கருணாநிதி ஆட்சி; தமிழ்நாட்டின் வளர்ச்சி! பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு முதல் மெட்ரோ ரயில்வரை
சென்னை: பலரும் திமுக ஆட்சி என்றால் மொழி உணர்வு, இந்தி எதிர்ப்பு, இட ஒதுக்கீடு போன்றவற்றை மட்டுமே அடிக்கடி எடுத்துக்காட்டுகிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை நவீனமாக மாற்றியது திமுக ஆட்சிதான். தொழில்துறை முதல்.. தொழில்நுட்பம்வரை.. பல அறிவியல்பூர்வமான முன்னேற்றங்களுக்கு அடித்தளம் இட்டுக் கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவர் 5 முறை இருந்துள்ளார். கிட்டத்தட்ட 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அண்ணாதுரையின் மறைவை அடுத்து முதன்முதலாக 1969 ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பதவியேற்றார்.

அதேபோல் 1957இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் குளித்தலையில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்திற்குள் காலடி எடுத்துவைத்தார். இவரை 'தமிழ்நாட்டின் நவீன சிற்பி' என அவரது கட்சியினர் முன்வைக்கின்றனர்.
பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தது தொடங்கி, தரமணியில் டைடல் பார்க் கொண்டுவந்தது என வகைவகையாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பங்களிப்பைச் செய்துள்ளார் கருணாநிதி.
1969 முதல்.. 1976 வரை: இவரது முதல் ஆட்சிக் காலம் 1969 தொடங்கி 1976வரை! இந்தக் காலகட்டத்தில்தான் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தைக் கொண்டுவந்தார் கருணாநிதி. அதேபோன்று குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார்.
நாட்டின் பிரஜைகளான ஏழைகள் சாலைகளில், ப்ளாட்பாரங்களில் படுத்து உறங்குவதைக் கண்ட அவர், இந்தத் திட்டத்தை மனிதநேயத்துடன் செயல்படுத்தினார்.

இவரது ஆட்சிக் காலத்தில்தான் 'குடிநீர் வடிகால் வாரியம்' அமைக்கப்பட்டது. ஆதிதிராவிடர்களுக்கு இலவச கான்க்ரீட் வீடு தரும் வீட்டு வசதித் திட்டத்தையும் செயல்படுத்தினார். இது மட்டும் அல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கென தனி அமைச்சகத்தையும் உருவாக்கினார்.
இந்த ஆட்சிக் காலத்தில் அதிகம் பேசப்பட்ட திட்டம் என்றால், பேருந்துகளை நாட்டுடைமை ஆக்கி, தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார்.
மேலும் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதியை ஏற்படுத்த வேண்டி ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தார். விவசாயத் தொழிலை மையமாகக் கொண்ட டெல்டா பகுதியின் பிரதிநிதியான கருணாநிதி, விவசாயத் தொழிலாளர்களுக்குக் குடியிருப்பு மனை உரிமைச் சட்டம் என்பதை அறிமுகம் செய்தார்.

வேளாண் தொழிலில் பெரும் பண்ணையார்களின் ஆதிக்கத்தை ஒடுக்க, 15 ஏக்கர் நில உச்சவரம்புச் சட்டத்தையும் கொண்டுவந்தார். இதனால் 1,78,880 ஏக்கர் உபரி நிலம் மீட்கப்பட்டு 1,37,236 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது என்பது வரலாறு.
கை ரிக்ஷாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டம், பணிக் காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி, சிப்காட் தொழில் வளாகங்கள் கொண்டுவந்தது என இந்த ஆட்சியில் பல நன்மைகளை தமிழ்நாடு பெற்றது.

1989 முதல் 1991வரை: இந்த ஆட்சியில் தமிழக அரசு ஊழியர்கள் மாபெரும் நன்மையைப் பெற்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயித்தார். அதேபோல் பொங்கல் முன்பணம் உள்பட்ட சலுகைகளை அறிவித்தார்.
இந்தக் காலகட்டத்தில்தான் அதிரடியான இன்னொரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிடத் தனிச் சட்டத்தைக் கொண்டுவந்தார், கருணாநிதி. அது இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்தது.
இதைப்போன்று ஏழைப் பெண்கள் பயன்பெறும்வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தைக் கொண்டுவந்தார். இதன்மூலம் 1989இல் 5,000 ரூபாய் நிதியுதவியும் 1996இல் 10,000 ரூபாய் நிதியுதவியும், 2006இல் 15,000 ரூபாய் நிதியுதவியும் 2007இல் 20,000 ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டமும் இதே ஆட்சிக்காலத்தில் அறிமுகமானதுதான். மாநிலம் முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களும் உருவாக்கப்பட்டன.
வன்னியர், சீர்மரபினர் உட்பட மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு தனி இட இடஒதுக்கீடும் அறிமுகமானது. இதற்கெல்லாம் உச்சமாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதுவரை இந்திய அளவில் வேறு எந்த மாநிலமும் செய்யாத திட்டமாகப் பேசப்பட்டது.

1996 முதல் 2001வரை: இந்த ஆட்சிக் காலத்தில்தான் சென்னையில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பத் துறை ஒன்று தனியாக உருவாக்கப்பட்டது. இதன்மூலம் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியத்துவம் பெற்றது. பல பன்னாட்டு கம்பெனிகள் தமிழ்நாட்டில் கால் பதித்தன. இதனால் கணினித் துறையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலை கிடைக்க வழி ஏற்பட்டது.
தொழில்நுட்பத் துறையில் புரட்சியை உருவாக்கிய கருணாநிதி, மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டையையும் வழங்கினார். உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, கிராமப்புறப் பெண்களுக்குத் தொழில் கல்லூரிகளில் 15 விழுக்காடு இட ஒதுக்கீடு என பல உரிமைகளை அளித்தார்.
கன்னியாகுமரியில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை அமைத்தது, ஆறு, குளம் உள்பட்ட நீர்நிலைகளைத் தூர்வாரியது, மதுரை மாநகரில் உயர்நீதிமன்றக் கிளை அமைத்தது என பல நன்மைகள் தமிழ்நாட்டிற்குக் கிடைத்தன.
அதில் பெரிய சாதனையாக சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையத்தை உருவாக்கித் தந்தார்.

2006 முதல் 2011வரை: ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்தார்.
தொடக்கமே அதிரடியாக அமைந்தது. 36 லட்சத்து 71 ஆயிரத்து 372 விவசாயிகளுக்கு 8 ஆயிரத்து 838 கோடியே 6 லட்சம் ரூபாய் பயிர்க் கடன்கள் வழங்கினார்.
இவை தவிர, 9 லட்சத்து ஆயிரத்து 643 விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டது. ஆதிதிராவிட விவசாயிகள் 'தாட்கோ' நிறுவனத்தின் மூலம் 31.3.2006வரை பெற்ற கடன் தொகை வட்டி உட்பட 5 கோடியே 25 லட்சம் தள்ளுபடிசெய்து இன்ப அதிர்ச்சி தந்தார்.
அடுத்தது நடந்ததைத்தான் இந்தியாவே திரும்பிப் பார்த்தது. செய்யவே முடியாது என எதிர்க்கட்சிகள் சொன்னதைச் செய்துகாட்டினார் கருணாநிதி. அதாவது 3742 கோடியே 42 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில், ஒரு கோடியே 72 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆட்சி முடிவதற்குள், ஒரு கோடியே 62 லட்சத்து 59 ஆயிரத்து 526 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுவிட்டன. அதுவரை இந்த சாதனையை வேறு எந்தக் கட்சிகளும் செய்ததே இல்லை.
மேலும் 661 கோடி ரூபாய்ச் செலவில் 29 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கினார்.

ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 2 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர் நிலத்தை இலவசமாக அளித்தார்.
இரண்டு வயது முதல் 15 வயதுவரை உள்ள 73 லட்சம் குழந்தைகள், மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 5 நாள்களில் முட்டையும், முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழங்களை வழங்க உத்தரவிட்டார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்களை ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கினார். அவர்களுக்குப் பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கினார்.
தமிழகத்தில் 1.1.2006 முதல் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் 6ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தினார். இதன் காரணமாக, 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையாக அனுமதிக்கப்பட்டது.
முன்னதாக, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்துசெய்தார். கிட்டத்தட்ட 8 லட்சத்து 30 ஆயிரத்து 495 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களைக் கொடுத்தார்.
ஆண்டுதோறும் 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 4 லட்சத்து 35 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ், தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து என புதிய நம்பிக்கையை விதைத்தார்.
மேலும் விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார். "வருமுன் காப்போம் திட்டம்" மீண்டும் செயல்படுத்தப்பட்டு 18 ஆயிரத்து 742 மருத்துவ முகாம்களில் ஒரு கோடியே 77 லட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் ஏழை எளிய மக்கள் பயனடையச் செய்தார்.
"உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்" மூலம் ஒரு கோடியே 34 இலட்சம் குடும்பங்கள் பதிவுசெய்யப்பட்டன. அதன்படி, 3 இலட்சத்து 3 ஆயிரத்து 328 ஏழைகளுக்கு சுமார் 781 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்ய வழி ஏற்படுத்தித் தந்தார்.

சென்னை கோட்டூர்புரத்தில் 179 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்திலான 'அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை அமைத்தார்.
அருந்ததியர்களுக்கு 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு, இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இதற்கெல்லாம் ஹைலைட்டாக, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி நிதி உதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'சென்னை மெட்ரோ ரயில் திட்ட'த்தைக் கொண்டுவந்தார்.
இப்படி இந்த ஆட்சிக்காலத்தில் 104 திட்டங்கள் செயல்வடிவம் பெற்றன.












Click it and Unblock the Notifications