பொசுக்குனு வந்த "கலைஞர்".. குண்டை தூக்கி கிளாம்பாக்கம் பக்கம் போட்ட எடப்பாடி.. திமுகவே எதிர்பார்க்கல
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு விவகாரம் குறித்து மீண்டும் தமிழக அரசை விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட திறக்கப்பட்ட நாளில் இருந்தே, பயணிகளுக்கான வசதிகள் முழுமையாக ஏற்படுத்தி தரப்படவில்லை என்றும், இதனால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்தவாறே உள்ளன.

பல மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், பயணிகள் வாக்குவாதத்திலும் போராட்டங்களிலும் ஈடுபடும் அளவுக்கு சென்றுவிட்டனர். இதற்கு அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கிளாம்பாக்கம் விஷயத்தை கையில் எடுத்துள்ளன..
எடப்பாடி: அந்தவகையில், நேற்று முன்தினமும், நேற்றைய தினமும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இதுகுறித்து கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
"கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தினுள் உணவக வசதி, பணம் எடுக்கும் ஏடிம் மிஷின் வசதி, டீ, காபி, பால் விற்பனை நிலையங்கள், தண்ணீர் வசதி போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து தராமல், அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தொடங்கிய நாள்முதல் இன்றுவரை, தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளின் கோபத்தை இந்த விடியா திமுக அரசு சம்பாதித்து கொண்டிருக்கிறது.
வசதிகள்: மக்கள் ஓரளவுக்குத்தான் பொறுமை காப்பார்கள். 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்று முதுமொழி ஒன்று உண்டு. எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் நகரப் பேருந்துகளை இயக்கியும், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தி, பயணிகள் மன நிறைவுடன் பயணம் மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது.. தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்ப்பட்டது. அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு உடனே வாசித்தார். அவையில் உரை நிகழ்த்தப்பட்ட பிறகு, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னர் ஆளுநர் ரவி அவையிலிருந்து வெளியேறினார்.
பசப்பு வார்த்தைகள்: இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கிளாம்பாக்கம் விவகாரத்தை சீண்டி பேட்டி தந்துள்ளார். -
எடப்பாடி பேசும்போது, "எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில், சபாநாயகர் அவை மரபை கடைபிடிப்பார் என நம்புகிறோம்.. சட்டசபை தலைவர் நடுநிலையாக செயல்படவேண்டும், ஆனால் அவரே ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார். தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக கவர்னர் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
திட்டங்கள்: இந்த அரசின் கொள்கைகளை விளக்கும் உரையாக இல்லை. எனவே இந்த விடியா ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டாது என்பதை நிரூபிக்கும் வகையில்தான் இந்த ஆளுநர் உரை உள்ளது. எந்தவிதமான புதிய மக்கள் நலத் திட்டங்களையும் அறிவிக்காத இந்த அரசு, பசப்பு வார்த்தை ஜாலங்களை வாரி இறைத்திருக்கின்றது.
என்னுடைய ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்துவிட்டு தங்கள் முதுகில் தாங்களே தட்டிக் கொள்வது மட்டுமல்லாமல். ஆளுநரைக் கொண்டு தடவிக் கொடுக்கச் செய்வது வெட்கக் கேடானது. சுருக்கமாக, திமுக அரசு தயாரித்துள்ள ஆளுநர் உரை, உப்பு சப்பில்லாத ஊசிப் போன உணவுப் பண்டம்.
அடிப்படை வசதி: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அழகாக வடிவமைத்து திட்டமிட்டிருந்தோம். திமுக அரசு அவசர அவசரமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்ததால் அடிப்படை வசதிகள் இல்லை.. ஆனால், போக்குவரத்து துறை அமைச்சர் இதையெல்லாம் மூடி மறைக்கிறார்..
எங்களுக்கு கிடைக்கப்பட்ட ஒரு செய்தி என்னவென்றால், மறைந்த முதல்வர் கலைஞர் பெயரை வைக்க வேண்டும் என்பதற்காக, அவசர அவசரமாக இந்த பஸ் ஸ்டாண்டை திறந்திருப்பதாக தெரிகிறது. ஏனென்றால், சில பேர் இதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றுவிடுவார்கள் என்பதால், இப்படி அவசரமாக திறப்பதாக எங்களுக்கு செய்தி கிடைக்கிறது.
அற்புதம்: ஆனால், உண்மையிலேயே அது அற்புதமான பேருந்து நிலையம்.. மக்களுக்கு உபயோகப்படும் வகையில், அவ்வளவு அழகாக வடிவமைத்து, பல அற்புதமான திட்டத்தை நாங்கள் தந்தோம். அதை செய்ய தவறிவிட்டாங்க இந்த அரசு..
இதனால், மக்கள் கடுமையாக அவதிப்படுகிறார்கள். அந்த பேருந்து நிலையம் திறந்து ஒரு மாசம் ஆகுது.. அதுக்குள்ளவாவது அதை சரி செய்திருக்கணுமா? வேணாமா? கிளாம்பாக்கத்துக்கு போறதுக்கு போக்குவரத்து வசதிகளும் இல்லை.. சாக்கு போக்கு சொல்லி தப்பிக்கதான் பார்க்கிறார்களே, தவிர சீர் செய்ய ஒன்றும் செய்யவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக அரசு: கிளாம்பாக்கம் விவகாரத்தில் போராட்டம் நடத்தப்போவதாக தமிழக பாஜக ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில், இதே கிளாம்பாக்கம் விவகாரத்தை அதிமுகவும் சீரியஸாக கையில் எடுத்துள்ளது. அந்தவகையில், திமுகவுக்கு நெருக்கடிகள் கூடிக்கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications