காமராஜரையே தோற்றகடித்த பூமி இது.. ஸ்டாலினை வீழ்த்தியதால் விஜய்யின் தவெகவை சீண்டிய பிரகாஷ் ராஜ்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தோற்கடிக்கப்பட்டார். இந்நிலையில் தான் ''காமராஜர் தோற்றார்.. முக ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை'' என ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. அதேவேளையில் தனி மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்கவில்லை.

இதனால் ஆட்சியமைக்க தேவையான 11 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற தவெக முயன்று வருகிறது. இந்நிலையில் தான் விஜய்க்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்த வரிசையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ''Tamil Nadu Elections.. வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். முக ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணி தான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்'' என கூறியுள்ளார்.
முன்னதாக தேர்தல் பிரசார சமயத்தில் பிரகாஷ் ராஜ் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். இந்த சமயத்தில் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்தார். ''தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தேர்தல் மூன்று மாடல்களுக்கான தேர்தல். திராவிட மாடல், அடிமை மாடல் மற்றும் சினிமா மாடல் இடையே தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் நேரத்தில் தமிழகத்திற்கு துரோகம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அடிமை மாடல் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சிகள் வாயை மூடிக் கொண்டு நிற்கிறார்கள். இந்த அடிமை மாடல் தேவையா? திருப்பரங்குன்றம் விஷயத்தில் மதுரையை மணிப்பூராக மாற்ற முயற்சிக்கிறார்கள். ஒரே சினிமாவில் டாக்டர் ஆகலாம்.. என்ஜினியர் ஆகலாம்.. ஏன் முதலமைச்சர் கூட ஆகலாம்.. ஆனால், அரசியலில் அப்படியே முதலமைச்சர் ஆகிவிட முடியாது.
இத்தனை வருடங்களில் தமிழ்நாடு மக்களுக்கோ, மொழிக்கோ, தன்மானத்திற்கோ பிரச்னை வந்தபோது அவர்களுக்காக நின்றது உண்டா?. நான் பேசிய அளவிற்காவது அரசியல் பேசியது உண்டா? உங்கள் மீது மக்கள் வைத்துள்ள அன்பு உங்களுக்கான திறமைக்கு... அரசியலுக்கு. ஆனால், நீங்கள் அதனை அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர். நடிகனை பிடித்தால் விசில் அடிக்கலாம். அதற்காக நாட்டை கொடுக்க முடியாது இது அதிமுக - திமுகவுக்கு இடையேயான தேர்தல் கிடையாது, விஜய் சொல்வது தவெக - திமுக இடையேயான தேர்தலும் இல்லை. இது ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் இடையேயான தேர்தல்'' என்று விஜய்யை சீண்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications