பஞ்சாயத்து பேசிய பவன் கல்யாண்.. விஜய்க்கு போனைப் போட்ட எடப்பாடி? தமிழகத்தில் வருது ஆந்திர மாடல்?
சென்னை: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அரசியல் ரீதியாகவும் இந்த நிகழ்வு பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்கின்றனர். குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஜய் உடன் இது தொடர்பாக பேசியதாகவும், இதன் பின்னணியில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
2026 தேர்தலுக்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் தமிழக அரசியலில் புதிய வரவான விஜய் பிரச்சாரத்தை தொடங்கினார். நான்கு வாரங்கள் சர்ச்சைகளோடு விஜயின் பிரச்சாரம் திருச்சி திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்தது.
இந்த நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமி திடலில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் தற்போது பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர்.

கரூர் விபத்து
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அரசியல் ரீதியாகவும் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக திமுக இந்த விவகாரத்தில் விஜய் மீது குறி வைத்து தாக்குதல் நடத்துவதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். அதே நேரத்தில் பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகின்றன. இந்த நிலையில் தான் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அக்டோபர் ஆறாம் தேதி விஜயுடன் தொலைபேசி மூலம் பேசியதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
கிட்டத்தட்ட 30 நிமிடம் இந்த பேச்சு தொடர்ந்ததாகவும் அதில் விஜய்க்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆட்சியை விட்டு நீக்குவதற்கான கூட்டணி குறித்த கருத்து பரிமாற்றங்களும் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த பேச்சில் விஜய் முதலில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசுவதை தனது முதல் கடமை எனவும் கூட்டணி குறித்து பிறகு பேசிக் கொள்ளலாம் என சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக எதிர்ப்பு
இந்த நிலையில் அதிமுக பாஜக விஜயை அரவணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் திமுக தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தினால் விஜய் அதிமுக கூட்டணிக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்கின்றனர். விஜய் கட்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்து திமுகவை அரசியல் எதிரி எனவும் பாஜகவை கொள்கை எதிரியாக விமர்சிசத்து வருகிறார். பெரும்பாலும் தனது பேச்சில் அதிமுகவை விஜய் குறை சொல்லவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
கூட்டணி பேச்சு
இந்த நிலையில் பாஜகவை தவிர்த்து அதிமுக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்காது எனவும் அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை என்பதால் பாஜகவை பொருட்டாக கருத தேவையில்லை என சிலர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தான் எடப்பாடி விஜய் பேச்சின் பின்னணியில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தற்போதைய சூழலில் விஜய்க்கு கூட்டணியின் தேவை அதிகமாக உள்ளது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்களின் ஆலோசனை தேவை என்பதாலும் திமுக எதிர்ப்பை பிரதானமாக கொண்டிருக்கும் அதிமுகவின் தயவு விஜய்க்கு தேவைப்படுகிறது.
பவன் கல்யாண்
எனவே தற்போதைக்கு எடப்பாடி உடன் இணக்கமாக செல்வது நல்லது என பவன் கல்யாண் விஜய்க்கு அறிவுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. கடந்த காலங்களில் சந்திரபாபு நாயுடுவையும் பாஜகவையும் விமர்சித்த தான் கூட்டணி சேர்ந்து துணை முதலமைச்சர் ஆகவில்லையா என பவன் கல்யாண் விஜையிடம் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. பவன் கல்யாண் தலையிட்டால் அதிமுக தமிழக வெற்றிக்கழக கூட்டணி உறுதி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications