விஜய் போட்டியிட்டு வெல்வதே கடினம்.. பிரசாந்த் கிஷோர் சொல்வது உண்மைதான்.. பத்திரிகையாளர் மணி கணிப்பு!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டு வெல்வதே கடினம் என்று பத்திரிகையாளர் மணி கணிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தவெக தலைவர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டுமென்றால், ஒரு தொகுதியில் சுமாராக 30 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதன்பின் விக்கிரவாண்டியில் நடத்திய மாநாடு அக்கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டம், கிராமங்கள்தோறும் தவெகவில் அணிகள் உருவாகியது. கடந்த ஓராண்டாக தவெகவின் கட்டமைப்பு பணிகளில் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்ததாக மதுரையில் 2வது மாநில மாநாட்டை ஆகஸ்ட் 25ஆம் தேதி நடத்த தவெக திட்டமிட்டு வருகிறது. இதனிடையே தவெக தலைவர் விஜய் நிர்வாகிகளை பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார். அதேபோல் தவெக இந்த சட்டசபைத் தேர்தலில் 15 முதல் 18 சதவிகிதம் வரை வாக்குகளைப் பெறும் என்று அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியைப் போல் அல்லாமல் தவெக சார்பாக போட்டியிடுவோரில் குறைந்தது 5 எம்எல்ஏ-க்களை வருவார்கள் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர் மணி யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயால் கண்டிப்பாக வெற்றிபெற முடியாது. ஆனால் விஜயால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
அதனைப் பார்த்த திமுக விஜயை பார்த்து அஞ்சுகிறது. பிரசாந்த் கிஷோர் சொன்ன கணக்கு உண்மைதான். தவெகவுக்கு 15 முதல் 20 சதவிகிதம் வரை வாக்குகள் செல்ல வாய்ப்புகள் உள்ளது. இது அதிமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். திமுகவை விட அதிமுக மற்றும் பாஜகவுக்கு பாதிப்பு அதிகம். 4 முனைப் போட்டியில் முதல்வர் வேட்பாளராக விஜயை கூறத் தொடங்கிவிட்டார்கள்.
விஜய் வெல்வதே கடினமானது. ஒரு தொகுதியில் 30 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகள் பெற்றால் மட்டுமே வெல்ல முடியும். திமுக மற்றும் அதிமுகவுக்கு அடித்தளம் வலுவாக உள்ளது. அவர்களின் பலம் கூடுதாக இருக்கிறது. சிவாஜி கணேசன் தேர்தலில் தோல்வி அடைந்தார். எம்ஜிஆர் தோல்வியடைந்த பின்னரும் கூட ஜானகி அணியுடன் இணைந்து போட்டியிட்ட போதும் தோல்வி அடைந்தார்.
விஜய்-க்கு கூடும் கூட்டத்தை முற்றிலுமாக புறந்தள்ளவும் முடியாது. அதேபோல் கூட்டத்தை வைத்து முடிவும் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் ஏற்கனவே நாகை தொகுதியில் போட்டியிட முடிவு எடுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இதன்பின் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
ஏற்கனவே தவெக தரப்பில் ஒவ்வொரு மாதமும் கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில், விஜய் தனக்குச் சாதகமான தொகுதியில் போட்டியிடுவார். அதேபோல் விஜய்க்கு எதிராக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வலுவான வேட்பாளர்களை நிறுத்த தயாராக இருப்பார்கள். இதனால் விஜய் வெல்வதே மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications