கார்த்திக் கோபிநாத்துக்கு பாஜகவில் முக்கிய பதவி.. கைது முதல் அண்ணாமலை சப்போர்ட் வரை.. யார் இவர்?
சென்னை: தமிழக பாஜக சமூக ஊடக பிரிவின் மாநில துணைத் தலைவராக கார்த்திக் கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இளையபாரதம் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் கார்த்திக் கோபிநாத்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடக பிரிவின் மாநில துணைத் தலைவராக கார்த்திக் கோபிநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, கார்த்திக் கோபிநாத், "பாஜக காரியகர்த்தாவாக இருப்பது பெருமைக்குரியது. தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணைத் தலைவர் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் தலைவரின் கரங்களை வலுப்படுத்த நான் நிச்சயமாக பாடுபடுவேன்." எனத் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் கோபிநாத் சர்ச்சை: கடந்த ஆண்டு ஜூலை மாதம், சிடி ரவி, அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் கார்த்திக் கோபிநாத். அதற்கு முன்பு பாஜக ஆதரவாளராக செயல்பட்டு வந்த கார்த்திக் கோபிநாத், 'இளையபாரதம்' என்ற யூட்யூப் சேனலை நடத்தி வந்தார். அப்போது மோசடி புகாரில் சிக்கி கைதானார்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கோயிலை புனரமைக்க உள்ளதாக அறிவித்தார் கார்த்திக். இதற்காக செயலி ஒன்றின் மூலம் நிதி வசூல் செய்தார். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில் பெயரை பயன்படுத்தி, இணையதளம் மூலம் கார்த்திக் கோபிநாத் 50 லட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. தனது வங்கிக் கணக்கு மூலமும் அவர் நிதி வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.
நிதி மோசடி புகார்: இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தனி நபர்கள் யாரும் வசூல் செய்ய முடியாது' என அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறியிருந்தார். மேலும், சிறுவாச்சூர் கோயில் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை கேட்டுள்ளார் எனவும் தெரிவித்திருந்தார்.
அப்போது இதுகுறித்து பேசிய கார்த்திக் கோபிநாத், "எனது வங்கிக் கணக்கு மூலமாக பணத்தைப் பெறவில்லை. கோயில் புனரமைப்பு தொடர்பாக நான் செய்யக் கூடிய தேசியப் பணிக்கு உதவி செய்ய விரும்பினால் செய்யலாம் எனக் கூறியிருந்தேன். இதற்காக செயலி மூலம் நன்கொடை பெறப்பட்டது. அவற்றுக்கெல்லாம் முறையான கணக்கு வழக்குகள் உள்ளன." எனத் தெரிவித்திருந்தார்.
கோயில் புனரமைப்பு என்ற பெயரில் நிதி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கார்த்திக் கோபிநாத், மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. கார்த்திக் கோபிநாத் கைதுக்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக பாஜகவின் சட்டக் குழு இருக்கும்" எனத் தெரிவித்தார்.
அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?: அதற்கு முன்னதாக, சிறுவாச்சூர் கோவில் புனரமைப்பு நிதி மோசடி புகார் கிளம்பியபோதே இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை, "இந்த கார்த்திக் கோபிநாத் யார்? ஒரு தேசிய கருத்தை பேச கூடிய ஒரு மனிதன் என்று வைத்துக்கொள்ளலாம். அவருக்கும் அண்ணாமலைக்கும் என்ன சம்பந்தம்? சிறுவாச்சூர் கோயிலை புனரமைப்பதற்காக வசூலிக்கப்பட்ட பணத்திற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.
முதலில் அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று கூறிய அண்ணாமலை, கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்ப்பட்டபோது, தங்கள் கட்சியின் சட்டக்குழுவை அனுப்புவது ஏன் என்ற கேள்விகள் அப்போது எழுப்பப்பட்டன. இந்நிலையில் தற்போது, பாஜக சமூக ஊடக பிரிவின் மாநில துணைத் தலைவராக அண்ணாமலையால் நியமிக்கப்பட்டுள்ளார் கார்த்திக் கோபிநாத்.












Click it and Unblock the Notifications