‘கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் உள்ள இடத்தில் லுலு மால்’ என்பது முற்றிலும் வதந்தி.. தமிழக அரசு விளக்கம்!
சென்னை: கோயம்பேடு பேருந்து முனையம் உள்ள இடத்தில் லுலு மால் அமைக்க நிலம் தரப் போவதாக பரவி வருவது வதந்தி என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு தெரிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கோயம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்துக்கு புறநகர் பேருந்து நிலையத்தை மாற்றியுள்ளது தமிழக அரசு. கோயம்பேடு பேருந்து நிலையத்தின் மற்றொரு பகுதியை இந்த ஆண்டு இறுதிக்குள் கூத்தம்பாக்கத்திற்கு மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது தமிழக அரசு. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை திருமழிசைக்கு நிரந்தரமாக மாற்றவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.

இதற்கிடையே கோயம்பேட்டில் பெரிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். எனினும், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தில் எந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
அதற்குள், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தை லூலூ மால் அமைக்க வழங்க உள்ளதாக தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவின. அபுதாபியை தலைமையிடமாக கொண்ட லுலு மால் நிறுவனத்துடன் தமிழக அரசு கடந்த 2022ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றபோது இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எனவே கோயம்பேடு இடத்தை அந்த நிறுவனத்துக்கு வழங்க தமிழக அரசுக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தை லுலு குரூப் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கோயம்பேடு நிலத்தை லுலு மாலுக்கு வழங்க உள்ளதாக பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என தமிழக அரசு மறுத்துள்ளது.
தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு வெளியிட்டுள்ள தகவலின்படி, "கோயம்பேடு பேருந்து முனையம் இருந்த இடத்தில் லுலு மால் அமைக்க நிலம் தரப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது. அடிப்படை ஆதாரமற்ற இந்த பொய்த் தகவலை உண்மை என நம்பி அரசியல் கட்சியினரும், சில தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய வீட்டு வசதித்துறை செயலர் சமயமூர்த்தி, மேற்கண்ட தகவல் முற்றிலும் தவறானது, சித்தரிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார். அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச் செயலாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications