கிளாம்பாக்கத்தை விடுங்க.. போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை.. சென்னையில்
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இன்று சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இன்றைய தின கூட்டத்தில் சுமூக முடிவுகள் எடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்திருக்கிறார்.. அந்த பேட்டியில் போக்குவரத்து தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை குறித்து கூறியிருக்கிறார்.

பேச்சுவார்த்தை : அமைச்சர் பேசியபோது, "போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இன்று 19-ந் தேதி சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் அரசு போக்குவரத்து கழக போக்குவரத்து கழக அதிகாரிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியவரும்.
பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் தென்மாவட்டங்களில் இருந்து மீண்டும் சென்னையை நோக்கி மக்கள் பயணிக்க தொடங்கி உள்ளனர். இதனால் இன்னும் 2 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதாவது ஒரு நாளைக்குஆயிரம் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மக்களின் வசதிக்கேற்ப கூடுதல் பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கிளாம்பாக்கம்: பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. பெங்களூரு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்படுகிற பஸ்கள் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது.
விழுப்புரம், கும்பகோணம், சேலம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் அனைத்தும் படிப்படியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக விரைவில் சிறப்பு கூட்டம் நடத்தி, இந்த மாத இறுதிக்குள் அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். இந்த கூட்டத்தில் புதிய பஸ் நிலைய வசதிகள் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்கள்: மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை மட்டுமின்றி அரசின் பல்வேறு துறைகளிலும் ஓய்வுபெற்றவர்கள் கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதில் நிதிச்சுமையை கணக்கிட்டு தான், கோரிக்கையை நிறைவேற்ற அரசு முடிவு எடுக்கும்.
போக்குவரத்து தொழிலாளர்களின் 6-அம்ச கோரிக்கைகளில் ஏற்கனவே 2 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மற்ற நான்கு கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகள் நிதித்துறை சார்ந்தவை என்பதால் இதை உடன் நிறைவேற்ற முடியாது என்பது அவர்களுக்கே தெரியும்.. ஆனால் அதிமுக அரசியல் காரணங்களுக்காக போராட்டத்தை முன் எடுத்துள்ளனர்.
போராட்டக்காரர்களின் கோரிக்கைகளில் இரண்டு நடைமுறையில் உள்ளன. அரசு நிதி நிலை சரியானவுடன் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்... தமிழகத்தில் பணிக்காலத்தில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள் 800-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
கடிதம்: இதனிடையே, போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் டி.வி.பத்மநாபன் அனுப்பியுள்ள கடிதத்தில், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications