தமிழகம் வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர்.. இரவுக்குள் பூண்டி ஏரியை அடையும்! கோடையில் சென்னைக்கு நிம்மதி
சென்னை: ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழகத்திற்கு வந்தடைந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பே கிருஷ்ணா நதி நீர் தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று தாமதமாக இன்று வந்தடைந்தது. இன்று இரவுக்குள் சென்னை பூண்டி ஏரியை அடையும் என அதிகாரிகள் கூறினர்.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டால் தண்ணீர் வற்றி குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உண்டாகும். இதனை தவிர்க்கும் விதமாக தெலுங்கு - கங்கை திட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் படி ஆந்திர அரசு தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி நீரை வழங்கி வருகிறது.

அந்த வகையில் ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து 12 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டு அது சென்னை பூண்டியில் உள்ள ஏரிக்கு வந்து சேர்கிறது. நடப்பு ஆண்டிற்கான தண்ணீரை ஆந்திர அரசு திறந்துவிடுவதாக கூறியது. அதன்படி ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் இன்று காலையில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை வந்தடைந்தது.
கண்டலேறு அணையில் இருந்து சுமார் 152 கிலோமீட்டர் பயணித்த இந்த நீர், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை எட்டியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பே தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்று தாமதமாகவே வந்து சேர்ந்துள்ளது. தற்போது, தமிழக எல்லையில் வினாடிக்கு 43 கனஅடி நீர் வரத்து பதிவாகி வருகிறது. இன்று இரவுக்குள் கிருஷ்ணா நதி நீர் சென்னை பூண்டி ஏரியை அடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications