வழுக்கி விழுந்து ஐசியூவில் எல்.கணேசன்? தலையில் காயமா? இப்போது எப்படி இருக்கிறார் பாஜக மூத்த தலைவர்?
சென்னை: பாஜக மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டதாக தெரிகிறது.. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பு வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்தவர் இல.கணேசன்.. தற்போது இவருக்கு 80 வயதாகிறது..

பாஜக சீனியர் தலைவர்
பாஜவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இல.கணேசன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். சமீபத்தில்தான் இல.கணேசன் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார்.
17வது மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன், தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராக உள்ளார்.. சென்னையில் இவரது வீடு உள்ளதால் அடிக்கடி சென்னை வந்து செல்வது வழக்கமாகும். அந்த வகையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டுக்கு சமீபத்தில் வந்திருந்தார்..
நேற்றைய தினம் அவரது வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டதாகவும், இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஐசியூவில் சிகிச்சை
அங்கு அவருக்கு ஐசியு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு தலையில் அடிபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில, நரம்பியல், இதயவியல் உட்பட பல்நோக்கு மருத்துவ குழுவினர் தொடர் சிகிச்சையை தந்து வருகிறார்கள்.
எனினும், இல. கணேசன் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. எனினும். அவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும் என்று தெரிகிறது.
விரைவில் நலம்பெற வேண்டும்
இந்நிலையில், இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சோஷியல் மீடியாவில் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார்.
அதில், நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மிகுந்த கவலை கொள்கிறேன். அவர் விரைவில் நலம்பெற்று, மீண்டும் நல்ல உடல்நிலைக்கு திரும்ப வேண்டும் என்று விழைகிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்..












Click it and Unblock the Notifications