கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. ஓய்வூதிய திட்ட அறிவிப்பு வருமா? தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல்
சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
நாளை காலை 9.30-க்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.. மறுநாள்வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார். அந்த வகையில் வேளாண்மை பட்ஜெட் 15-ந் தேதி (சனிக்கிழமை) தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 17-ந் தேதி சட்டசபையில் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கும்.இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

எகிறும் எதிர்பார்ப்புகள்
நாளை நடைபெற உள்ள தமிழக பட்ஜெட்டில், கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிடுவார். அத்துடன் வரப்போகும் நிதியாண்டில் அரசு மேற்கொள்ள போகும் செலவுகள், வருவாய் வரவுகள் போன்றவைகளை உத்தேசமாக அவையில் வழங்குவார்.
இவைகளை தவிர சில முக்கிய அறிவிப்புகளை எதிர்நோக்கி தமிழகம் காத்து கொண்டிருக்கிறது.. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை பெறுவோரின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்பதால், புதிய திட்டங்கள் வேறு ஏதேனும் வெளியாகுமா? அல்லது தற்போதுள்ள திட்டங்களில் மேலும் விரிவாக்கம் செய்யப்படுமா? என்ற ஆர்வம் பெருகி வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்?
அதேபோல, அரசு ஊழியர்கள் திமுக அரசு மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சரண் விடுப்புகளை பணம் ஈட்டும் அனுமதி போன்ற எண்ணற்ற கோரிக்கைகளுடன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாமல் உள்ளனர்..
சமீபத்தில் எ.வ.வேலு நடத்திய பேச்சுவார்த்தையில், பட்ஜெட்டில் நல்லது எதிர்பார்க்கலாம், ஸ்டிரைக் அறிவிப்பை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார். எனவே அரசு ஊழியர்களுக்கான நல்ல செய்தி பட்ஜெட்டில் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எகிறும் ஆர்வம் - பரபரப்பு
அதேபோல, திமுக தந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதால், அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் அதுதொடர்பான அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் வெளியிட வாய்ப்பு உள்ளது. சட்டமன்ற தேர்தலும் நெருங்கி வருவதால், இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு எதிர்பார்ப்பை உண்டுபண்ணி வருகிறது.
அடுத்த 2026-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் வருகிறது. தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டைதான் இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். எனவே இப்போது தமிழக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்தான் முழுமையாக இருக்கும் என்பதால், கூடுதல் முக்கியத்துவத்தை நாளைய பட்ஜெட் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications