கன்னிப்பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும்? கமல்ஹாசன் சொன்ன பதில்.. ராகுல் காந்தியுடனும் சந்திப்பு?
சென்னை: மாநிலங்களவை எம்பியாக பதவியேற்க உள்ள கமல்ஹாசன், தனது கன்னிப்பேச்சு எதைப் பற்றி இருக்கும் என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார். டெல்லிக்குப் பெருமையுடன் சொல்வதாகக் கூறிய கமல்ஹாசன், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட அன்புமணி, மு.சண்முகம், சந்திரசேகரன், எம்எம் அப்துல்லா, பி.வில்சன், வைகோ ஆகியோரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக காலியாகும் 6 இடங்களுக்கான ராஜ்ய சபா தேர்தல் ஜூன் மாதம் நடத்தப்பட்டது. திமுக தரப்பில் போட்டியிட்ட 4 வேட்பாளர்களும், அதிமுக சார்பாகப் போட்டியிட்ட 2 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகினர்.

அந்த வகையில் திமுக சார்பாக பி.வில்சன், கவிஞ்சர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அதிமுக சார்பாக இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் தேர்வாகினர். புதிதாகத் தேர்வான 6 பேரும் நாளை எம்பி-க்களாக பதவியேற்க உள்ளனர். இதனால் மநீம தலைவர் கமல்ஹாசன் டெல்லி புறப்பட்டுள்ளார்.
டெல்லி செல்லும் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பதற்கு முன்பாக செய்ய வேண்டிய நடைமுறைகளை மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து கமல்ஹாசன் பேசுகையில், மக்களின் வாழ்த்துக்களுடன் உறுதிமொழி எடுக்கவுள்ளேன். இது இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள மரியாதையும், கடமையும் ஆகும்.
அதனால் பெருமையுடன் செல்கிறேன். கன்னிப்பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும் என்பதைச் சொல்லக் கூடாது. அதனை அங்குதான் பேச வேண்டும். சில விஷயங்கள் இங்கு பேசுவதை போல் அங்குப் பேச முடியாது. அங்குப் பேசுவதைப் போல் இங்குப் பேச முடியாது. எனது நாடாளுமன்றப் பயணம் எதை நோக்கி இருக்கும் என்பதை நாளை பார்க்கும் போது தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டது. அதன்படி கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி செல்லும் கமல்ஹாசன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications