சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்மவீரர் காமராஜர் 120வது பிறந்தநாள்..தமிழக அரசு சார்பில் மரியாதை..கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

தமிழ்நாடு அரசின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 120வது பிறந்த நாள் நாளைய தினம் கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் 15.07.2022 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டு மலர்த்தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

Kamarajar 120th Birthday 2022: Karmaveerar Kamarajar 120 th Birth Anniversary celebration

பெருந்தலைவர் காமராசர் அவர்கள் விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி தம்பதியினருக்கு 15.07.1903 அன்று மகனாகப் பிறந்தார். காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களின் அறிமுகத்தால் 1919 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார்.

1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். இதனைத் தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தார். 1936 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும், 1937 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராகவும், 1941 ஆம் ஆண்டு விருதுநகர் நகர்மன்றத் தலைவராகவும், 1952 ஆம் ஆண்டு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கி மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும், 1954 ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தன்னுடைய அயராத உழைப்பினால் ஆட்சியில் சிகரம் தொட்ட கர்மவீரர் காமராசர் அவர்கள், தனது 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள்தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார். ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்ப, இலவச மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் கல்வி வளர்ச்சிக்கு அரும் பெரும் தொண்டாற்றினார்.

விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் வளர்ச்சியடையச் செய்வதற்கு பெரும் பங்காற்றினார். மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டி விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். 1964 ஆம் ஆண்டு மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற காமராசர் அவர்கள், நேருவின் மறைவிற்குப் பின்னர் இந்தியாவின் பிரதமரை இரண்டுமுறை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

தான் வாழ்ந்த 73 ஆண்டுகளில் 57 ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒப்பற்றத் தலைவராகவும் விளங்கினார். வாய்மை, தூய்மை, நேர்மை, எளிமை, அடக்கம் ஆகியவற்றுக்கு உதாரணமாகத் திகழ்ந்த பெருந்தலைவர் காமராசரின் மறைவுக்குப் பிறகு 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப் பட்டது. விருதுநகரில் காமராசர் வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசினால் அரசுடைமையாக்கப்பட்டு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டு 20.08.1975 அன்று திறந்து வைக்கப்பட்டது.

மேலும், சென்னை தியாகராய நகரில் காமராசர் வாழ்ந்த இல்லம் 21.06.1978 அன்று முதல் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கன்னியாகுமரியில் 02.10.2000 அன்று காமராசர் மணிமண்டபமும், விருதுநகரில் 01.03.2006 அன்று பெருந்தலைவர் காமராசர் நூற்றாண்டு மணிமண்டபமும் திறந்து வைக்கப்பட்டது. கன்னியாகுமரியில் 27.06.1999 அன்று காமராசர் மணிமண்டபத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அடிக்கல் நாட்டி, விழாவில் ஆற்றிய உரையில் என் வாழ்க்கையிலே பல்வேறு மகிழ்ச்சிகரமான நாட்கள் வந்துள்ளன என்றாலும் கூட அவைகளுக்கு இணையாக இல்லாமல், மேலும் ஒரு படி மேலாக மகிழ்ச்சி தரக்கூடிய இந்த நாள் அமைந்திருக்கின்றது.

பெருந்தலைவர் காமராசர் அவர்களுடைய நினைவாக குமரிக்கடலோரத்தில் நினைவு மணிமண்டபத்தை எழுப்புவதற்கு அடிக்கல் நாட்டுவிழா எடுத்தது நான் பெற்ற பெரும்பேறாகும். பெருந்தலைவர் காமராசர் அவர்களுடைய பண்பாடு, அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் போற்றி வந்த அரசியல் நாகரிகம், நட்புணர்வு, பழகுகின்ற எளிய தன்மை, இவையெல்லாம் யாரும் மறக்க முடியாது. அவரோடு பழகியவர்களுக்குத்தான் அது நன்றாகத் தெரியும். அது மாத்தரம் அல்ல; காமராசர் உறுதியானவர், திடமானவர், தியாகச் சீலர். பல ஆண்டுக்காலம் சிறைச்சாலையிலேயே தன்னுடைய வாழ்க்கையைக் கழித்தவர்.

இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். காமராசர் அவர்களின் சகிப்புத் தன்மைக் காரணமாக இதே கன்னியாகுமரி முனையிலே மணிமண்டபம் அமைக்கிறோம் என்பது தான் வரலாற்றுப் பெருமை. அந்த மாமனிதருக்கு நாம் செலுத்துகின்ற மரியாதை அந்த உத்தமரின் பெயரால் அமைகின்ற மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுவது என்னுடைய வாழ்நாளில் நான் பெற்ற பெருமையாகக் கருதுகிறேன் என்று பெருந்தலைவர் காமராசர் அவர்களைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2006 ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாளினை "கல்வி வளர்ச்சி நாளாக" அறிவித்தார்கள். அன்னாரின் பிறந்த நாளானது கல்வி வளர்ச்சி நாளாகத் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் கல்வி வளர்ச்சி நாள் 15.07.2006 அன்று 2 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு சத்துணவுடன் வாரம் இரண்டு முறை முட்டையும், இரண்டாவது கல்வி வளர்ச்சி நாளான 15.07.2007 அன்று சத்துணவுடன் வாரம் மூன்று முறை முட்டையும் வழங்கிடும் திட்டத்தை செயல்படுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டு கல்வி வளர்ச்சி நாளான 15.07.2008 அன்று முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு சத்துணவுடன் வாரம் மூன்று முறை வாழைப்பழம் வழங்கும் திட்டத்தினையும் அறிமுகப்படுத்தினார்கள். மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் சென்னையிலுள்ள கடற்கரை சாலைக்கு 'காமராசர் சாலை' என்றும், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.

தமிழ்நாடு அரசின் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சென்னை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராசர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு 15.07.2022 அன்று காலை 10.00 மணியளவில் மலர்த்தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The 120th birth anniversary of the late Chief Minister K. Kamarajar will be celebrated across the district in grand manner on Friday. The 120th birth anniversary of Perunthalaivar Kamarajar is going to be celebrated tomorrow. On behalf of the Tamil Nadu government, ministers are participating and paying their respects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X