"பாடிங்க எரிஞ்சினே இருக்குது".. ஓய்வின்றி உழைக்கும் கண்ணம்மாபேட்டை மயான ஊழியர்கள்!
சென்னை: சென்னை தி.நகர் கண்ணமாப்பேட்டையில் அதிக அளவில் சடலங்கள் வருவதால் மயான ஊழியர்கள் ஓய்வின்றி பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த மயானத்தில் நவீன எரியூட்டும் தகன மேடை, புதைப்பதற்கான இடம் என தனித்தனியாக உள்ளன. தற்போது, கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்ட, புதைக்க என தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள், இயற்கை மரணம் என தினமும் அதிகளவில் சடலங்கள் மயானத்துக்கு வருகிறதாம்.

அதிக சடலங்கள்
அதிக அளவில் சடலங்கள் வருவதால் எரியூட்ட நேரம் போதாமல், மயான கூரை வெளிப்பகுதியிலும் உடல்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால், மயான பணியாளர்கள் உணவு இடைவேளைகூட இல்லாமல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அங்கு பணியாற்றும் ஊழியர் ஆர்.எஸ். பாலாவிடம் கேட்டோம். இவர் 15 ஆண்டுகளைக் கடந்து சென்னையில் உள்ள பெரும்பாலான மயானங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். அவர் கூறுகையில், மயானம் என்றால் பொதுவாக ஓர் அச்சம் நிலவுகிறது. அந்த அளவிற்கு பயம் கொள்ள ஒன்றுமே இல்லை.

மற்ற வேலை போலத்தான்
கடந்த 15 ஆண்டில் லட்சத்திற்கும் மேற்பட்ட உடல்களை பார்த்து, இறப்பை பதிவு செய்து எரிக்கிறேன். இறந்த உடலின் மண்டை ஓட்டு பகுதியோடு, அஸ்தியினை சேகரித்து, உறவினர்களிடத்தில் கொடுக்கிறேன். என் குடும்பத்தினர் இந்த வேலைக்கு நான் போக எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. மயானச் சூழல் வேண்டுமானால் வேறுமாதிரி இருக்கலாம். ஆனால் எல்லோரையும் போல நானும் காலையில் ஒன்பது மணிக்கு போய் வேலையை செய்கிறேன். என்ன மயான அமைதிக்குள் வேலை செய்கிறேன் அவ்வளவுதான். நான் இந்த வேலைக்கு சிறு வயதில் வந்தேன். தற்கொலை செய்தவர்கள், விபத்தில் இறந்தவர்களின் என பலரது உடல்கள் வந்து இருக்கு.

மனசு கஷ்டப்படும்
குழந்தைகளின் உடல்கள் வரும் போது உறவினர்கள் அழும்போது நானும் அழுவேன். குழந்தைகள் உடல் வரும்போது மட்டும் மனம் கஷ்டப்படும். பல நேரங்களில் இறந்த குழந்தையின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவேன். தனது மனைவிக்கு இறுதி மரியாதை செய்ய வந்த ஒரு பெரியவர் என்னை வாழ்த்தி காலில் விழுந்தார். எதற்காக விழுந்தார் என்றுக்கூட தெரியவில்லை. இந்த இடத்தில் நீ செய்வது மிகப் பெரிய வேலை என அவர் கூறியது என்னை கண்கலங்க வைத்தது.

பிறப்பு போலத்தான் இறப்பும்
பிறப்பு மாதிரி இறப்பும் இயல்பான விசயம் என மனம் ஏற்றுக்கொள்ள பழகிவிட்டது. கடந்த ஆண்டுகளில் நாள் ஒன்றுக்கு 5 சடலங்கள் வருவதே அரிது. ஆனால், கொரோனா பாதிப்புக்குப் பிறகு அடக்கம், தகனம் செய்ய தினமும் 20 முதல் 30 சடலங்கள் வரை வருவதால், நள்ளிரவு வரை பணியாற்ற வேண்டியுள்ளது. இப்போதும் மற்றவர்களுக்குதான் கொரோனாவால் உயிரிழந்தவர் என பயம் இருக்கும். ஆனால் எங்களுக்கு மயான கூடத்திற்குள் வந்தால் எல்லாமே ஒன்றுதான்.

கொரோனா சடலங்கள்
கொரோனாவால் உயிரிழந்த பலரை தகனம் செய்துள்ளேன். சில நேரம் உயரமாக இருக்கும் உடல்கள் வந்துள்ளது. அவர்களையும் எங்கள் கையால் பிடித்துதான் எரியூட்டியுள்ளோம். இப்போது வரை எங்களுக்கு நோய் தொற்று பரவும் என்ற பயமும் இல்லை. எனக்கு பிடித்ததே நவீன எரியூட்டும் தகன மேடைதான். இந்த வேலையை பிடித்து தான் செய்கிறேன். மயான பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது. மேலும் மற்ற மயானங்களில் பணிபுரிபவர்களுக்கு கோரிக்கைகள் என பல உள்ளது. அதனை அரசு செவிசாய்த்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications