விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்!
சென்னை: தமிழக அரசியலில் கடந்த பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியல் தற்போது புதிய போட்டியை நோக்கி நகர்ந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியும், பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும் தமிழக அரசியல் களத்தை முற்றிலும் மாற்றும் சக்தியாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முதல் முறையாக தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

அதுமட்டுமல்லாமல், சுமார் 35 சதவீதத்திற்கு நெருக்கமான வாக்குகளைப் பெற்று அரசியல் விமர்சகர்களையே ஆச்சரியப்படுத்தியது. 1967 முதல் தமிழக அரசியல் பெரும்பாலும் திமுக மற்றும் அதிமுக என்ற இரண்டு கட்சிகளை மையமாகக் கொண்டு இயங்கி வந்தது.
1977-க்குப் பிறகு அதிமுக உருவான நிலையில், தமிழக அரசியல் "திமுக எதிர் அதிமுக" என்ற கட்டமைப்பிலேயே தொடர்ந்து வந்தது. ஆனால், தற்போது அந்த நிலைமை மாறி வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம்
தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், அதிமுக கூட்டணி மேலும் பின்தங்கி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக அதிமுக சந்தித்த தோல்வி அக்கட்சிக்குள் அதிருப்தியை உருவாக்கியது. தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் வெளிப்படையாகத் தொடங்கின. சில எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தது அதிமுக தலைமையை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது அக்கட்சியின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
திமுக
அதேபோல், திமுகவும் தோல்விக்குப் பிறகு கூட்டணி கட்சிகளை இழந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தற்போது தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. இதனால் திமுக அரசியல் ரீதியாக தனிமைப்படும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு பிறகு உருவான அரசியல் சூழலில், காங்கிரஸ் மற்றும் தவெக இடையேயான உறவு மேலும் வலுப்பெற்று வருகிறது. ஆட்சியில் பங்கு பெற்றுள்ள காங்கிரஸ், மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றுள்ளது.
தவெக
இதன் மூலம் தேசிய அளவில் காங்கிரஸுக்கும், தமிழகத்தில் தவெகவுக்கும் பரஸ்பர அரசியல் பலன் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. வருங்கால தேர்தல்களிலும் இந்த கூட்டணி தொடர வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது. இந்த சூழலில்தான் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தை அறிவித்துள்ள அவர், விரைவில் அதனை அரசியல் கட்சியாக மாற்றும் திட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அண்ணாமலைக்கு சமூக வலைதளங்களில் கணிசமான ஆதரவு இருப்பதோடு, இளைஞர்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கும் உள்ளது. அதேபோல் விஜய்க்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரிய ஆதரவு இருப்பதாக தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன. இதனால் எதிர்காலத்தில் தமிழக அரசியல் "விஜய் vs அண்ணாமலை" என்ற போட்டியை நோக்கி நகருமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
அதே நேரத்தில், திமுகவின் அடுத்த தலைமுறை முகமாக உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டு வருகிறார். கருணாநிதி - ஸ்டாலின் தலைமுறை மாற்றம் நடந்ததைப் போல, தற்போது ஸ்டாலின் - உதயநிதி தலைமுறை மாற்றத்திற்கான அரசியல் சூழலை திமுக உருவாக்க முயற்சித்து வருகிறது. ஆனால் விஜயின் எழுச்சியும், தற்போது அண்ணாமலையின் புதிய அரசியல் முயற்சியும், அந்த திட்டத்திற்கு புதிய சவாலாக மாறக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்கும் தலைமுறையை கவரும் போட்டி வருங்கால அரசியலில் முக்கிய பங்காற்றும் என கருதப்படுகிறது.
இளைஞர்கள்
தமிழக தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்காளர்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த தேர்தலில் தவெக பெற்ற வெற்றிக்கு இந்த இரண்டு பிரிவினரின் ஆதரவே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகளின் பாரம்பரிய வாக்கு வங்கிகளை விட, புதிய தலைமுறை வாக்காளர்களை கவரும் திறனே வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறி வருகிறது. இதை விஜய் வெற்றிகரமாக பயன்படுத்தியதாக அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
விஜய் vs யார்?
இந்நிலையில், விஜயின் தலைமையிலான தவெக அரசு எவ்வாறு செயல்படுகிறது, அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் எந்தளவு ஆதரவைப் பெறுகிறது, திமுக மற்றும் அதிமுக தங்களது சரிவில் இருந்து மீண்டு வருகிறதா என்பது போன்றவை அடுத்த சில ஆண்டுகளில் தமிழக அரசியலை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக அமையும். ஒருகாலத்தில் "திமுக vs காங்கிரஸ்", பின்னர் "திமுக vs அதிமுக" என்று நகர்ந்த தமிழக அரசியல், இனி "விஜய் vs யார்?" என்ற புதிய கேள்வியை மையமாகக் கொண்டு நகரத் தொடங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதற்கான பதிலை காலம்தான் சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications