ரூ.1000 உரிமை தொகை.. முகாம் தொடங்கி 1 வாரம் ஆகிடுச்சே.. கவனிச்சீங்களா? பெண்களுக்கு குட்நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் கலைஞர் உரிமை தொகையான மகளிருக்கான ரூ. 1000 வழங்கும் திட்டம் எந்த விதமான புகாரும் இன்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. முகாம்களில் சில சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் புகார் வைக்கும் அளவிற்கு பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படவில்லை.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுக்க இதற்கான முகாம்களை முதல்வர் ஸ்டாலின் ஒரு வாரத்திற்கு முன் தொடங்கி வைத்தார். இதற்கான முகாம்கள் நடந்து வரும் நிலையில் ஒருவேளை உங்களுக்கு இன்னும் விண்ணப்பங்கள் வரவில்லை என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அதன்படி விடுபட்ட மக்களுக்கு விண்ணப்பங்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 1 முதல் 4 ஆம் தேதி வரை மீண்டும் கலைஞர் உரிமைத்தகைக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். முதல் கட்டமாக வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கப்பட்ட போது விடுபட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக மீண்டும் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இரண்டாம் கட்ட முகாம்களில் அதை டோக்கன் அடிப்படையில் கொடுக்கலாம்.
இந்த நிலையில் முகாம்களில் பெரிதாக எந்த பிரச்சனையும் இன்றி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. முகாம்களில் பின்வரும் சம்பவங்கள் நடக்கின்றன.
1. எல்லா மாவட்டங்களும் கிட்டதட்ட 500 முகாம்களை கொண்டு இருக்கின்றன. பெரும்பாலும் முகாம்கள் பள்ளிகளில் உள்ள மைதானங்களில் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் கூட்டங்களை சமாளிக்க முடிகிறது.
2. முகாம்களில் கழிப்பறை, குடிநீர் வசதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்காகவே கல்லூரி, பள்ளி வளாகங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
3. இந்த முகாம்களை தமிழ்நாடு முழுக்க மாவட்ட ஆட்சியர்கள் உடனடி ஆய்வு செய்து வருகின்றனர். முகாம்கள் சரியாக நடக்கிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
4. இந்த முகாம்களில் ரேஷன் கார்ட் அவசியமாக கேட்கப்படுகிறது. அதேபோல் ஆதார் சீடிங் செய்ய ஆதார் கார்டு , அதோடு இணைக்கப்பட்டு உள்ள போன் நம்பர் அவசியமாக கேட்கப்படுகிறது. இதை வைத்து பெறப்பட உள்ள ஓடிபி கேட்கப்படுகிறது.
5. பெரும்பாலும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன. சர்வே டவுன் ஆக உள்ள பட்சத்தில் ஆப் லைனில் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன.
6. ஏற்கனவே விண்ணப்பத்தை பெண்கள் பூர்த்தி செய்துள்ளனர். அதேபோல் டோக்கனில் நம்பர் இருப்பதால் நேராக குறித்த நேரத்திற்கு வந்து ஓடிபி சொல்லிவிட்டு விண்ணப்பத்தை கொடுக்கும் அளவிற்கு இந்த செயல்முறைகள் எளிதாக உள்ளன. அதனால் பெரிய அளவில் கூட்ட நெரிசல்கள் இல்லை.
குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
விண்ணப்பப் பதிவு முகாம்களை இரண்டு கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது .
முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 முகாம்கள் நடைபெற்று வருகின்றன. நியாய விலைக் கடை பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக விண்ணப்பங்களையும், டோக்கன்களையும் விநியோகம் செய்து வருகின்றனர்.
முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம்களில் முதல் மூன்று நாட்களில், 26.07.2023, மாலை 6.00 மணி வரை 36,06,974 விண்ணப்பங்கள் இணையதளம் வழி பெறப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு 34,350 தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு நியாய விலைக் கடையிலும் இருக்கும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விண்ணப்பம் பதிவு செய்ய தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் பயனாளிகளின் விண்ணப்பங்களைச் சரிபார்க்கவும் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கும் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உதவி மையத்திலும் ஒரு தன்னார்வலர் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு உதவி செய்வார். மீதம் உள்ள 14,825 நியாய விலைக்கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு இரண்டாம் கட்ட முகாம்கள் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் விநியோகம் முகாம் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன்னதாகத் தொடங்கும்.
அனைத்து முகாம்களிலும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான இருக்கைகள், குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்கான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications