குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் நவம்பரில் திறப்பு.. அமைச்சர் சேகர்பாபு கொடுத்த அப்டேட்!
சென்னை: சென்னையில் கட்டப்பட்டு வரும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பணிகள் 95 சதவிகிதம் முடிவடைந்துள்ள நிலையில், எஞ்சிய பணிகள் முடிக்கப்பட்டு வரும் நவம்பர் மாதம் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். குத்தம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, மழை பெய்யவில்லை என்றால் நிச்சயமாக நவம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என்று உறுதி தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளால் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, கடந்தாண்டு திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 90 சதவிகித பேருந்துகளும், மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 10 சதவிகித அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
அதேபோல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில பேருந்துகள், மாநகர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயங்குகின்றன. இசிஆர் நோக்கி செல்லும் பேருந்துகள், பெங்களூரு செல்லும் பேருந்துகள் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து இயங்குகிறது.
ரூ.414 கோடி செலவு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்காக சென்னையை அடுத்த குத்தம்பாக்கத்தில் ரூ.414 கோடி செலவில் 25 ஏக்கர் பரப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்த முடியும்.
என்னென்ன வசதிகள்?
மாநகர பேருந்துகள், அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் சென்று வர தனித்தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நிறுத்தம், 41 கடைகள், 8 டிக்கெட் கவுன்டர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி கழிவறைகள் மற்றும் 1,800 இருசக்கர வாகனங்கள் மற்றும் 250 கார்கள் நிறுத்தும் வசதியுடன், மாநிலத்தின் முதல் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.
5% பணிகள்
அதேபோல் போர்டுகள் வைப்பது, டிஜிட்டல் போர்டுகள், இதர பணிகளான மின்சார இணைப்பு உள்ளிட்ட 5 சதவிகித பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக பெங்களூரு, தர்மபுரி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற வடக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
இந்த பேருந்து நிலையத்தின் பணிகள் விரைவாக நடந்து வரும் நிலையில், அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் சேகர்பாபு பேசுகையில், 95 சதவிகித பணிகள் முடிவடைந்துவிட்டது. இதர பணிகள் மழை பெய்யவில்லை என்றால் விரைவாக முடிக்க முடியும்.
பூந்தமல்லி பேருந்து நிலையம்
ஒருவேளை மழை வரவில்லை என்றால் நவம்பர் மாதம் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் பட்சத்தில், பூந்தமல்லியில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும். சுமார் 150 பேருந்துகள் குத்தம்பாக்கத்திற்கு இணைக்கப்பட்டு, போக்குவரத்து மேம்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications