விசிக, கம்யூனிஸ்டுகள் ஆதரவு தந்தால்! பெரும்பான்மை கிடைக்கும்! கூடவே விஜய்க்கு தலைவலியும் வரும்!
சென்னை: திமுக அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தால் தமிழகத்தில் என்ன நடக்கும்? விஜய்க்கு 6 மாதம் டைம் கொடுக்க ஸ்டாலின் யார் என்றெல்லாம் பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆட்சி அமைக்குமா அல்லது திமுக-அதிமுக கைகோர்க்குமா என்ற விவாதங்கள் அனல் பறக்கின்றன.

"விஜய் முதலமைச்சராவதை திமுக ஒருபோதும் விரும்பாது; வெளியே பெருந்தன்மையாக வேஷம் போட்டாலும், உள்ளுக்குள் அவர்களுக்கு எரிச்சல் தாளவில்லை" என்று மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடியாகத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய மணி, வாக்கு சதவீதம் 80-ஐத் தாண்டினால் அது ஆட்சி மாற்றத்திற்கான தெளிவான அறிகுறி என்றார். திமுகவை மக்கள் தீர்க்கமாக நிராகரித்துவிட்டனர் என்பதற்கு 133 இடங்களிலிருந்து 59 இடங்களுக்கு அவர்கள் சரிந்ததே சாட்சி.
முதலமைச்சரே தோற்கடிக்கப்படுகிறார் என்றால், அந்த ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் கடும் கோபத்தையே அது காட்டுகிறது. ஊடகங்கள் இதைக் கணிக்கத் தவறிவிட்டன அல்லது எழுதத் தயங்கிவிட்டன என்று அவர் விமர்சித்தார்.
விஜய்யின் வெற்றிக்கு ஈவிஎம் (EVM- மின்னணு வாக்கு பதிவு இயந்திர முறைகேடு) தான் காரணம் என்று கூறுவது அபத்தமானது என்று மணி குறிப்பிட்டார். பாஜக தோற்றுள்ள நிலையில், மோடி தனது சொந்தச் செலவிலேயே சூனியம் வைத்துக் கொள்வாரா என்று கேள்வி எழுப்பிய அவர், தோல்வியை ஏற்க மனமில்லாதவர்களே இத்தகைய புகார்களைக் கூறுகின்றனர் என்றார்.
மக்களின் தீர்ப்பை மதிக்கத் தெரியாதவர்கள் ஜனநாயகத்திற்குப் புறம்பாகப் பேசுகிறார்கள் என்பது அவரது வாதமாக இருந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைப்பது அவருக்குப் பெரும் தலைவலியை உருவாக்கும் என்று மணி எச்சரிக்கிறார்.
தென்னிந்தியா முழுவதும் (ஆந்திராவை தவிர்த்து) காங்கிரஸ் பிடியில் செல்வதை மோடி விரும்ப மாட்டார் என்பதால், ஆளுநர் அழைப்பு விடுப்பதில் தாமதம் ஏற்படலாம்.
மேலும், இடதுசாரிகளும் விசிகவும் விஜய்க்கு ஆதரவு அளித்தால், அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் பிஜேபிக்கு எதிராகத் தீர்மானம் போடச் சொல்லி விஜய்க்கு அழுத்தம் கொடுப்பார்கள்; இது நிர்வாகச் சிக்கல்களை உருவாக்கும்.
விஜய் அரசு ஐந்து ஆண்டுகள் நிலைக்க வேண்டுமானால், அதற்கு அதிமுகவின் ஆதரவு மட்டுமே ஒரே வழி என்று மணி அடித்துக் கூறுகிறார். 47 எம்எல்ஏக்களை வைத்துள்ள அதிமுக, அடுத்த ஐந்து ஆண்டுகள் அதிகாரமில்லாமல் இருப்பதைத் தாங்க முடியாது.
எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் பிடித்தாலும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விஜயை ஆதரிக்க வாய்ப்புள்ளது. அதிமுகவின் பொற்காலம் முடிந்துவிட்ட நிலையில், அக்கட்சியைத் தக்கவைக்க விஜயுடன் உடன்படிக்கை செய்துகொள்வது அவர்களுக்கு அவசியமாகிறது.
திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கும் என்ற வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுபவை என்று மணி விளக்கினார். விஜய் சிஎம் ஆவதைத் திசைதிருப்பவே இத்தகைய செய்திகள் கிளப்பப்படுகின்றன. ஸ்டாலின் "ஆறு மாதம் பொறுத்திருப்போம்" என்று கூறுவது ஒரு மென்மையான மிரட்டல் போன்றது.
எது எப்படியோ, தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த இழுபறி நிலை, வரும் நாட்களில் இன்னும் பல அதிரடி மாற்றங்களைச் சந்திக்கும் என்பது மட்டும் உறுதி. இவ்வாறு மணி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications