மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழிப்போர் தியாகிகள் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் மொழிக்காக தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் இன்று அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.
இந்தி திணிப்பு போராட்டங்களில் பங்கேற்று உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வீர வணக்கம் செலுத்துவது வழக்கம்.
அந்தவகையில் இன்று மாநிலம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
இதுவே இந்தியா.. பாஜகவின் இந்தி பெயர்களை எதிர்க்கிறோம்! தமிழை விட மாட்டோம் -நெத்தியடி கொடுத்த முரசொலி

மொழிப்போர் தியாகிகள் தினம்
இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழ் மொழியைக் காக்க உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாட்டில் நடந்த 1965-ஆம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. பல உயிர்களை பலி கொண்ட அந்தப் போராட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திமுக அரியணை ஏற இந்தப் போராட்டம் திருப்புமுனையாக அமைந்தது.

ஜனவரி 25
1965 ஜனவரி 25ஆம் தேதி திமுக சார்பில் துக்க நாளாக அறிவிக்கப்பட்டது. அன்று நடைபெற்ற போராட்டம் கடுமையாகத் தீவிரமடைந்தது. அடுத்தடுத்த நாட்களில் போராளிகள் மொழிக்காகத் தீக்குளித்து மாண்டனர். இந்த போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

வரலாற்றில் திருப்புமுனை
இந்திய வரலாற்றிலும், தமிழக அரசியல் வரலாற்றிலும் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இந்த மொழிப்போர். தமிழ்நாட்டில் அதுவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டது மொழிப்போர் தான். இந்தி திணிப்புக்கு எதிரான அந்த மொழிப்போரே, காங்கிரஸ் ஆட்சியை அகற்றி, அதன்பிறகு திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சிக்கு அடித்தளமிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தி திணிப்பு எதிர்ப்பு
மத்திய அரசு மொழித் திணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போதெல்லாம் மொழிப்போரே நினைவுகூரப்படுகிறது. குறிப்பாக, பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, பல்வேறு வடிவங்களில் மொழித் திணிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதை திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இப்படியான சூழலில் மொழிப்போர் ஈகியர்களின் தியாகத்தைப் போற்றுவதிலும், தமிழ் மொழியைக் காப்பதிலும் உறுதியாக இருக்கிறது தமிழ்நாடு.

ஸ்டாலின் - எடப்பாடி
தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் திமுக சார்பில் இன்று நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதேபோல, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மரியாதை
சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகிகள் படத்தை பார்வையிட்ட பிறகு, திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன், சென்னை மேயர் பிரியா மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.