நிலத்தின் சந்தை மதிப்பைவிட வழிகாட்டி மதிப்பு குறைவு.. 30% வழிகாட்டி மதிப்பு உயர்வா? பதிவுத்துறை செம
சென்னை: பத்திரப்பதிவுத்துறை மூலம் நிலம் விற்பனை, குத்தகை ஒப்பந்தம் உட்பட பல்வேறு ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவைகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணங்களும் வசூல் செய்யப்படுகின்றன. தமிழகம் முழுதும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமின்றி, வழிகாட்டி மதிப்புகள், 30 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் ஒன்று பரவி வந்து பரபரப்பை கிளப்பியது. இதன் உண்மைத்தன்மையும் தெரியாததால், நிலம் வாங்குவோர்களும் குழப்பத்துக்கு ஆளானார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், தமிழக அரசு முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
வழிகாட்டி மதிப்பு என்பது தமிழக மாநில அரசால் நிர்ணயிக்கப்படும் ஒரு சொத்தின் குறைந்தபட்ச மதிப்பாகும், இது பதிவுத்துறை நிர்ணயிக்கும் நிலங்களின் மதிப்பிடப்பட்ட சந்தை மதிப்பானது, சொத்து பரிவர்த்தனைகளின்போது இந்த வழிகாட்டி மதிப்பு அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.

நிலங்களுக்கான சர்வே எண், தெரு வாரியாக வழிகாட்டி மதிப்புகளை, பதிவுத்துறை நிர்ணயிக்கிறது. இந்த மதிப்புகள் அடிப்படையில், சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யப்படும். அரசு துறைகளால், இந்த வழிகாட்டி மதிப்புகள் தான் ஆதாரமாக பார்க்கப்படுகின்றன.
பதிவுத்துறை அலுவலகங்கள்
சமீபகாலமாகவே, தமிழகம் முழுவதும் பதிவுத்துறை அலுவலகங்களில் பதிவுத்துறையின் இணையதளத்தில் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பை விட கூடுதலாக மேலிடத்து வாய்மொழி உத்தரவு என்கின்ற பெயரில் 30% உயர்த்தி பதிவு செய்ய வலியுறுத்துவதாக சலசலப்புகள் ஆங்காங்கே கிளம்பின.
இதுகுறித்து பெயிரா எனப்படும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை சமீபத்தில் எழுதியிருந்தார்.
30 சதவீதம் நில வழிகாட்டி மதிப்பு
அந்த கடிதத்தில், "அடிப்படை காரணமேயின்றி 30% உயர்த்தி பதிவு செய்ய வலியுறுத்துவதன் காரணமாக வாங்குபவர்களின் சக்தி குறைவதுடன், வாங்குபவர்கள் அதிகப்படியான தங்களது கணக்கில் காட்டப்படும் பணத்திற்க்கு நிகராக சந்தை மதிப்பினை விட கூடுதலாக காண்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அதேபோல் விற்பவர்களும் அவர்கள் விற்கக்கூடிய தொகைக்கு நிகராக மூலதன ஆதாய வரி (Capital Gain Tax) செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றார்கள்.
முத்திரை தீர்வை + பதிவு கட்டணம்
மேலும் தற்பொழுது பதிவுத்துறைக்கு செலுத்தப்படுகின்ற முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்திற்கு கூடுதலாக 30% செலுத்த நேரிடும். இதனால் பொதுமக்களுக்கு இடையூறும், மிகப்பெரிய அழுத்தமும் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் சொத்துக்களை விற்க முடியாத சூழலுக்கு தள்ளப்படும் பெரும் அபாயம் ஏற்படுவதன் காரணமாக பொருளாதார இழப்புக்கு உள்ளாகும் ஆபத்தையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.
இத்தகைய பதிவுத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், ரியல் எஸ்டேட் துறையும் அதளபாதாளத்திற்கு தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளதால், இப்பிரச்சனையை களைவதற்கான உரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
நிலத்தின் வழிகாட்டி மதிப்பு
பதிவுத்துறையின் இணையதளத்தில் நிர்ணயித்திருக்கின்ற வழிகாட்டி மதிப்பிற்கு நிகராக பொதுமக்கள் பதிவு செய்யும் வண்ணம் வழிவகை செய்து, பதிவுத்துறை இதனை ஆமோதித்து பதிவு செய்வதை உறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று டாக்டர் ஹென்றி அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.
நஞ்சை, புஞ்சை நிலங்கள்
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய தினம், அதிமுக உறுப்பினர் தங்கமணி, வாய்மொழி உத்தரவாக, நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம்? என்று அவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் மூர்த்தி பதிலளிக்கும்போது, "கிராமப்புறங்கள், நஞ்சை, புஞ்சை நிலங்களில், எந்த பிரச்சனையும் இல்லை. பதிவின்போது ஒரு சில இடங்களில் தவறு நடக்கிறது. நகரங்கள், நகரங்களையொட்டிய பகுதிகளில் சந்தை மதிப்பு அதிகம் இருந்தால் அங்கு குறைவாக பதிவுக் கட்டணம் வாங்க முடியாது. அதுபோன்ற இடங்களில் 30 சதவீதம் அதிகமாக வாங்கியிருப்பார்கள்..
நிலத்தின் சந்தை மதிப்பை விட, 60 முதல் 70 சதவீதம் வழிகாட்டி மதிப்பு குறைவாகவே உள்ளது. எங்குமே 30 சதவீதம் உயர்த்தப்படவில்லை. அப்படி எங்காவது வாங்கப்பட்டதாக ஆதாரத்துடன் தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்..
பத்திரப்பதிவு துறை அமைச்சரின் இந்த பதிலானது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்குமே பெருத்த நிம்மதியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications