மே 1 அன்று அவசியம் நீங்க போகனும்! கதர்ச்சட்டை நிர்வாகிகளுக்கு மேலிடம் போட்டுள்ள அன்புக்கட்டளை!
சென்னை: மே 1-ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் மேலிடம் அறிவுறித்தியுள்ளது.
பஞ்சாயத்துராஜ் ஆட்சிமுறையின் பொதுக்குழுவாகவும், அதிகாரமிக்க அமைப்பாகவும் கிராமசபை விளங்குவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மேலும் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது தான் பஞ்சாயத்துராஜ் நகர்பாலிகா ஆட்சிமுறை அமலுக்கு வந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருப்பதாவது;

பஞ்சாயத்துராஜ்
ராஜீவ்காந்தி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பலதரப்பட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளோடு கலந்து பேசி, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். அதன் பலனாக, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு பஞ்சாயத்துராஜ் நகர்பாலிகா ஆட்சிமுறை அமலுக்கு வந்தது.

காங்கிரஸ்
பஞ்சாயத்துராஜ் ஆட்சிமுறையின் பொதுக்குழுவாகவும், அதிகாரமிக்க அமைப்பாகவும் விளங்குவது கிராமசபை. இங்கு எடுக்கின்ற முடிவின்படிதான் கிராம பஞ்சாயத்து செயல்பட முடியும். கிராம பஞ்சாயத்துகளுக்கு அடித்தளமாக விளங்குவது கிராமசபைகள். ஒவ்வொரு ஆண்டும் நான்கு நாட்கள் நடைபெற்று வந்த கிராமசபை கூட்டங்களை இனிவரும் காலங்களில் கூடுதலாக இரண்டு நாட்கள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன்.

கிராமசபைக் கூட்டங்கள்
கிராம சபைகள் தான் பஞ்சாயத்துராஜ் அமைப்பின் அடித்தளம் என்பதை இந்த அறிவிப்பு உறுதி செய்கிறது. எனவே, வருகிற மே1 ஆம் தேதி தொழிலாளர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் தமிழகத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். மக்கள் பங்கேற்கிற ஜனநாயகமான உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தது.

அவசியம் பங்கேற்கனும்
ஆனால், ஊர்ப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டு ஜனநாயகம் உறுதி செய்யப்பட்ட அமைப்புகளாக பஞ்சாயத்து ராஜ் விளங்குகிறது. அதன் முதுகெலும்பாக இருந்து முடிவெடுக்கிற அதிகாரம் பெற்ற கிராமசபை கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்பான ராஜிவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் உறுப்பினர்கள் இதனை ஒருங்கிணைத்து உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications