செட்டில்மென்ட் பணியிடங்கள் நிரப்ப வனத்துறைக்கு அனுமதி.. தமிழக அரசு அரசாணை.. பலே நில அளவீடு பணிகள்
சென்னை: வனத்துறையில் நில நிர்வாகம் சார்ந்த, செட்டில்மென்ட் பணியிடங்களை, பிற துறை அல்லது வெளியாட்கள் வாயிலாக நிரப்புவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் பிறப்பித்துள்ளார்.
வனங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.. அதேபோல, வன விலங்குகளின் நடமாட்டம், விலங்குகள் வேட்டையாடுவதை தடுப்பது உள்ளிட்ட பணிகளுக்காக வனக் காவலர்கள், வனவர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆனால், அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வன நிலங்களை வனச்சரக ரீதியாக வரையறுப்பதிலும், மாநில வன எல்லைகளை துல்லியமாக வரையறுப்பதிலும் வனத்துறைக்கு பெரும் சிரமம் இருந்து வருகிறது.
ஜிபிஎஸ் கருவிகள்: அதாவது, விலங்குகள் ஏதாவது உயிரிழந்து விட்டாலோ அல்லது விலங்குகளைக் கணக்கெடுக்கும்போது குறிப்பிட்ட எல்லையைக் கணக்கிட்டு பிரச்சனையை சரி செய்வதிலும் பெரும் சிரமம் இருந்து வருகிறது. அதனால்தான், டிஜிட்டல் முறையில் ஜிபிஎஸ் கருவியைக் கொண்டு துல்லியமாக வனப் பகுதிகளை வரையறுக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
அதேபோல, வனப்பகுதிகளில் நில அளவை மற்றும் நில நிர்வாகம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக, நெல்லை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தேனி, திருச்சி, திண்டுக்கல், நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில், வன நில செட்டில்மென்ட் பிரிவுகள் உள்ளன.
தற்காலிக பணியாளர்கள்: இங்கு நில நிர்வாக பணிகளுக்காக, சிறப்பு தாசில்தார், வரைவாளர், நில அளவை உதவி ஆய்வாளர், சிறப்பு வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம், 89 பணியிடங்கள் உள்ள நிலையில், இவைகளில் 4 பணியிடங்களில் மட்டுமே வனத்துறை அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். மீதமுள்ள 85 பணியிடங்கள், நில நிர்வாகத்துறையுடன் கலந்து பேசி, அயல் பணி அடிப்படையில், தற்காலிகமாக பணியாளர்கள் அங்கிருந்து பெறப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், நில நிர்வாக செட்டில்மென்ட் பிரிவுகளில் உள்ள பணியிடங்களின் அனுமதி காலம் ஏற்கனவே முடிவடைந்ததால், புதிய நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பணியிடங்களின் அனுமதி காலத்தை, 2025 மார்ச் வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வனத்துறை கோரிக்கை அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்: அதேபோல, நில நிர்வாக செட்டில்மென்ட் பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை, வருவாய் துறை வாயிலாக அல்லது வெளியாட்கள் வாயிலாக நிரப்பவும், அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அந்தந்த மாவட்ட கலெக்டருடன் வனத்துறை அதிகாரிகள் கலந்து பேசி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் பி.செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications