இது தமிழக பட்ஜெட் போல் இல்லையே.. ஏதோ சென்னை கார்பரேஷன் பட்ஜெட் மாதிரி இருக்கே.. கே சி பழனிச்சாமி
சென்னை: இது தமிழக பட்ஜெட் போல் தெரியவில்லை என்றும் சென்னை கார்பரேஷன் பட்ஜெட்டை போல் உள்ளதாகவும் அதிமுக முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் 2022- 2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் திறனை மேம்படுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வானிலை
வானிலையைத் துல்லியமாகக் கணிக்க சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட வானிலை மேம்பாட்டுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படும். தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் செஸ் ஒலிம்பியாட் ஒரு திருப்புமுனையாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாவரவியல் பூங்கா
சென்னை அருகே 300 கோடி ரூபாயில் தாவரவியல் பூங்கா, முதற்கட்டமாக 149 சமத்துவபுரங்களைச் சீரமைக்க 190 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற பகுதிகளை பசுமையாக்க 500 பூங்காக்கள் அமைக்கப்படும். சென்னையை மேம்படுத்தும் சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிண்டி சிறுவர் பூங்கா
கிண்டி சிறுவர் பூங்காவை மறுவடிவமைத்து இயற்கைப்பூங்காவாக மாற்ற 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்த ஏற்பாடு செய்யப்படும். மழைக்காலத்தில் தரைப்பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கும் இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈசிஆர் சாலை
ஈசிஆர் சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற 135 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 'நான் முதல்வன்' திட்டத்திற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் புத்தொழில் மையம் அமைக்க 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத்திற்கு 1,520 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

சென்னையை மையமாக கொண்டு
இது போல் இந்த பட்ஜெட்டில் பெரும்பாலானவை தமிழக தலைநகர் சென்னைக்கே ஒதுக்கப்பட்டதாக அதிமுக முன்னாள் எம்பி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கே சி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழக அரசு பட்ஜெட் பார்ப்பதற்கு சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை போல் உள்ளது.

நிதி ஒதுக்கீடு
இந்த பட்ஜெட்டில் சென்னையை மையமாக வைத்தே பெரும்பாலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதை வைத்து பார்க்கும் போதுதான் இது அடுத்த ஓராண்டுக்கு தமிழகத்திற்கான பட்ஜெட் இல்லை என்பது தெரிகிறது. மேலும் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்த குடும்பத் தலைவிகளுக்கான ரூ 1000 வழங்குவதற்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை டேக் செய்து கே சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications