அதிமுகவினர் அமளி: நேற்று சட்டசபையில் உண்மையில் நடந்தது என்ன? சபாநாயகர் அப்பாவு விளக்கம்
சென்னை: நேற்று சட்டசபையில் கோடநாடு வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் நேற்று சட்டசபையில் நடந்தது என்ன, அதிமுகவினரின் வெளிநடப்பிற்கு முன் என்ன நடந்தது என்று சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசியலில் இந்த கொலை வழக்கு மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது. முக்கியமான சயன் உள்ளிட்டவர்களிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்த தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கோடநாடு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டனர்.

வெளியேறினார்கள்
இதையடுத்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர் சட்டசபைக்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். பொய் வழக்கு போடாதே என்ற பதாகைகளுடன் அவைக்கு வெளியே அதிமுகவினர் தர்ணா செய்து வந்தனர். இந்த விசாரணை அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது. வழக்கு முடியும் நிலையில் இருக்கிறது. இப்போது போய் இதில் விசாரணை நடத்துகிறார்கள, எங்களுக்கு எதிராக செய்யப்படும் சதி இது, அதிமுகவினரை ஒடுக்க நினைக்கிறார்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுகவினர் மக்களை திசை திருப்புகிறார்கள், என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பேட்டி அளித்து இருந்தனர்.

துரைமுருகன்
இந்த நிலையில் நேற்றைய சட்டசபை நிகழ்வுகள் குறித்து இன்று காலை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் பேசினார். அதில், அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம் குறித்து நேற்று நிறைய செய்திகள் வந்தது. நாங்கள் அதிமுகவினரை வெளியேற்றியதாக சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. அவர்களாக வெளியேறினார்கள். ஆனால் நாங்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்திகளை வெளியிடும் போது பத்திரிகைகள் கவனம் செலுத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசி இருந்தார்.

விளக்கம்
துரைமுருகனின் இந்த பேச்சை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நேற்று சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளித்தார். அதில், மக்களுக்கான பிரச்னைகளை பேச வேண்டிய அவையில், தனிப்பட்ட பிரச்னையை எழுப்பக் கூடாது. சட்டசபை என்பது மக்களின் குறைகளை, அவர்களின் பிரச்சனைகளை பேசும் இடம். இங்கு தனிப்பட்ட விஷயங்களை பேசி கூச்சல் செய்ய கூடாது. ஆனாலும் கூட நான் அதிமுகவினரை அனுமதித்தேன். அவர்களின் கருத்துக்களை தெரிவிக்க இடம் கொடுத்தேன். ஆனால், அதிமுக உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி கூச்சலிட்டனர்.

அதிமுக
என்னுடைய அனுமதி பெறாமல் அவையில் பதாகைகள் ஏந்திய நிலையில் கூச்சல் செய்தனர். அவைக்கு எதிராக செயல்பட்டவர்கள், அமளியில் ஈடுபட்ட பின் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர், என்று சபாநாயகர் அப்பாவு நேற்று நடந்த சபை நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவினர் இன்று சட்டசபைக்கு வரவில்லை. இரண்டு நாட்கள் அவை நிகழ்வுகளை அவர்கள் புறக்கணிக்கும் காரணத்தால் இன்றும் அவர்கள் விவாதத்தில் பங்கேற்கவில்லை.












Click it and Unblock the Notifications