கிளாம்பாக்கத்தில் குழம்பிய மக்கள்.. எங்கே போய் பஸ் ஏறுவது? போனை போட்ட டிரைவர்கள்.. அதிர்ந்த பயணிகள்
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு பயணிகள் ஊருக்கு செல்ல துவங்கிவிட்ட நிலையில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணமாகி வருகிறார்கள்.. பொதுமக்களின் வசதிக்காகவே, தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்திருக்கிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி, 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து மொத்தம் 19,484 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.. இதில் சென்னையை பொறுத்தவரை, கோயம்பேடு, கிளாம்பாக்கம், பூந்தமல்லி, மாதவரம், தாம்பரம் சானடோரியம், கே.கே.நகர் ஆகிய 6 இடங்களில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை: இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகம் நேற்று முன்தினம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், அரசு விரைவு பஸ்களில் ரிசர்வ் செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு வந்து பஸ் ஏற வேண்டும் என்றும், ரிசர்வேஷன் செய்யாத பயணிகள் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு சென்று பஸ் ஏற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், கடைசி நேரத்தில் இந்தஅறிவிப்பு வெளியானதால், பலரும் கவனிக்கவில்லை.. ரிசர்வ் செய்யப்பட்டவர்களில் பலபேர் கிளாம்பாக்கத்துக்கு போகாமல், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு ஏற வந்துவிட்டனர். பெரும்பாலான பயணிகள் கோயம்பேட்டுக்கு வந்ததுடன், தாங்கள் செல்ல வேண்டிய பஸ்கள் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சியானார்கள்.. ரிசர்வ் செய்த பயணிகளும், ரிசர்வ் செய்யாத பயணிகளும் என இரு தரப்பினருமே குழப்பமாகிவிட்டனர்.
எங்கே போய் பஸ் ஏறுவது என்று தெரியாமல் விழித்தபடி நின்றனர்.. பிறகுதான், அங்கிருந்த மற்ற டிரைவர்கள், கண்டக்டர்களிடம் விசாரித்தபோது, கிளாம்பாக்கத்துக்கு சென்று பஸ் ஏற வேண்டும் என்றே தெரியவந்தது.
கிளாம்பாக்கம்: ஆனால், கடைசி நேரத்தில் கிளாம்பாக்கமும் செல்ல முடியாமல் பஸ்களை தவறவிட்டனர். இதனிடையே, ரிசர்வ் செய்யட்டவர்கள் வந்து சேராமல், கிளாம்பாக்கத்தில் பஸ்களை எடுக்காமல் டிரைவர்கள் காத்திருந்தனர்.
பொதுவாக, அரசு விரைவு பஸ் கண்டக்டர்களும் மற்றும் டிரைவர்களும், ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக முன்பதிவு செய்த பயணிகளை போனில் தொடர்பு கொண்டு கொண்டு பஸ் புறப்படும் இடம் குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு பயணிகள் வருவதற்கு, சிறிது நேரம் தாமதமானாலும் காத்திருந்து அவர்களை ஏற்றி செல்ல வேண்டும் என்றும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
போனில் தகவல்: அதன்படியே, ரிசர்வ் செய்த பயணிகளிடம், பஸ் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். கிளாம்பாக்கத்துக்கு வந்து பஸ் ஏறுமாறும் பயணிகளிடம் கேட்டுக் கொண்டனர்.. ஆனால், அந்த நேரத்தில் தாங்கள், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருப்பதாக பதிலளித்திருக்கிறார்கள். இதைக்கேட்டதுமே, டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்..

எப்படியாவது கிளம்பி, உடனே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துவிடுங்கள் என்று சொன்னார்கள்.. ஒருசிலர் கிளம்பி வந்தனர் என்றாலும், பலரால் கிளாம்பாக்கத்துக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. எனினும், பயணிகளை ஏற்றி செல்வதற்காக அதிகபட்சமாக அரை மணி நேரம் வரை பஸ்கள் காத்திருந்துவிட்டு, அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் கிளம்பி சென்றுவிட்டது.
தவித்த பயணிகள்: இதனால், ரிசர்வ் செய்யப்பட்டவர்களால், அந்த பஸ்களில் செல்ல முடியவில்லை. பஸ்களை தவறவிட்ட பயணிகளுக்கு முன்பதிவு செய்த டிக்கெட் கட்டணம் திருப்பி கொடுக்கப் பட்டது.. ஆனாலும், அவர்கள் அதன்பிறகு சொந்த ஊருக்கு செல்செல்ல பஸ் கிடைக்காமல் தவித்தபடியே இருந்தனர்.
இன்று இந்த சிக்கல் எதுவும் ஏற்படாதவாறு, முன்கூட்டியே தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.. அதேபோல, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலும், பஸ்கள் தொடர்பாக அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன..!!












Click it and Unblock the Notifications