கோடநாடு கேஸில் இருந்து தப்ப பூஜை- ஈபிஎஸ் குடும்பத்துக்கு அய்யாவாடி கோவில் நிர்வாகம் திடீர் மறுப்பு
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து தப்பிக்க கும்பகோணம் அய்யாவாடி கோவிலில் நேற்று அமாவாசை நாளில் மீண்டும் பூஜை செய்ய மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவலை காரணம் காட்டி அய்யாவாடி கோவில் நிர்வாகம் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துக்கு திடீரென மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதகை கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் படு கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.
இது தொடர்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்த சயான், மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தின்ராய், திபு, சதீசன், சம்சீர்அலி, பிஜின், சந்தோஷ்சாமி, உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

கோடநாடு வழக்கில் மர்ம மரணங்கள்
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜை போலீசார் தேடினர். ஆனால் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி சேலத்தில் நடந்த மர்மமான சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். மேலும், கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக பணிபுரிந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் வழக்கில் தொடர்புடைய சயான் குடும்பம் கார்விபத்தில் சிக்கியது. இதில் சயான் மனைவி, மகள் உயிரிழந்தனர். இந்த மர்ம மரணங்கள் கோடநாடு வழக்கில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீண்டும் கோடநாடு வழக்கு
இந்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்தில் இருந்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. இவ்வழக்கில் ஜாமீனில் உள்ள சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ், பிஜின் குட்டி உள்ளிட்டோரிடம் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி?
இன்னொருபுறம் தம்மை இந்த வழக்கில் சிக்க வைக்க சதி நடப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சட்டசபையிலும் அதிமுகவினர் பிரச்சனையை கிளப்பினர். ஆனால் சட்டம் தன் கடமையை செய்யும்; நீதிமன்ற உத்தரவுப்படியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. இவ்வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video

கும்பகோணம் பூஜை
இந்த நிலையில்தான் ஜாதகரீதியாக வருகிற டிசம்பர் வரை தங்களுக்கு நேரம் சரியில்லை என கடந்த மாதம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியிடம் அவரது ஆஸ்தான ஜோதிடர் ஒருவர் சொல்லியிருந்தார். அதற்கு பரிகாரமாக, பிரத்தியங்கராதேவி (காளி கோவில்) கோவிலில் ஒவ்வொரு அமாவாசைக்கும் சில சிறப்பு பூஜைகள் செய்து வந்தால் பலன் கிடைக்கும் என ஜோதிடர்கள் சொல்லியிருந்தனர். அதனையேற்று, கடந்த மாதம் அமாவாசை அன்று கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி கிராமத்தில் இருக்கும் பிரத்தியங்கராதேவி கோவில்லுக்கு எடப்பாடி பழனிசாமியின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் சென்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த நிலையிலும், கோவில் அர்ச்சகர்கள், வந்திருந்தவர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் சிறப்பு பூஜைகள் செய்து கொடுத்தனர். கும்பகோணம் அய்யாவாடி கோவிலில் 4 மணி நேரம் நடந்த அந்த பூஜையின் போது வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பூஜைகள் சிறப்பாக நடந்து முடிந்த மகிழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் சேலத்துக்கு கிளம்பிச்சென்றனர்.

மீண்டும் பூஜைக்கு மறுப்பு
எடப்பாடிக்கு எதிராக சுழலும் அரசியல் நெருக்கடிகள், கொடநாடு பிரச்சனைகள் உள்ளிட்டவைகளை வைத்தே அந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரகசியமாக செய்து கவனித்துக் கொண்டவர் மணல் மாஃபியாக்களை சேர்ந்த ஒருவர். இந்த நிலையில், நேற்று அமாவாசை. அதே பூஜையை நேற்றும் அய்யாவாடி கிராமத்தில் நிறைவேற்ற எடப்பாடி மனைவி விரும்பியுள்ளார். ஆனால், அர்ச்சகர்கள் இந்த முறை ஒத்துழைக்கவில்லையாம். அதனால், பூஜை குறித்து ஜோதிடர்களிடம் கேட்டிருக்கிறார்கள். வீட்டிலேயே அந்த பூஜையை நடத்துங்கள்; கோவிலுக்கு சென்றுதான் நடத்த வேண்டுமென்பதில்லை என அறிவுறுத்தியதன்படி இன்று சொந்த வீட்டிலேயே அந்த பூஜை நடந்து முடிந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications