உச்சக்கட்ட டென்சனில் அதிமுக, தீபா .. நாளை வெளியாகிறது வேதா இல்லம் தொடர்பான தீர்ப்பு..!
சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமை ஆக்கியது செல்லாது என்ற உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு ரூ.67.90 கோடி ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

சாவியை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டது தவறு என வாதங்களை தீபாவும், தீபக்கும் முன்வைத்தனர். மிகவும் பரபரப்பாக எதிர்நோக்கப்பட்ட இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வேதா இல்லத்தை அரசுடமையாக்க நிலம் கையகப்படுத்திய அறிவிப்பு, அரசாணை ரத்து செய்யப்படுகிறது எனவும், உத்தரவு நகல் கிடைத்த 3 வாரத்தில் போயஸ் தோட்ட இல்லத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

வேதா இல்ல சாவி ஒப்படைப்பு
இதனையடுத்து வேதா இல்லத்தின் சாவியை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தீபா, தீபக் ஆகிய இருவரிடம் வழங்கினார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தனது அத்தையான தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ,ஜெயலலிதா அவர்கள் வசித்த போயஸ் தோட்டத்திலுள்ள வேதா இல்ல சாவி தனது அண்ணன் மற்றும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், சாவியை தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையிம் எனவும் ஜெ.தீபா கூறினார்.

அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் வழக்கு
இந்நிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேலுமுறையீடு செய்ய அனுமதி அளிக்கக்கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்குக் தொடர்ந்தார். கடந்த மாதம் 15ஆம் தேதி விசாரணையின் போது அதிமுகவுக்கும், போயஸ் கார்டனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும், அதிமுக ஆட்சியின் கொள்கை முடிவு என்பதால் மேல்முறையீடு செய்வதாகவும், எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கபட்டது.

மேல்முறையீடு செய்ய அனுமதி
இதனையடுத்து , முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அதிமுக சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அன்றே மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு 20ஆம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

வேதா இல்ல வழக்கில் நாளை தீர்ப்பு
வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில் நாளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்ல வழக்கை அரசுடைமை ஆக்கியது செல்லாது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அதிமுகவினரிடையே உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வேதா இல்லத்துக்குள் தீபா சென்ற நிலையில் அவருக்கும் வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது குறித்த அச்சம் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications