கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்- மேலும் 7 பேர் உயிரிழப்பு-பலி 49 ஆக அதிகரிப்பு- 30 பேர் கவலைக்கிடம்!
சென்னை: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உட்பட 7 பேர் இன்று உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் 30 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் துக்க வீட்டில் 200க்கும் மேற்பட்டோர் அங்கு 'கொடுக்கப்பட்ட' கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். இதனை குடித்த அனைவருமே கடுமையாக உடல்நலன் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம் , விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 3-ல் தொடங்கி தற்போது 49 ஆக அதிகரித்துள்ளது. சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உட்பட 7 பேர் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் உயிரிழப்பு விவரம்:
கள்ளக்குறிச்சி- 27
சேலம் - 15
விழுப்புரம் - 4
புதுச்சேரி ஜிப்மர் - 3
மொத்தம் 49 பேர் மரணம்.
தற்போதைய நிலையில் மருத்துவமனைகளில் மொத்தம் 89 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 30 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் ஒரே தெருவில் 12 பேர் கள்ளச்சாராயத்தால் மாண்டு போயிருக்கின்றனர். கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க தவறியதால் மாவட்ட ஆட்சியர் முதல் கடைநிலை போலீசார் வரை தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன.
மேலும் தமிழ்நாடு அரசு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் வழங்கி உள்ளது. தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சென்று இந்த நிதி உதவியை வழங்கினார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழு கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தது.
இதேபோல தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, செல்வப் பெருந்தகை, அண்ணாமலை, திருமாவளவன், நடிகர் விஜய், உள்ளிட்ட பலரும் கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கவில்லை என்பது அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு. தமிழ்நாடு அரசைக் கண்டித்து பாஜக நாளை போராட்டம் அறிவித்துள்ளது. அண்ணா திமுக ஜூன் 24-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி ஜூன் 24-ல் திமுக கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போராட்டம் நடத்த உள்ளது.












Click it and Unblock the Notifications