கு நாட்டில் செல்வாக்கு மிகுந்த, 38 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பானமை சமூகமாக உள்ள கொங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் அருந்ததியர் சமூகங்களுக்கு முழுக்கவும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் தேர்தல் வரலாற்றில் இதற்குமுன்பு நிகழ்ந்திராத ஒன்று'' என்று கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நீண்ட இழுபறிக்கு பிறகு 27 தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டது. இன்னும் மதுரை மாவட்டம் மேலூர் சட்டசபை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்க வேண்டி உள்ளது.

jothimani-mp-alleged-that-the-congress-party-has-neglected-the-majority-of-kongu-vellala-gounder-com

இந்நிலையில் தான் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு பற்றி அந்த கட்சியை சேர்ந்த கரூர் எம்பி ஜோதிமணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி ஜோதிமணி எம்பி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

வேதனையாக இருக்கிறது

''காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 12 சட்டசபை உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் மீதமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் மனக்குமுறலையும், கொந்தளிப்பையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
வேட்பாளர்கள் முன்பே முடிவுசெய்யப்பட்டு, அதற்கேற்ப தொகுதிகள் கேட்டு வாங்கப்பட்டுள்ளன.

நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிற, தகுதியும், மக்கள் செல்வாக்கும், வெற்றி வாய்ப்பும் உள்ள பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இருபது ஆண்டுகள், முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பலர் இருக்கும்போது அந்த இடத்தில் கட்சிக்கு வந்து சில நாட்கள், சில வருடங்களே ஆன, கள அனுபவம் இல்லாத சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .

கொங்கு வெள்ளாள கவுண்டர் புறக்கணிப்பு

தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான கொங்கு நாட்டில் செல்வாக்கு மிகுந்த, 38 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பானமை சமூகமாக உள்ள கொங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் அருந்ததியர் சமூகங்களுக்கு முழுக்கவும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் தேர்தல் வரலாற்றில் இதற்குமுன்பு நிகழ்ந்திராத ஒன்று.

கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் உட்பிரிவுகளுக்கு இரண்டு தொகுதிகளை வழங்கியுள்ள காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மையான கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைப் புறக்கணித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதே போல 28 தொகுதிகளில் ஆறு தனித்தொகுதிகளைக் கேட்டுப்பெற்ற காங்கிரஸ் கட்சி, மிகவும் பின் தங்கிய, விளிம்புநிலை சமூகமான அருந்ததியர் சமூகத்திற்கு வாய்ப்பை மறுத்திருக்கிறது. இரண்டு பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தை பற்றி கவலையில்லை

இது காங்கிரஸ் கட்சியின் சமூக நீதிக் கோட்பாட்டிற்கும், சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்காகப் போராடும் தலைவர் ராகுல்காந்தியின் அரசியல் நிலைப்பாட்டிற்கும் எதிரானது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், சட்டமன்ற கட்சித் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றியோ, தமிழ்நாடு எதிர் நோக்கியுள்ள கடுமையான அரசியல் சூழலைப் பற்றியோ, உண்மையான கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைப் பற்றியோ எவ்வித கவலையும், அக்கறையும் இல்லை என்பது தெளிவு.

இவர்களின் பட்டியலை ஏற்க மறுக்கின்ற உரிமை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் உண்டு. அதுதான் காங்கிரஸ் கட்சியின் வலிமையான ஜனநாயகத் தன்மை. இந்த பேரழிவைத் தடுத்து நிறுத்த நாங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெறவில்லை. ஆனால் நாங்கள் உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை உள்வாங்கி, அவர்கள் எண்ணங்களைப் பிரதிபலித்தோம். அவர்களைக் கைவிட்டுவிடவில்லை என்கிற திருப்தி மட்டுமே எஞ்சியுள்ளது.

அந்நியமாக உணர்கிறேன்

முப்பது ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியுள்ளேன். எவ்வளவோ கடினமான காலங்களை, சவால்களை கட்சி எதிர்கொண்டபோதெல்லாம் உணர்வுப் பூர்வமான ஒத்துழைப்புடன் பணியாற்றியிருக்கிறேன். போராடியிருக்கிறேன். முதன்முதலாக மிகவும் அந்நியமாக உணர்கிறேன்.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும், அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து வாக்குப்பதிவு முடிந்தபிறகே விரிவாகப் பேசவிரும்புகிறேன். இந்த நேரத்தில் மனம்சோர்ந்து போயிருக்கின்ற, தமிழ்நாட்டில் ஏறக்குறைய அறுபது ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதும், காங்கிரஸ் கொடியை பெருமையோடு உயர்த்தி பிடித்திருக்கின்ற ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் எனது பேரன்பையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் அர்ப்பணிப்பிற்குத் தலைவணங்குகிறேன்'' என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+