நடிகர் விஜயால் நடந்த மேஜிக்.. மாற்றுத்திறனாளி மகனுக்காக உருகும் கேரள தம்பதி
சென்னை: நடிகர் விஜயின் கோட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அவரின் ரசிகர்கள் அந்தப் படத்தை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த ரிஷான் என்ற சிறுவன் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறப்பு குழந்தையாவார். நடிகர் விஜயின் தீவிர ரசிகர். அந்த வகையில் திருவனந்தபுரத்தில் நடந்த கோட் படப்பிடிப்பின்போது ரிஷான் விஜயை சந்தித்தார். அதன் பிறகு குழந்தையின் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர்.
மகனின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதால், சமீபத்தில் விஜயை சந்திக்க அவரின் நீலாங்கரை வீட்டின் முன்பு காத்திருந்தனர். இதுகுறித்து ரிஷானின் பெற்றோர் கூறுகையில், "விஜய் சார் பாட்டைக் கேட்டாலே என் மகன் ஆடத் தொடங்கிவிடுவான். அவனால் ஆட முடியாது இருந்தாலும் சேரில் உட்கார்ந்துகொண்டே ஆடி கீழே விழுவான்.

இதேபோல, நடனமாடி கீழே விழுந்து அவனுக்கு பலமுறை நாங்கள் ஸ்டிச் கூட போட்டுள்ளோம். நாங்கள் சோஷியல் மீடியாக்களில் இல்லை. விஜய் சாரை சந்தித்துவிட்டு வீடு திரும்பிய போதுதான் எங்கள் மகன் தொடர்பான வீடியோ செய்தியில் வந்திருந்தது. ரெண்டு பேருக்குமே மிகவும் சந்தோஷமாக இருந்தது.
எங்களுடைய மகனின் எதிர்காலம் குறித்த கவலை எப்போதுமே இருந்தது. எங்களுக்குப் பின்னால் அவனை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று. இந்த வீடியோ வெளியான பின்னர் நிறைய பேர் பார்க்கறாங்க. மகன் வீடியோவில் வந்துருக்கான் என்று முதலில் மகிழ்ச்சியாக இருந்தது. மகனுக்காக சமூக வலைதளத்தில் ஒரு ஐடியை உருவாக்குங்கள், அவனுடைய தகவல்கள் எல்லாம் அதில் போடுங்கள் என்று பலரும் கூறினர். இன்ஸ்டா, யூடியூபில் கணக்குகளைத் தொடங்கினோம். அதில் அவனின் அனைத்து நடவடிக்கைகளையும் அப்டேட் செய்தோம்.
தளபதி பாட்டை போட்டால், அவனால் சும்மா இருக்க முடியாது. எழுந்துவிடுவான். அவனுக்கு நாங்கள் சப்போர்ட் பண்ணுவோம். எங்கள் சப்போர்ட்டுடன் அவன் டான்ஸ் ஆடுவான். இப்ப அவனுக்கு டான்ஸ் மேல தான் விருப்பம். மாஸ்டர் படம் ரிலீஸ் நேரத்துல தான், நாங்க புதுக்கோட்டைல ட்ரீட்மென்ட்காக போயிருந்தோம். அப்ப அங்கிருந்த தியேட்டர்ல மாஸ்டர் படம் பார்த்தோம். வாத்தி கம்மிங் பாட்டுக்கு கன்ட்ரோல் பண்ண முடியாம டான்ஸ் ஆடினான். கிளைமேக்ஸ் வரைக்கும் தூங்கலை. ஸ்நேக்ஸ் கூட கேக்கலை. இன்ட்ரஸ்டா படம் பார்த்துட்டு இருந்தான்.
அது யாருமா என அவனிடம் கேட்டபோது, 'விஜய் மாமா' என்று கூறினான். இத்தனைக்கும் நாங்கள் எதுவும் சொல்லிக் கொடுக்கவில்லை. படம் முடிந்தும் தியேட்டரை விட்டு வெளியில் வர மனமில்லாமல், விஜய் மாமா படம் பார்க்க வேண்டும் என்றே சொல்லிக் கொண்டிருந்தான். வீட்டில் டி.வி சேனல் மாற்றும்போது, விஜய் சாரின் முகம் தெரிந்துவிட்டால் அதை மாற்ற விட மாட்டான். சின்ன வயது விஜய் சார் முதல், இப்போதுள்ள விஜய் சார் முகம் வரை அனைத்தையும் சரியாக அடையாளம் தெரிந்து வைத்திருக்கிறான். அவனின் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்.
கோட் படம் முதல் நாள், முதல் காட்சி பார்த்தோம். அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி. இவனுக்காக 3 மணிக்கே சென்று அங்கு விஜய் பாடல்களுக்கு டான்ஸ் ஆட வைத்தோம். கேரளா திருவனந்தபுரம் மைதானத்தில் கோட் படம் கிளைமேஸ் படப்பிடிப்பு நடந்தபோது, இவனை சந்திக்க வைக்க முயற்சி செய்தோம். முடியவில்லை. கடைசி நாள் அங்கிருந்தவர்களின் உதவியுடன் விஜய் சாரை பார்த்தோம். பொதுவாக அப்பா, அம்மா தவிர அவன் வேறு யாரையும் கட்டி பிடிக்க மாட்டான். அன்றைய தினம் விஜய் சாரை கட்டி பிடித்துவிட்டு விடவே இல்லை.
அதன்பிறகு வீட்டுக்கு வந்ததும் நாங்கள் அவனிடம் மாற்றத்தை உணர்ந்தோம். விஜய் சாரை பார்க்காமல் இருந்திருந்தால், அவனுடைய வாழ்க்கை படிப்பு, சிகிச்சை என்று சராசரியாக இருந்திருக்கும். இந்த நடன திறமை வெளியில் வந்திருக்காது. ஒரு சிறப்பு குழந்தையை எப்படி கவனிக்கிறோமோ அப்படிதான் கவனித்திருப்போம். கம்யூனிகேசனும் குறைவாக தான் இருந்தது . இப்போது நிறைய முன்னேற்றங்கள் இருக்கின்றன." என்றனர்.
விஜயை சந்திப்பதற்காக அவர்கள் 6 மணி நேரம் காத்திருந்தனர். மாலை இவர்களை கடந்துதான் விஜயின் காரும் வீட்டுக்குள் சென்றது. ஆனால் விஜய் அவர்களை சந்திக்கவில்லை. இதனால் அவர்கள் அங்கிருந்து சோகத்துடன் கிளம்பினார்கள்.












Click it and Unblock the Notifications