நண்பேன்டா.. ரஜினிகாந்த் வீட்டுக்கு ஓடோடிச் சென்ற கமல்ஹாசன்! கையில் ’இருந்ததை’ கவனிச்சீங்களா? சூப்பர்
சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் வருகின்ற ஜூலை 25ஆம் தேதி எம்பியாக பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் தனது நீண்ட கால நண்பரும், நடிகருமான ரஜினிகாந்தை சந்தித்து வெற்றிச் சான்றிதழை காண்பித்து மகிழ்ந்திருக்கிறார். 'புதிய பயணத்தை நண்பருடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்" என எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்தை சந்தித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் கமலஹாசன்.
எம்ஜிஆர் விஜயகாந்த் வரிசையில் அரசியலில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகர் கமலஹாசன். நடிப்பில் தற்போதைய பல்கலைக்கழகம் என்றால் அது கமலஹாசன் தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து தமிழக அரசியலில் களம் கண்டார்,
ஆனால் அனைத்து தேர்தல்களிலும் அவருக்கு தோல்வியே மிஞ்சியது. கட்சி ஆரம்பித்த புதிதில் அதிமுகவை விட திமுகவை தான் கமலஹாசன் அதிகம் விமர்சித்திருக்கிறார். குறிப்பாக ஸ்டாலின் பேச்சு, நடவடிக்கைகள், அவரது அரசியல் ஆகியவற்றை குறி வைத்து கமலஹாசனின் அட்டாக் இருந்தது.

தொடர்ந்து காங்கிரஸ் உடன் நெருக்கம் காட்டியவர் ராகுல் காந்தி மூலம் திமுக கூட்டணிக்கு திரும்பினார் இந்நிலையில், தமிழகத்தில் காலியாகவிருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல், கடந்த ஜூன் 19ஆம் தேதி நடைபெற்றது. திமுக தனக்கு கிடைக்க வாய்ப்பிருந்த மாநிலங்களவை உறுப்பினர் சீட்டுகளில் நான்கில் ஒரு சீட்டை கமலஹாசனுக்கு கொடுத்தது. கூட்டணியில் நீண்ட காலமாக இருக்கும் காங்கிரஸ்க்கும், மதிமுகவுக்கும், விசிகவுக்கும் தராத வாய்ப்பை கூட்டணியில் சேர்ந்த ஒரே ஆண்டில் கமலஹாசனுக்கு வழங்கியது திமுக.
விக்ரம் படத்தின் மூலம் சினிமாவிலும் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்கிய கமலஹாசன், இந்தியன் 2, தக் லைஃப் கொடுத்த தோல்வியால் துவண்டு போயிருக்கிறார். இதை அடுத்து அரசியலில் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்க வேண்டும் என நினைத்தது மாநிலங்களவை உறுப்பினர் சீட்டை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் கமலஹாசன் வெற்றியும் பெற்றார்.
தொடர்ந்து அன்றைய தினமே அவருக்கு மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிலையில், கமலஹாசன் எப்போது பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருகிற 25ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக கமலஹாசன் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு பதவி ஏற்பார் என மக்கள் நீதி மய்யம் அறிவித்தது. இந்த நிலையில் தான் தனது புதிய அரசியல் பயணத்தை ரஜினிகாந்தை சந்தித்து தொடங்கி இருக்கிறார் கமலஹாசன்.
இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டுக்கு சென்ற கமலஹாசன் மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட சான்றிதழை ரஜினிகாந்திடம் காண்பித்து மகிழ்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார் கமலஹாசன்.
நடிப்பில் கமலஹாசன் ரஜினிகாந்த் இடையே போட்டி இருந்தாலும் இருவரும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்த நிலையில் பரஸ்பரம் பேசி பிரிந்து தனித்தனி நாயகர்களாக நடிக்கத் தொடங்கினர். கமலஹாசன் நடிப்பு அரக்கன் என்றால் ரஜினிகாந்த் மாஸ் ஹீரோவாக உயர்ந்தார்.
அவரது ரசிகர்கள் பல நேரங்களில் மோதிக் கொண்டிருந்தாலும், இருவருமே என்றும் மோதிக் கொண்டதில்லை. குறிப்பாக கமலஹாசனை எப்போதும் ரஜினிகாந்த் ஒரு படி மேலே வைத்து தான் பேசுவார். இது தொடர்பான பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடியும். இந்த நிலையில் தான் நட்பின் இலக்கணமாக தான் எம்பி ஆக பதவி ஏற்பதற்கு முன்னதாக ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் கமலஹாசன்.












Click it and Unblock the Notifications